என் மலர்
விளையாட்டு

விளையாட்டு உபகரணங்களுடன் ரெயிலில் பயணித்த போல்வால்ட் வீரர்களுக்கு நேர்ந்த அவலம்
- போல்வால்ட் பந்தயத்தில் தேசிய சாதனையாளராக விளங்குபவர் தேவ் குமார் மீனா.
- அவர்கள் தங்களுடன் போல்வால்ட் பந்தயத்துக்கு பயன்படுத்தும் 6, 7 போல்வால்ட் கம்புகளை வைத்து இருந்தனர்.
புதுடெல்லி:
போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் தேசிய சாதனையாளராக (5.40 மீட்டர்) விளங்குபவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 20 வயது தடகள வீரர் தேவ் குமார் மீனா. மங்களூருவில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழக தடகள போட்டியில் பங்கேற்று வாகை சூடிய தேவ் குமார் மீனா, குல்தீப் யாதவ் மற்றும் சக வீரர்களுடன் இணைந்து சொந்த ஊர் திரும்புவதற்காக மும்பையின் புறநகர் பகுதியான பான்வெல் ரெயில்வே நிலையத்தில் இருந்து போபால் செல்லும் ரெயிலில் ஏறினார்.
அவர்கள் தங்களுடன் போல்வால்ட் பந்தயத்துக்கு பயன்படுத்தும் 6, 7 போல்வால்ட் கம்புகளை வைத்து இருந்தனர். இதனை பார்த்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் 5 மீட்டர் உயரம் கொண்ட அந்த கம்புகளை பயணிகளுக்கான பெட்டியில் எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது. சரக்கு பெட்டியில் முன்பதிவு செய்து கொண்டு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினார்.
ஆனால் போல்வால்ட் கம்புகளை எடுத்து செல்ல தங்களிடம் உரிய அனுமதி கடிதம் இருப்பதாக வீரர்களின் பயிற்சியாளர் கன்ஷியாம், டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்ததுடன் பைபர் கிளாசால் உருவாக்கப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள இந்த கம்புகளை சரக்கு பெட்டியில் எடுத்து சென்றால் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கமாக நாங்கள் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் பயணிகள் பெட்டியில் தான் கொண்டு செல்கிறோம். எனவே தங்களை பயணம் செய்ய அனுமதிக்கும்படி கையெடுத்து கும்பிட்டபடி கெஞ்சினார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த டிக்கெட் பரிசோதகர் கம்பின் நீளம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதால் எடுத்து செல்ல முடியாது என்று கறாராக சொல்லி விட்டார். இந்த வாக்குவாதம் மணிக்கணக்கில் நீடித்ததால் வீரர்கள் தாங்கள் செல்ல வேண்டிய ரெயிலை தவறவிட்டதோடு, அடுத்த ரெயிலுக்காக சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் காத்து இருந்து செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. அத்துடன் அவர்கள் தொடர்ந்து தங்களது போல்வால்ட்டை உடன் எடுத்து செல்ல அனுமதிக்கும்படி நீண்ட நேரம் முறையிட்டனர். ஒருவழியாக 80 கிலோ எடை கொண்ட அந்த கம்புகளை தங்களோடு அடுத்த ரெயிலில் எடுத்து செல்ல ரூ.1,875 அபராதம் விதித்த பிறகு தான் அனுமதி கிட்டியது.
'சர்வதேச தடகள வீரரான தனக்கே நம் நாட்டில் இதுபோல் நடக்கிறது என்றால் ஜூனியர் வீரர்கள் எந்த மாதிரியான சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதை நினைத்து பாருங்கள். இது எங்களுக்கு புதிதல்ல. வீரர்கள் போட்டியில் பங்கேற்க தேவையான விளையாட்டு உபகரணங்களை தங்களுடன் எடுத்து செல்ல தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும்' என்று தேசிய சாதனையாளரான தேவ் குமார் மீனா வேதனையுடன் கூறினார்.
இதற்கிடையே, டிக்கெட் பரிசோதகரிடம், பயிற்சியாளர் ரெயிலில் பயணிக்க அனுமதிக்கும்படி மன்றாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விஷயத்தில் ரெயில்வே நிர்வாகத்தின் போக்கை பலரும் கண்டித்துள்ளனர்.






