என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 181 ரன்கள் எடுத்தது.
    • அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த செடிக்குல்லா அடல் 2 ரன்னில் வெளியேறினார். இதனால் 19 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது.

    இதனையடுத்து இப்ராஹிம் சத்ரான்- தர்விஷ் ரசூலி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சத்ரான் 87 ரன்களும் ரசூல் 84 ரன்களும் எடுத்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக குவென்டின் சாம்ப்சன் 30 ரன்கள் எடுத்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

    • நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செனகல்- மொராக்கோ அணிகள் மல்லுக்கட்டின.
    • கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார்

    ரபாத்:

    நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல்- மொராக்கோ அணிகள் மல்லுக்கட்டின. தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் எந்த அணியினரும் கோல் போடவில்லை.

    கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார். இது ஒருதலைபட்சமான முடிவு என்று எதிர்ப்பு தெரிவித்த செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

    அத்துடன் மைதானத்திற்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சர்ச்சையால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. பிறகு ஒரு வழியாக சமாதானம் அடைந்த செனகல் வீரர்கள் மீண்டும் களம் திரும்பினர்.

    பெனால்டி வாய்ப்பில் மொராக்கோ வீரர் பிராஹிம் டியாஸ் அடித்த ஷாட்டை செனகல் கோல் கீப்பர் எடுவர்டோ மென்டி எளிதில் தடுத்தார். தொடர்ந்து கூடுதல் நேரத்தில் செனகல் வீரர் பாப் கியே கோல் போட்டு அசத்தினார்.

    முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் செனகல் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது. ஆனால் ஆட்டத்தில் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை வன்மையாக கண்டித்துள்ள சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் இன்பான்டினோ இது போன்ற சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். செனகல் அணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • தொடக்க ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசியிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
    • 2-வது சுற்று முடிவில் ஹான்ஸ் மோக் நிமான், அர்ஜூன் எரிகைசி ஆகியோர் தலா 1½ புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர்.

    விஜ்க் ஆன் ஜீ:

    டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான தமிழக வீரர் பிரக்ஞானந்தா 60-வது காய் நகர்த்தலில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் அப்துசத்தோரோவிடம் தோல்வி அடைந்தார்.

    பிரக்ஞானந்தா தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசியிடம் வீழ்ந்து இருந்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், நெதர்லாந்து வீரர் ஜோர்டென் வான் பாரஸ்ட்க்கு எதிரான ஆட்டத்தில் 33-வது நகர்த்தலில் 'டிரா' கண்டார்.

    இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி-செக்குடியரசின் தாய் டாய் வான் இடையிலான ஆட்டம் 56-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இதே போல் அனிஷ் கிரி (நெதர்லாந்து)- ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) மோதிய ஆட்டம் 44-வது நகர்த்தலில் டிரா ஆனது.

    2-வது சுற்று முடிவில் ஹான்ஸ் மோக் நிமான் (அமெரிக்கா), நோடிர்பெக் அப்துசத்தோரோவ் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் தலா 1½ புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர்.

    • முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் குவித்தது.
    • குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவிமும்பையில் நடந்தன.

    இதனையடுத்து எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 12-வது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்சுடன் மோதியது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த வெற்றியின் மூலம் மகளிர் ப்ரீமியர் லீக்: நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தகுதி பெற்றுள்ளது.

    ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 6-3, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
    • 6-1, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் எதிரியை வீழ்த்தினார் ரூட்.

    ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மார்ட்டினெசை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 12-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட், இத்தாலியின் மேட்டியா பெலூசியை எதிர்கொண்டார். இதில் ரூத் 6-1, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மேலும், வாரிங்கா, டேவிடோவிச், எல். தியென், சிலிச் ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக், அன்ட்ரீவா, மெர்ட்டென்ஸ், அனிசிமோவா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    • பஞ்சாப் அணி சவுராஷ்டிராவை வருகிற 22-ந்தேதி எதிர்கொள்கிறது.
    • இன்று டெல்லி திரும்பிய சுப்மன் கில் ராஜ்கோட்டில் பஞ்சாப் அணியுடன் இணைய இருக்கிறார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று முடிவடைந்தது. இதில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா அணி 1-2 என தொடரை இழந்தது.

    நேற்று போட்டி முடிவடைந்த நிலையில், சுப்மன் கில் இன்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து டெல்லி சென்றார்.

    இந்த நிலையில் ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணிக்கெதிராக விளையாடுவதற்கான ராஜ்கோட் புறப்பட்டுச் செல்ல இருக்கிறார். வருகிற 22-ந்தேதி ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணி சவுராஷ்டிராவை எதிர்கொள்கிறது. இதில் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார்.

    சவுராஷ்டிராவைத் தொடர்ந்து 29-ந்தேதி கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. தற்போது பி பிரிவில் 5 போட்டிகளில் தலா ஒரு வெற்றி தோல்வியடைந்துள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

    • உண்மையான ஆட்டத்தையே மாற்றியவர் ஹர்ஷித் ராணாதான்.
    • ஹர்ஷித் ராணா பேட் செய்த விதத்தைப் பார்த்து நியூசிலாந்து வீரர்கள் நடுங்கினார்கள்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி உறுதியாக தோல்வியடையும் என்ற நிலையில் இருந்தது.

