என் மலர்
விளையாட்டு

இதற்கு மேல் முயற்சி செய்ய முடியாது- ஓய்வு குறித்து மனம் திறந்த சாய்னா நேவால்
- நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விளையாடுவதை நிறுத்திவிட்டேன்.
- என் ஓய்வை பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை.
ஐதராபாத்:
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால். இவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, கடைசியாக 2023 சிங்கப்பூர் ஓபனில் பங்கேற்றார்.
ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-
நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விளையாடுவதை நிறுத்திவிட்டேன். என் விருப்பப்படி விளையாட்டில் நுழைந்து, என் விருப்பப்படியே வெளியேறினேன். அதனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தேன்.
என் ஓய்வை பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை. என் நேரம் முடிந்துவிட்டது என்றுதான் நான் உணர்ந்தேன். காரணம் என்னால் முன்பு போல் அதிக முயற்சி செய்ய முடியவில்லை. என் மூட்டு ஒத்துழைக்கவில்லை.
உலக அளவில் சிறந்து விளங்க எட்டு முதல் ஒன்பது மணி நேரம் பயிற்சி செய்வோம். ஆனால், இப்போது என் மூட்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலேயே செயலற்றுப் போனது. அது வீங்கிவிட்டது, அதற்குப் பிறகு பயிற்சி மேற்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அதனால் போதும் என்று நினைத்தேன். என்னால் இதற்கு மேல் முயற்சி செய்ய முடியாது. என்று வருத்தத்துடன் கூறினார்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் ஏற்பட்ட மூட்டு காயத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இருப்பினும், 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018 காமன்வெல்த்தில் தங்கம் வென்று வலுவான கம்பேக் கொடுத்தார். இருந்தும், தொடர்ச்சியான பிரச்சனைகள் நீடித்தன. 2024-ல் அவருக்கு மூட்டுகளில் மூட்டுவலி மற்றும் குருத்தெலும்பு தேய்மானம் இருப்பது உறுதியானது.






