என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • விராட் கோலி 1 இடம் பின்தங்கி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார்.

    ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையை இன்று ஐசிசி-யை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10- இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அதன்படி 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 1 இடம் பின் தங்கி 5-வது இடத்திலும் ஷ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற நியூசிலாந்து வீரர் 14 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்
    • பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    இந்த வெற்றியை இந்திய வீரர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யா அவரது ஸ்டைலில் கொண்டாடினார். பிட்ச் மத்தியில் கோப்பையை வைத்து பாண்ட்யா இரு கைகளையும் கோப்பையை நோக்கி காட்டுவது போல ஸ்டைலாக போஸ் கொடுப்பார்.

    2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற போதும் அவரது தனித்துவமான ஸ்டைலில் போஸ் கொடுத்தார். அதே மாதிரி இந்த முறையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். இந்தப் பதிவு தற்போது 16 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
    • இந்த தொடரில் விளையாடியதில் மகிழ்ச்சி.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2002, 2013-ம் ஆண்டுகளில் கைப்பற்றி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் இந்தியா வென்ற 7-வது கோப்பை இதுவாகும்.

    இந்நிலையில் இந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்தியாவிற்கு என் வாழ்த்துகள். இந்த தொடரில் விளையாடியதில் மகிழ்ச்சி. நியூசிலாந்து அணியில் இடம்பெற்றதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

    என ரச்சின் கூறினார்.

    4 போட்டிகளில் விளையாடிய ரச்சின், 263 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிஷப்பண்டின் தங்கை சாக்‌ஷி, தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான அங்கித் சவுத்ரியை மணக்கிறார்.
    • திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் ஐ.பி.எல். பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி நேற்று கிளம்பி சென்றார்.

    டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்டின் தங்கை சாக்ஷி, தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான அங்கித் சவுத்ரியை மணக்கிறார். இவர்களது திருமணம் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. 

    இதையொட்டி திருமண சடங்குகள் நேற்று தொடங்கியது. திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் ஐ.பி.எல். பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி நேற்று கிளம்பி சென்றார். இதே போல் சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ரானா, ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தோனி, சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ரானா, ரவி சாஸ்திரி ஆகியோர் குத்தாட்டம் போட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் ரிஷப் பண்டின் தங்கை திருமணத்துக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலாவது டெஸ்ட் போட்டி 1877-ம் ஆண்டில் நடந்தது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டு கால போட்டி அதே மெல்போர்னில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 1977-ம் ஆண்டு நடந்தது.

    மெல்போர்ன்:

    சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலாவது டெஸ்ட் போட்டி 1877-ம் ஆண்டில் நடந்தது. மெல்போர்னில் நடந்த அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டு கால போட்டி அதே மெல்போர்னில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 1977-ம் ஆண்டு நடந்தது. இவ்விரு டெஸ்டிலும் ஆஸ்திரேலியா தலா 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் 150-வது ஆண்டு கால கொண்டாட்டம் 2027-ம் ஆண்டில் தொடங்குகிறது. இதையொட்டி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் சிறப்பு டெஸ்ட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. 2027-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மெல்போர்னில் இந்த டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் நேற்று அறிவித்தார்.

    ஆஸ்திரேலிய மைதானங்களில் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகள் பகல்-இரவாக பிங்க் பந்தில் நடந்துள்ளது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் பிங்க் பந்து டெஸ்ட் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
    • அது தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

    இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த ஒருவர் கூட மேடையில் இடம்பெறவில்லை என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் போனதற்கு "விதிமுறைகள்" தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் அளிக்கப்பட்டுள்ளது. "எங்களுக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது குறித்து ஐ.சி.சி.யிடம் புகார் தெரிவித்து இருக்கிறோம்," என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

    அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புகாருக்கு ஐ.சி.சி. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி உள்ளது. "பாக். கிரிக்கெட் வாரிய மான்டரியன்கள் பார்த்தால், ஐ.சி.சி. சி.இ.ஓ. ஜெஃப் அலார்டைஸ் கூட மேடையில் ஏறவில்லை. இதற்கான காரணம் விதிமுறைகள் தான்," என்று ஐ.சி.சி. சார்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • மும்பை அணி 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்தது.

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பார்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 20-வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 53, ரிச்சா கோஷ் 36, பெர்ரி 49 ரன்கள் அடித்துள்ளனர்.

    இதையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை களமிறங்கியது.

    இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த போட்டி ஆர்சிபி அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.
    • பாகிஸ்தானின் மோசமான தோல்விக்கு பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    கராச்சி:

    சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ஆனால் தொடரை நடத்திய பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. கிட்டத்தட்ட 30 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி முதல் அணியாக தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடம் பிடித்தது.

