என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், பிரான்சின் ஹியூகோ காஸ்டன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது பிரான்ஸ் வீரர் போட்டியில் இருந்து விலகியதால் சின்னர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். அத்துடன் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 7-6 (2), 7-6 (5) என்ற செட் கணக்கில் பிரான்சி ஹியூகோ ஹம்பர்ட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பிரேஸ்வெல்க்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது.
    • காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளது.

    இந்தியா -நியூசிலாந்து அணிகள் ஒருநாள், டி20 போட்டிகளில் மோதி வருகிறது. முதல் நடந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் நாளை நாக்பூரில் தொடங்குகிறது.

    இந்நிலையில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல், டி20 தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இந்தூரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

    காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளது. மாற்று வீரராக கிறிஸ்டியன் கிளார்க், இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்காக டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சர்வதேச போட்டியில் இவர் அறிமுகமானார். இந்த தொடரில் இருமுறை தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தம் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நியூசிலாந்தின் வெற்றிக்கு பேட்டிங்கிலும் அவர் முக்கிய பங்கை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முகமது ஷமி, கிரிக்கெட்டுக்காக சிறு வயதிலேயே கொல்கத்தாவில் குடியேறிவிட்டார்.
    • எஸ்.ஐ.ஆர். படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை.

    கொல்கத்தா:

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டபோதும், விவரங்கள் போதுமானதாக இல்லை என ஒரு கோடி பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி, கொல்கத்தாவில் வாக்குரிமை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமிக்கும் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர்.படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை என கூறப்படும் நிலையில், உரிய ஆவணங்களுடன் வாக்குச்சாவடியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட முகமது ஷமி, கிரிக்கெட்டுக்காக சிறு வயதிலேயே கொல்கத்தாவில் குடியேறிவிட்டார்.

    இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற எஸ்ஐஆர் விசாரணைக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்று ஆஜரானார். மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் (SIR) நடைமுறையின் கீழ் திட்டமிடப்பட்ட விசாரணைக்காக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்று கொல்கத்தாவில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் ஆஜராகி உள்ளார்.

    தெற்கு கொல்கத்தாவின் பிக்ரம்கர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஷமி தேவையான ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரிகளிடம் ஆஜராகி உள்ளார்.

    • பெர்த்தில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிகள் மோதின.
    • டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    பெர்த்:

    பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், பெர்த்தில் இன்று நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் ஸ்காட்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது. பின் ஆலன் 49 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, சிட்னி சிக்சர்ஸ் அணி 148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பாபர் அசாம் 2 பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    தகுதிச்சுற்று போட்டியில் பாபர் அசாம் விரைவில் வெளியேறியது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. எனவே சமூக வலைதளங்களில் அவரை சாடி வருகின்றனர். இதனால் பாபர் அசாம் திடீரென டிரெண்டாகி உள்ளார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • இதில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்புர் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நெதர்லாந்து வீரர் டேலன் கிரீக்ஸ்பூர், அமெரிக்காவின் ஏதன் குயின் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அமெரிக்க வீரர் 6-2, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இதனால் நெதர்லாந்து வீரர் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மும்பை அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் கமலினி காயம் காரணமாக விலகி உள்ளார்.
    • மும்பை அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. இந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த நிலையில் மும்பை அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் கமலினி காயம் காரணமாக மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா மும்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.

    2025-ம் ஆண்டு இந்தியாவின் ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். இந்தியாவுக்காக 5 டி20 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


    மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் அடைந்துள்ளது.
    • டெல்லி அணி 4 போட்டிகளில் 1 வெற்றி 3 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. இந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள 13-வது ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

    மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 4 போட்டிகளில் 1 வெற்றி 3 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    • நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விளையாடுவதை நிறுத்திவிட்டேன்.
    • என் ஓய்வை பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை.

    ஐதராபாத்:

    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால். இவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, கடைசியாக 2023 சிங்கப்பூர் ஓபனில் பங்கேற்றார்.

    ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-

    நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விளையாடுவதை நிறுத்திவிட்டேன். என் விருப்பப்படி விளையாட்டில் நுழைந்து, என் விருப்பப்படியே வெளியேறினேன். அதனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தேன்.

    என் ஓய்வை பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை. என் நேரம் முடிந்துவிட்டது என்றுதான் நான் உணர்ந்தேன். காரணம் என்னால் முன்பு போல் அதிக முயற்சி செய்ய முடியவில்லை. என் மூட்டு ஒத்துழைக்கவில்லை.

