என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது.
    • ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.

    ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ, பி மற்றும் சி கிரேடுகளுக்கு முறையே ரூ. 5 கோடி, ரூ. 3 கோடி, ரூ.1கோடி அளிக்கப்படுகிறது.

    டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள். சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.

    இந்த நிலையில் கோலி, ரோகித்சர்மா இடம்பெற்றுள்ள ஏ பிளஸ் கிரேடை நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது. ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.

    கோலி, ரோகித்சர்மாவுடன் ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா ஆகியோரும் 'ஏ' பிளஸ் கிரேடில் இடம்பெற்றுள்ளனர்.

    • வங்கதேசத்தின் நிலைப்பாடுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.
    • இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கராச்சி:

    இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்து இருந்தது.

    இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில் தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்றும் எச்சரித்தது.

    இதைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பாதுகாப்பு கருதி இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசத்தின் நிலைப்பாடுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்) ஸ்னைடெர் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்) இன்று காலை நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் தகுதி நிலை வீராங்கனையான ஹோசியானை (சீனா) எதிர் கொண்டார்.

    இதில் சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்) ஸ்னைடெர் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 13-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) 6-4, 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் போர்ச்சுகல்லை சேர்ந்த ஜேமிபெரியாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. கெடு விதித்து இருந்தது.
    • மறுக்கும் பட்சத்தில் வங்கதேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்று ஐசிசி எச்சரித்தது.

    டாக்கா:

    இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்து இருந்தது.

    இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில் தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்றும் எச்சரித்தது.

    இதைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.

    இந்தநிலையில் 20 ஓவர் உலகக் கோப்பையில் வங்கதேசம் பங்கேற்குமா? என்று கேப்டன் லிட்டன் தாசிடம் கேட்கப்பட்டது. சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதில் அளிப்பது தனக்கு பாதுகாப்பானது அல்ல என்று அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக லிட்டன்தாஸ் கூறியதாவது:-

    நாங்கள் உலகக்கோப்பையில் விளையாட போகிறோமா என்பது உங்களுக்கு (நிருபர்கள்) உறுதியாக தெரியுமா. என் தரப்பில் உறுதியாக தெரியவில்லை. அனைவருக்கும் நிச்சயமற்ற நிலைதான். இந்த சமயத்தில் முழு வங்கதேசமும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    நீங்கள் என்ன கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. அது எனக்கு பாதுகாப்பானது அல்ல. பதில் இல்லை.

    இவ்வாறு லிட்டன்தாஸ் கூறியுள்ளார்.

    இதற்கிடையே வங்கதேசத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக் கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

    • போல்வால்ட் பந்தயத்தில் தேசிய சாதனையாளராக விளங்குபவர் தேவ் குமார் மீனா.
    • அவர்கள் தங்களுடன் போல்வால்ட் பந்தயத்துக்கு பயன்படுத்தும் 6, 7 போல்வால்ட் கம்புகளை வைத்து இருந்தனர்.

    புதுடெல்லி:

    போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் தேசிய சாதனையாளராக (5.40 மீட்டர்) விளங்குபவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 20 வயது தடகள வீரர் தேவ் குமார் மீனா. மங்களூருவில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழக தடகள போட்டியில் பங்கேற்று வாகை சூடிய தேவ் குமார் மீனா, குல்தீப் யாதவ் மற்றும் சக வீரர்களுடன் இணைந்து சொந்த ஊர் திரும்புவதற்காக மும்பையின் புறநகர் பகுதியான பான்வெல் ரெயில்வே நிலையத்தில் இருந்து போபால் செல்லும் ரெயிலில் ஏறினார்.

    அவர்கள் தங்களுடன் போல்வால்ட் பந்தயத்துக்கு பயன்படுத்தும் 6, 7 போல்வால்ட் கம்புகளை வைத்து இருந்தனர். இதனை பார்த்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் 5 மீட்டர் உயரம் கொண்ட அந்த கம்புகளை பயணிகளுக்கான பெட்டியில் எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது. சரக்கு பெட்டியில் முன்பதிவு செய்து கொண்டு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினார்.