    இதற்கிடையே, பாகிஸ்தானின் இந்த மோசமான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார்.

    நான் சில நாட்களுக்கு முன் லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரை சந்தித்தேன். மைதானத்தை மேம்படுத்த அவர் செய்த முன்முயற்சிகள் அனைத்தும் நன்றாகவே இருந்தது. அவர் மேலும் கடாஃபி மைதானத்தை மெருகேற்ற விரும்புகிறார். ஆனால் அவர் என்னிடம் கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என கூறினார்.

    உங்களுக்கு கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என்றால், கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

    பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் தொடங்கி இயக்குநர்கள் வரை நாம் பார்க்கும் அத்தனை பேருக்கும் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.

    கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பை சரிசெய்ய முடியும்? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாவலர்கள் சரியாக இருந்தால் தான் அணியும் முன்னேற்றம் அடையும்.

    நாம் எப்போதும் தயாரிப்புகளைப் பற்றிப் பேசுகிறோம், ஒரு நிகழ்வு வந்து தோல்வியடையும் போது அறுவை சிகிச்சை பற்றிப் பேசுகிறோம். உண்மை என்னவென்றால் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யூவில் உள்ளது என தெரிவித்தார்.

    • தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
    • கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட உள்ளது.

    உலக அளவில் பேசப்படும் டி20 தொடராக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் 18-வது சீசன் இந்த மாதம் 22-ந் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் நிறைய வீரர்கள் மற்ற அணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஹோம் மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது.

    அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர்தான் பயன்படுத்தப்படும் என பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது.
    • ரூ. 18 கோடிக்கு டெல்லி அணியால் தக்கவைக்கப்பட்ட அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரான ஐ.பி.எல். 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.

    இந்த தொடருக்காக கடந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. இதனால் அவர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் கேப்டன் பதவியை நிராகரித்துள்ளதாகவும் ஒரு வீரராக அணிக்கு பணியாற்ற விரும்புவதாகவும் கேஎல் ராகுல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அக்சர் படேலை ரூ. 18 கோடிக்கு டெல்லி அணி தக்கவைத்தது குறிப்பிடதக்கது.

    • சச்சின், ரோகித் தொடக்க வீரர்களாக கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
    • இந்த அணியில் பும்ராவுக்கு இடம் கிடைக்கவில்லை.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதை அடுத்து, உலகின் சிறந்த ஒருநாள் அணியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏழு ஐசிசி கோப்பைகளை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்தியா ஐந்து கோப்பைகளை வென்றுள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு கேப்டனாக எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித்துக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை. தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மாவை கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.

    மூன்றாம் வரிசையில் விராட் கோலியும் நான்காம் வரிசையில் மொஹிந்தர் அமர்நாத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 1983-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வெற்றியில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அமர்நாத் ஆட்டநாயகன் விருது பெற்றவர்.

    2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங் ஐந்தாம் வரிசையிலும் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆறாம் வரிசையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஏழாம் வரிசையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கபில் தேவ், எட்டாம் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அடுத்ததாக அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

    வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சமி மற்றும் ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை.

    சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி ஆகிய நான்கு வீரர்களுக்கு சுனில் கவாஸ்கர் தனது சிறந்த ஒருநாள் அணியில் இடம் அளித்துள்ளார்.

    அதேபோல, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், தோனி, ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோருக்கும் இடம் அளித்துள்ளார்.

    1983 உலகக் கோப்பை வென்ற மொஹிந்தர் அமர்நாத் மற்றும் கபில் தேவ் ஆகியோருக்கும் இடம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த ஆல்-டைம் ஒருநாள் போட்டி இந்திய அணி:

    சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி, மொஹிந்தர் அமர்நாத், யுவராஜ் சிங், தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், முகமது ஷமி, ஜாகீர் கான்.

    • நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த தொடர் வரும் மார்ச் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

    இதில் மிக முக்கியமான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார்.

    இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் அணியில் வழக்கமான வீரர்கள் மிட்செல் சான்ட்னர், டெவான் கான்வே, கிளென் பிலீப்ஸ், லோக்கி ஃபெர்குசன், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

    இதன் காரணமாக நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அணியின் அனுபவ வீரரான கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை. இதன் காரணமாக இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம், டிம் செய்ஃபெர்ட், பென் சீயர்ஸ் மற்று, ஃபின் ஆலன் ஆகியோருக்கு இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்து டி20 அணி:

    மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்செல் ஹெய், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷாம், வில்லியம் ஓ'ரூர்க், டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்ஃபெர்ட், இஷ் சோதி.

    ×