என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பெங்களூருவில் மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

    பெங்களூரு:

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி இன்று தொடங்க இருந்தது. ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

    ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    • கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதிப் போட்டி நடைபெறும் என தொடக்கத்தில் அறிவிப்பு.
    • தற்போது போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளதால் பிளேஆஃப் போட்டிக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

    ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. லீக் ஆட்டங்கள் முடிவடைய இருந்த நிலையில் பிளேஆஃப் சுற்றின் குவாலிஃபையர்-1, எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் ஐதராபாத்திலும், குவாலிஃபையர்-2, இறுதிப் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.

    ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் ஏற்பட கடந்த 8ஆம் தேதி ஐபிஎல் போட்டிக்கு தடை ஏற்பட்டது. தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் 2025 சீசன் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. 10ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இன்று முதல் (17ஆம் தேதி) எஞ்சிய போட்டிகள் நடைபெறும் என போட்டி அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால் பிளேஆஃப் சுற்று போட்டிகள் எங்கு நடத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கொல்கத்தாவில்தான் இறுதிப் போட்டி நடைபெறும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பிசிசிஐ-யிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இறுதிப் போட்டியை மாற்றுவது அவ்வளவு எளிதானதா?. இது ஈடன் கார்டனின் பிளேஆஃப் போட்டிகள். எல்லாம் சரி செய்யப்படும். எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் உதவி செய்யாது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்துடன் பிசிசிஐ மிகச் சிறந்த நட்புறவு கொண்டுள்ளது" என்றார்.

    கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை கொல்கத்தா ஈடன் கார்டன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 8ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது.
    • பின்னர் 17ஆம் தேதி (இன்று) மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8ஆம் தேதி டெல்லி- பஞ்சாப் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ஒருவாரம் கழித்து (மே 17ஆம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி- கேகேஆர் இடையிலான போட்டியுடன் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குகிறது.

    ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 2-ஆவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ஆவது இடத்திலும் உள்ளது.

    • அசாம் மாநிலத்தில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது.
    • தற்போது புதிய மைதானம் கட்டப்பட்டு வருகிறது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச வசதிகளுடன் கவுகாத்தியின் புறநகர் பகுதியான அமின்கானில் புதிய கிரிக்கெட் மைதானம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தயாராகும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    மேலும், விளையாட்டு மீது ஆர்வமுள்ளவர்களுக்கு அசாம் மநில அரசு கட்டமைப்புகள் மற்றும் போட்டிக்கான தளத்தை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தள்ளார்.

    கவுகாத்தியின் சருசாஜாய் மற்றும் பார்சபாரா ஆகிய இரண்டு இடங்களில் தலா ஒரு மிகப்பெரிய மைதானங்கள் உள்ளன. தற்போது புதிதாக அமையவிருக்கும் மைதானம் 20 ஆயிரம் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கும் வகையில் வருகிற பிப்ரவரி மாதம் திறக்கப்படும்.

    இந்த மைதானம் அனைத்து நவீன வசதிகள் கொண்டதாக உருவாகி வருகிறது. பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இந்த மைதானத்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நடத்த முடியும்.

    சருசாஜாய் மைதானத்தில் தடகள டிராக், கால்பந்து மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. பார்சபாரா மைதானம் கிரிக்கெட் மைதானமாகும். வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ஒரேயொரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் இதுவாகும்.

    • ஆர்சிபி- கொல்கத்தா போட்டியில் மழை குறுக்கீட 50 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • இந்த போட்டியில் மழை வந்தாலும், கொல்கத்தா தோல்வி அடைந்தாலும் தொடரில் இருந்து வெளியேறி விடும்.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, எஞ்சிய ஐ.பி.எல். போட்டி இன்று முதல் தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

    பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.

    கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல ரன்-ரேட்டுடன் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான கதவு திறக்கும்.

    இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் மழை குறுக்கீட 50 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்படி மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும்.

    இதனால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் கனவு கலைந்துவிடும். அப்படி ஒரு புள்ளி எடுக்கப்பட்டால் நடப்பு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கிட்டத்தட்ட ஆர்சிபி முன்னேறிவிடும்.