    ஆனால் போல்வால்ட் கம்புகளை எடுத்து செல்ல தங்களிடம் உரிய அனுமதி கடிதம் இருப்பதாக வீரர்களின் பயிற்சியாளர் கன்ஷியாம், டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்ததுடன் பைபர் கிளாசால் உருவாக்கப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள இந்த கம்புகளை சரக்கு பெட்டியில் எடுத்து சென்றால் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கமாக நாங்கள் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் பயணிகள் பெட்டியில் தான் கொண்டு செல்கிறோம். எனவே தங்களை பயணம் செய்ய அனுமதிக்கும்படி கையெடுத்து கும்பிட்டபடி கெஞ்சினார்.

    ஆனால் அதனை ஏற்க மறுத்த டிக்கெட் பரிசோதகர் கம்பின் நீளம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதால் எடுத்து செல்ல முடியாது என்று கறாராக சொல்லி விட்டார். இந்த வாக்குவாதம் மணிக்கணக்கில் நீடித்ததால் வீரர்கள் தாங்கள் செல்ல வேண்டிய ரெயிலை தவறவிட்டதோடு, அடுத்த ரெயிலுக்காக சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் காத்து இருந்து செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. அத்துடன் அவர்கள் தொடர்ந்து தங்களது போல்வால்ட்டை உடன் எடுத்து செல்ல அனுமதிக்கும்படி நீண்ட நேரம் முறையிட்டனர். ஒருவழியாக 80 கிலோ எடை கொண்ட அந்த கம்புகளை தங்களோடு அடுத்த ரெயிலில் எடுத்து செல்ல ரூ.1,875 அபராதம் விதித்த பிறகு தான் அனுமதி கிட்டியது.

    'சர்வதேச தடகள வீரரான தனக்கே நம் நாட்டில் இதுபோல் நடக்கிறது என்றால் ஜூனியர் வீரர்கள் எந்த மாதிரியான சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதை நினைத்து பாருங்கள். இது எங்களுக்கு புதிதல்ல. வீரர்கள் போட்டியில் பங்கேற்க தேவையான விளையாட்டு உபகரணங்களை தங்களுடன் எடுத்து செல்ல தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும்' என்று தேசிய சாதனையாளரான தேவ் குமார் மீனா வேதனையுடன் கூறினார்.

    இதற்கிடையே, டிக்கெட் பரிசோதகரிடம், பயிற்சியாளர் ரெயிலில் பயணிக்க அனுமதிக்கும்படி மன்றாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விஷயத்தில் ரெயில்வே நிர்வாகத்தின் போக்கை பலரும் கண்டித்துள்ளனர்.

    • நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணியை எதிர்கொண்டது.
    • ஆஸ்திரேலியா வீரர் வில் மலாஜ்சுக் 102 ரன்கள் விளாசினார்.

    வின்ட்ஹோக்:

    16-வது இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    வின்ட்ஹோக்கில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணியை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஜப்பான் அணி 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது.

    அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. வில் மலாஜ்சுக் 102 ரன்னும் (55 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) நிதேஷ் சாமுவேல் 60 ரன்னும் திரட்டி வெற்றியை எளிதாக்கினர். முன்னதாக மலாஜ்சுக் 51 பந்துகளில் சதத்தை கடந்து, இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.

    இதற்கு முன்னர் 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை ஆஸ்திரேலியா வீரர் முறியடித்துள்ளார்.

    • அடுத்த மாதம் 7-ந் தேதி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது.
    • தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்து மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேசம் வலியுறுத்தி வருகிறது.

    டாக்கா:

    அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியா செல்லமாட்டோம் என்று அறிவித்து இருக்கும் வங்காளதேசம், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்து மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று பிடிவாதம் காட்டி வருகிறது.

    இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்காததால் இன்றுக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று வங்கதேசத்துக்கு கெடு விதித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியா வந்து விளையாட மறுத்தால் வங்கதேசத்துக்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் இருக்கும் அணியை சேர்க்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், 'இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்திற்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்துள்ள எந்தவொரு நிபந்தனைக்கும் வங்கதேசம் அடிபணியாது' என்றார்.

    • இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது.
    • இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் களம் இறங்குகிறார்கள்.