    ஆனால் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஹர்ஷித் ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 52 ரன்கள் விளாசினார். அவர் களத்தில் இருக்கும் வரை இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. நியூசிலாந்து வீரர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் ஹர்ஷித் ராணாதான் உண்மையான கேம் சேஞ்சர் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    உண்மையான ஆட்டத்தையே மாற்றியவர் ஹர்ஷித் ராணாதான். ராணா பேட் செய்த விதத்தைப் பார்த்து நியூசிலாந்து வீரர்கள் நடுங்கினார்கள். ராணாவின் பேட்டிங்கை பார்த்து நான் வியந்து போனேன். அவர் ஒரு வேறுபட்ட மட்டத்தில் விளையாடினார். அவர்கள் உண்மையில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள். அவர் சிரமமின்றி சிக்ஸர்களை அடித்தார். அவருடைய பேட்டிங் அபாரமாக இருந்தது.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    • 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

    ஆஸ்திரேலியா அணியின் சிறந்த பேட்டர் ஸ்டீவ் ஸ்மித். அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஒலிம்பிக் வாய்ப்புக்காக டி20 (T20) வடிவத்தில் தொடர்ந்து விளையாட அவர் திட்டமிட்டுள்ளார்.

    அந்த வகையில் டி20 லீக் போட்டிகளில் (BBL, MLC) விளையாடுவதன் மூலம் தனது பார்மைத் தக்கவைத்துக் கொள்ள அவர் முயற்சித்து வருகிறார்.

    தற்போது பிக்பாஷ் லீக் போன்ற தொடர்களில் அபாரமாக விளையாடி வருவதன் மூலம் தனது ஒலிம்பிக் கனவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

    அந்த வகையில் 128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணிக்காகப் பங்கேற்பதை ஸ்மித் ஒரு கௌரவமாகக் கருதுகிறார்.

    இந்நிலையில் 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார். 

    • சில வீரர்கள் தங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள்.
    • கோலி ரன்களைக் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

    இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு முறை வென்று தொடரில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் இளம் வீரர்கள் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் கோட். 52 ஒருநாள் சதங்களை எட்டிய அவரது சாதனை, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததுடன் அவரை ஒரு தனி உயரத்தில் வைத்துள்ளது.

    கோலி எந்த ஒரு குறிப்பிட்ட "இமேஜுக்கும்" (Image) கட்டுப்படாமல், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதே அவரது வெற்றிக்கான ரகசியம். சில வீரர்கள் தங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள், ஆனால் கோலி ரன்களைக் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

    இளம் வீரர்கள் கோலியின் மன உறுதி மற்றும் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விதத்தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியின் விளிம்பில் இருந்தபோதும் விட்டுக்கொடுக்காமல் போராடும் அவரது குணம் பாராட்டுக்குரியது.

    என கவாஸ்கர் கூறினார்.

    • இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சற்று ஏமாற்றம் தருகிறது.
    • இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.

    இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு முறை வென்று தொடரில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இந்தியா 296 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சற்று ஏமாற்றம் தருகிறது என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சற்று ஏமாற்றம் தருகிறது. தோல்வியில் இருந்து பாடங்கள் கற்று, பல இடங்களில் அணியை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பாசிட்டிவ் என பார்த்தால், கோலியின் பேட்டிங் எப்போதுமே அணிக்கு பலம்தான். 8வதாக களமிறங்கி ஹர்ஷித் ராணா சிறப்பாக பேட் செய்தார். இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.

    என சுப்மன் கில் கூறினார்.

    • அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
    • அதற்கு முன்னதாக பாகிஸ்தானுடன் டி20 தொடரில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.

    ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு பயிற்சி போட்டியாக இந்த தொடரில் இரு அணிகளும் மோதுகின்றனர்.

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம் பெறவில்லை.

    இந்நிலையில் முழுமையாக காயம் குணமடையாததால் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகி உள்ளார். அடுத்த 2-3 போட்டிகளில் அவர் அணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் காயத்தில் இருந்த அதிரடி பேட்டர் டிம் டேவிட் டி20 தொடரில் விளையாடுவதற்கு முழு உடல் தகுதியுடன் உள்ளார் எனவும் ஆஸ்திரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடத்தில் உள்ளது.
    • தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடத்தில் உள்ளது.

    வதோதரா:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவிமும்பையில் நடந்தன.

    இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று முதல் பிப்.5-ந்தேதி வரை நடக்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 12-வது லீக்கில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்சுடன் மல்லுகட்டுகிறது.

    தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் ஏறக்குறைய 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து விடும். அதே சமயம் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று கம்பீரமாக தொடங்கிய குஜராத் அணி அடுத்த இரு ஆட்டங்களில் தோற்று இப்போது 4 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே 32 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவதால் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    ×