    • ரோகித் ஸ்டாண்டை அவரது அப்பா, அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
    • புதிய ஸ்டாண்டை திறக்கும் போது அருகில் இருந்த அவரது மனைவி ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

    மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

    மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட போது மேடையில் இருந்த அவரது மனைவி கண்கலங்கினார். குறிப்பாக கண்ணீருடன் ரோகித் சர்மாவை ஒரு பார்வை பார்ப்பார். அதில் கணவன் மீதான மனைவியின் அன்பு வெளிப்பட்டதை பார்க்க முடிந்தது. மேலும் அவரது தாய், தந்தையும் ஆனந்த கண்ணீர் சிந்தினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    எனக்கு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. இது ஒரு சிறந்த உணர்வு. நான் இன்னும் விளையாடும்போது இந்த மரியாதை அதை சிறப்பானதாக்குகிறது. இங்கு இருக்கும் பலருக்கு, குறிப்பாக என் குடும்பத்தினர், என் அம்மா, அப்பா, என் சகோதரர், அவரது மனைவி மற்றும் என் மனைவிக்கு முன்னால் இதைப் பெறுவது ஒரு பெரிய மரியாதை.

    என ரோகித் சர்மா கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இதுநாள்வரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 2265 ரன்கள் எடுத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய அணியில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பவல் அதிரடியாக நீக்கப்பட்டதுடன், ஷாய் ஹோப் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் விலகியதை அடுத்து ரோஸ்டன் சேஸ் தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

    தற்சமயம் 33 வயதான ரோஸ்டன் சேஸ் கடந்த 2023-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் அதன்பின் தற்போது வரை அவர் எந்த டெஸ்ட் போட்டிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. இப்படியான சூழ்நிலையில் அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணிக்காக கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 2265 ரன்களையும், பந்துவீச்சில் 4 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஸ்டான்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.
    • நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப்போகிறது.

    மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

    மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் வான்கடே மைதானம் குறித்த நினைவுகளை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    ரெயிலில் இவ்வழியாக செல்லும் போதெல்லாம் வான்கடே மைதானத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே பயணித்த நாட்களை நினைவுகூர்கிறேன். இந்த ஸ்டான்ட் மிகவும் ஸ்பெஷல். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப்போகிறது.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு வருகிற 19-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • கேப்டன் பதவிக்கான போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் சுப்மன்கில் ஆகியோர் இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகிய 3 சீனியர்கள் இல்லாமல் முதல் முறையாக இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது. அஸ்வின் ஆஸ்திரேலியா பயணத்தில் பாதியில் ஓய்வு முடிவை அறிவித்தார். ஐ.பி.எல். போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சமீபத்தில் ஓய்வு முடிவை அறிவித்தனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு வருகிற 19-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு கூடி இந்திய வீரர்களை அறிவிக்கப்படுகிறது.

    ரோகித் சர்மாவின் ஓய்வால் புதிய டெஸ்ட் கேப்டனாக யார் தேர்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கேப்டன் பதவிக்கான போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் சுப்மன்கில் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் சுப்மன்கில்லுக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    பந்து வீச்சாளரான பும்ராவால் 5 டெஸ்டுக்கு கேப்டனாக பணியாற்றுவது கடினமானது. இதனால் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு சுப்மன்கில்லாக இருக்கிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்மன் கில்லை பயிற்சியாளர் காம்பீர் சந்தித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுப்மன்கில் கேப்டனாக தேர்வு செய்யப்படவே அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அவர் 3-வது வரிசையில் விளையாடலாம்.

    சுப்மன்கில்லும், ஜெய்ஷ்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். விராட் கோலியின் இடமான 4-வது வரிசையில் கே.எல். ராகுல் விளையாடுவார்.

    நிதிஷ்குமார் ரெட்டி, ஈஸ்வரன், ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் தேர்வுக்கான வாய்ப்பில் இருக்கிறார்கள். சுழற்பந்து வீரர்கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் தேர்வு பெறலாம்.