    உலக அளவில் சிறந்து விளங்க எட்டு முதல் ஒன்பது மணி நேரம் பயிற்சி செய்வோம். ஆனால், இப்போது என் மூட்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலேயே செயலற்றுப் போனது. அது வீங்கிவிட்டது, அதற்குப் பிறகு பயிற்சி மேற்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அதனால் போதும் என்று நினைத்தேன். என்னால் இதற்கு மேல் முயற்சி செய்ய முடியாது. என்று வருத்தத்துடன் கூறினார்.

    2016 ரியோ ஒலிம்பிக்கில் ஏற்பட்ட மூட்டு காயத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இருப்பினும், 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018 காமன்வெல்த்தில் தங்கம் வென்று வலுவான கம்பேக் கொடுத்தார். இருந்தும், தொடர்ச்சியான பிரச்சனைகள் நீடித்தன. 2024-ல் அவருக்கு மூட்டுகளில் மூட்டுவலி மற்றும் குருத்தெலும்பு தேய்மானம் இருப்பது உறுதியானது.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
    • இந்த தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகள் முறையே 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

    இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்றுத் தோல்வி இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு எதிராக " கவுதம் கம்பீர் ஹே ஹே" என முழக்கமிட்டனர். இதைக் கேட்டு விராட் கோலி, சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் திகைத்து நின்றனர். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2024-ல் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • லாரன்சோ முசெட்டி 4-6, 7-6 (7-3), 7-5, 3-2 என்ற கணக்கில் ரபெல் கோலிக்னானுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னிலையில் இருந்தார்.
    • மேடிசன் கீஸ் 7-6 (8-6), 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், உலகின் 9-ம் நிலை வீராங்கனையுமான மேடிசன் கீஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் உக்ரைனை சேர்ந்த ஒலினிகோவாவை எதிர்கொண்டார். இதில் மேடிசன் கீஸ் 7-6 (8-6), 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் கரோலினா பிளிஸ்கோவா, வாலன்ட்டோவா (செக் குடியரசு), பிரெஸ்டன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். 22-வது வரிசை வீராங்கனையான லைலா பெர்னான்டஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5-வது வரிசையில் உள்ள லாரன்சோ முசெட்டி (இத்தாலி) 4-6, 7-6 (7-3), 7-5, 3-2 என்ற கணக்கில் ரபெல் கோலிக்னானுக்கு (பெல்ஜியம்) எதிரான ஆட்டத்தில் முன்னிலையில் இருந்தார். அப்போது ரபெல் காயத்தால் வெளியேறினார். இதனால் முசெட்டி வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 22-வது வரிசையில் உள்ள லூசியானோ டார்டெரி (இத்தாலி) வெற்றி பெற்றார்.

    • முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 181 ரன்கள் எடுத்தது.
    • அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த செடிக்குல்லா அடல் 2 ரன்னில் வெளியேறினார். இதனால் 19 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது.

    இதனையடுத்து இப்ராஹிம் சத்ரான்- தர்விஷ் ரசூலி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சத்ரான் 87 ரன்களும் ரசூல் 84 ரன்களும் எடுத்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக குவென்டின் சாம்ப்சன் 30 ரன்கள் எடுத்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

    • நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செனகல்- மொராக்கோ அணிகள் மல்லுக்கட்டின.
    • கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார்

    ரபாத்:

    நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல்- மொராக்கோ அணிகள் மல்லுக்கட்டின. தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் எந்த அணியினரும் கோல் போடவில்லை.

    கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார். இது ஒருதலைபட்சமான முடிவு என்று எதிர்ப்பு தெரிவித்த செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

    அத்துடன் மைதானத்திற்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சர்ச்சையால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. பிறகு ஒரு வழியாக சமாதானம் அடைந்த செனகல் வீரர்கள் மீண்டும் களம் திரும்பினர்.

    பெனால்டி வாய்ப்பில் மொராக்கோ வீரர் பிராஹிம் டியாஸ் அடித்த ஷாட்டை செனகல் கோல் கீப்பர் எடுவர்டோ மென்டி எளிதில் தடுத்தார். தொடர்ந்து கூடுதல் நேரத்தில் செனகல் வீரர் பாப் கியே கோல் போட்டு அசத்தினார்.

    முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் செனகல் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது. ஆனால் ஆட்டத்தில் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை வன்மையாக கண்டித்துள்ள சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் இன்பான்டினோ இது போன்ற சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். செனகல் அணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    ×