    நாக்பூர்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்ெகாண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்த நியூசிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இவ்விரு அணிகளும் விளையாடும் கடைசி தொடர் இதுவாகும். இதனால் இது உலகக் கோப்பை போட்டிக்கு ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது. தங்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு இந்த போட்டியை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள்.

    சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை முதல்முறையாக பறிகொடுத்த இந்திய அணி, அதற்கு 20 ஓவர் போட்டியில் பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் பட்டேல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா வலு சேர்க்கிறார்கள்.

    ஒரு நாள் தொடரை வென்றதால் நியூசிலாந்து வீரர்கள் கூடுதல் நம்பிக்கையோடு இருப்பார்கள். கேப்டன் மிட்செல் சான்ட்னெர், டேரில் மிட்செல், பிலிப்ஸ், ராபின்சன், நீஷம், சோதி, ரச்சின் ரவீந்திரா என்று நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை. மேலும் அந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடுவதால் இங்குள்ள சூழல் அவர்களுக்கு பரீட்சயமானதே. அதனால் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பின்னங்கால் காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர் பிரேஸ்வெல் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

    இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும், 10-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.

    நாக்பூர் மைதானத்தில் இந்திய அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் 2016-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 79 ரன்னில் சுருண்டு தோற்றதும் அடங்கும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா அல்லது ஷிவம் துபே, அர்ஷ்தீப்சிங் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    நியூசிலாந்து: டிம் ராபின்சன், டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா முதல் சுற்றில் வென்றார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, சுலோவேனியாவின் கஜா ஜுவன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் குரோசியாவின் அண்டோனியோ ரூஜியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • 19 வயதான அன்மோல் கார்ப் கனடா வீராங்கனையை 21-18, 20-22, 21-19 என வீழ்த்தினார்.
    • 24 வயதான ஆகார்ஷி 21-13, 21-17 என மற்றொரு இந்திய வீராங்கனையை வீழ்த்தினார்.

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் முதன்மை சுற்றில் விளையாடுவதற்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான அன்மோல் கார்ப், கனடாவைச் சேர்ந்த வென் யு சாங்கை 21-18, 20-22, 21-19 என வீழ்த்தினார்.

    24 வயதான ஆகார்ஷி 21-13, 21-17 என மற்றொரு இந்திய வீராங்கனை இஷாாணி பருவாவை வீழ்த்தினர். இதன்மூலம் முதன்மை சுற்றுக்கு இருவரும் முன்னேறினர்.

    பி.வி. சிந்து, மாளவிகா பன்சாட் மற்றும் தன்வி ஷர்மா ஆகியோர் தரவரிசை அடிப்படையில் முதன்மை சுற்றில் விளையாட அனுமதி பெற்றுள்ளனர்.

    ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் எம்.ஆர். அர்ஜூன்- ஹரிஹரன் அம்சகருணன் ஜோடி இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    • நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் நடைபெறுகிறது.
    • கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் ஆவார்.

    புதுடெல்லி:

    19-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஸ்பான்சராக சுந்தர் பிச்சையின் கூகுள் ஜெமினி களத்தில் இறங்கியுள்ளது.

    உலகளவில் ஏஐ போட்டியில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஜெமினி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஸ்பான்சராக 3 ஆண்டுக்கு ரூ.270 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இது ஐ.பி.எல். வரலாற்றில் AI தளங்களுடன் செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தம் கிரிக்கெட்டில் AI நிறுவனங்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.

    ஏற்கனவே, பெண்கள் பிரீமியர் லீக் உடன் சாட் ஜிபிடி ரூ.16 கோடி மதிப்பிலான 2 ஆண்டு விளம்பர ஒப்பந்தம் செய்தது.

    கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெர்த்தில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
    • டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    பெர்த்:

    பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், பெர்த்தில் இன்று நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது. பின் ஆலன் 49 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களமிறங்கியது. பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் 15 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி சார்பில் மாலி பேர்ட்மேன் 3 விக்கெட்டும், டேவிட் பைன், கூப்பர் கன்னோலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது பின் ஆலனுக்கு அளிக்கப்பட்டது.

    ×