    • போர் சூழல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டபோது பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பி விட்டனர்.
    • மீண்டும் ஐபிஎல் போட்டி இன்று தொடங்குகிறது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தால் இந்தப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். கொல்கத்தா தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    போர் சூழல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டபோது பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பி விட்டனர். அவர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்குள் மீண்டும் திரும்ப தயக்கம் காட்டினார்கள். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தம் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.

    அதன்படி 57 வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் ஆடுகிறார்கள். மும்பை அணியில் 8 பேரும், குஜராத், பெங்களூரு தலா 7, கொல்கத்தா, ராஜஸ்தான் தலா 6, பஞ்சாப், ஐதராபாத், லக்னோ தலா 5, டெல்லி, சென்னை தலா 4 பேரும் ஐ.பி.எல்.லில் விளையாட இந்தியாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

    இவர்களில் சிலர் தங்களது நாடுக்கான போட்டியில் பங்கேற்பதால் பிளே ஆப் சுற்றில் ஆட மாட்டார்கள்.

    ஸ்டார்க், ஹசில்வுட், ஜோஸ் இங்கிலீஷ், ஸ்டோய்னிஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரண் உள்ளிட்ட சில வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.லில் மீண்டும் ஆடவில்லை.

    மாற்று வீரர்களாக ஒப்பந்தமான பேர்ஸ்டோவ், முஷ்தாபிசுர் ரகுமான், குசால் மெண்டிஸ், ஜேமிசன், ரிச்சர்டு கிளீசன், வில் ஓ ரூர்க் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகிறார்கள்.

    • ஐபிஎல் தொடரின் மூலம் அவர்களுக்கு கேப்டனாக அனுபவம் உள்ளது.
    • அவர்கள் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

    இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.

    இந்நிலையில் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அனுபவம் வாய்ந்தவர் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது சுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. அவர் தற்போது 25, 26 வயது தான் ஆகிறது. அதனால் அவருக்கு தேவையான நேரம் உள்ளது. மேலும் அவருடன் ரிஷப் பண்டும் உள்ளார்.

    அவர்களுக்கு கேப்டன்களாக அனுபவம் உள்ளது. இப்போது அவர்கள் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சுப்மனின் சிறிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிகிறது. மேலும் அவர் மிகவும் அமைதியானவர். அவருக்கு எல்லா குணங்களும் உள்ளன.

    ஆனால் அனைவரும் அவர் வெளிநாடுகளில் ரன்களைச் சேர்க்கவில்லை என்று கூறுவது எனக்கு தெரியும். மேலும் ஒவ்வொரு முறையும் இந்த விமர்சனம் எழுந்து வருகிறது.

    சில நேரங்களில் நான் அவர்களிடம், நீங்கள் வெளிநாட்டில் எவ்வளவு ரன்கள் குவித்தீரிகள் என்ற கேள்வியை கேட்பேன். அதனால் வெளிநாடு, வெளிநாடு என்று கூறாமல் அவரை விளையாட அனுமதிக்க வேண்டும். மேலும், இந்த சுற்றுப்பயணங்களில் ஒன்றில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    என்று ரவி சாஸ்திரி கூறினார்.

    • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன.
    • சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன.

    பெங்களூரு:

    திரில், பரபரப்பு என சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் திடீரென ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. மீண்டும் அதே உத்வேகத்துடன் இன்று தொடங்கினாலும் ஆட்டம் முழுவீச்சில் சூடுபிடிக்க சில நாட்கள் ஆகலாம். மேலும் முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிக்காக கடைசி கட்டத்தில் கிளம்புவது அணிகளின் சரியான கலவையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதை எல்லாம் கணக்கு போட்டே சில அணிகள் தற்காலிகமாக மாற்று வீரர்களை சேர்த்து வியூகங்களை தீட்டுகின்றன.

    இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. 13 லீக் மட்டுமே மிஞ்சியுள்ளது. ஆனால் இன்னும் எந்த அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) உறுதி செய்யவில்லை. முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன. மற்ற 7 அணிகள் பிளே-ஆப் சுற்றின் 4 இடத்துக்கு மல்லுக்கட்டுகின்றன.

    புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.

    3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணி மூட்டையை கட்டும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சந்திக்கும். இந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இனி பிளே-ஆப் சுற்றை எட்டுவதற்கு வாய்ப்புள்ள அணிகள் எவை என்பதை பார்க்கலாம்.

    குஜராத் டைட்டன்ஸ் (16 புள்ளி): புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் குஜராத் அணிக்கு மீதமுள்ள 3 ஆட்டங்களில் (டெல்லி, லக்னோ, சென்னைக்கு எதிராக) ஒன்றில் வென்றால் போதும். அடுத்து சுற்றை எட்டி விடும். மூன்றில் தோற்றால் கூட மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் வாய்ப்பு உண்டு. இதில் உள்ளூரில் இரு ஆட்டங்களில் ஆடுவது நிச்சயம் அனுகூலமாக இருக்கும். ஏனெனில் இந்த சீசனில் ஆமதாபாத்தில் ஆடிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றிருக்கிறது.

    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (16 புள்ளி): குஜராத் போன்றே பெங்களூரு அணியும் பிளே-ஆப் சுற்றை எட்டும் தூரத்தில் நிற்கிறது. அந்த அணிக்கு தேவை ஒரு வெற்றி. கொல்கத்தா, ஐதராபாத், லக்னோ அணிகளிடம் மோத வேண்டி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருப்பதால் பெங்களூரு அணி அடுத்த சுற்றை அடைவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது.

    பஞ்சாப் கிங்ஸ் (15 புள்ளி): தற்போதைய சூழலில் மீதமுள்ள 3 ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி, மும்பைக்கு எதிராக) பஞ்சாப் அணி 2-ல் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவை எதிர்நோக்கி இருக்க வேண்டும். மூன்றிலும் தோற்றால் ஏறக்குறைய அவுட் தான். 2014-ம் ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் அணி பிளே-ஆப் சுற்றுக்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை இந்தியன்ஸ் (14 புள்ளி): ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி இரு லீக்கில் டெல்லி, பஞ்சாப்பை பதம் பார்த்தால் கம்பீரமாக பிளே-ஆப் சுற்றுக்குள் பயணிக்கலாம். ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் தயவை தேட வேண்டி இருக்கும். ரன்ரேட்டில் (+1.156) நல்ல நிலையில் இருப்பது பலமாகும். இரண்டிலும் தோற்றால் அத்துடன் வெளியேற வேண்டியது தான்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் (13 புள்ளி): கடைசி 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி எழுச்சி பெற்றால் தான் தப்பிக்க முடியும். எஞ்சிய 3 ஆட்டத்திலும் (குஜராத், மும்பை, பஞ்சாப்புக்கு எதிராக) வாகை சூடினால் பிளே-ஆப் கனவு நனவாகும். மாறாக இரண்டில் மட்டும் வெற்றி கிடைத்தால் 17 புள்ளியை அடையும். அப்போது மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (11 புள்ளி): நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு நூலிழை அளவுக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது. முதலில் அந்த அணி தனது கடைசி இரு லீக்கிலும் (பெங்களூரு, ஐதராபாத்துக்கு எதிராக) வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு மும்பை அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் மண்ணை கவ்வ வேண்டும். டெல்லி அணி 3 ஆட்டங்களில் 2-ல் அடங்க வேண்டும். லக்னோ அணி 3-ல் ஒன்றில் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் கொல்கத்தா, டெல்லி அணிகள் தலா 15 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு போட்டியிடும். அப்போது ரன்ரேட்டில் வலுவாக இருந்தால் கொல்கத்தாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (10 புள்ளி): உத்வேகத்தை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கும் லக்னோ அணி கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவியது. தங்களுக்குரிய இறுதி 3 ஆட்டங்களிலும் (ஐதராபாத், குஜராத், பெங்களூருவுக்கு எதிராக) வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும். அதுவும் மற்ற அணிகளின் முடிவுகள் கைகொடுக்கவேண்டும். ஒன்றில் தோற்றாலும் அம்பேல் தான்.

    ×