என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் டி20 போட்டி: இந்தியா- நியூசிலாந்து இன்று மோதல்
    X

    முதல் டி20 போட்டி: இந்தியா- நியூசிலாந்து இன்று மோதல்

    • இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது.
    • இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் களம் இறங்குகிறார்கள்.

    நாக்பூர்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்ெகாண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்த நியூசிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இவ்விரு அணிகளும் விளையாடும் கடைசி தொடர் இதுவாகும். இதனால் இது உலகக் கோப்பை போட்டிக்கு ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது. தங்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு இந்த போட்டியை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள்.

    சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை முதல்முறையாக பறிகொடுத்த இந்திய அணி, அதற்கு 20 ஓவர் போட்டியில் பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் பட்டேல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா வலு சேர்க்கிறார்கள்.

    ஒரு நாள் தொடரை வென்றதால் நியூசிலாந்து வீரர்கள் கூடுதல் நம்பிக்கையோடு இருப்பார்கள். கேப்டன் மிட்செல் சான்ட்னெர், டேரில் மிட்செல், பிலிப்ஸ், ராபின்சன், நீஷம், சோதி, ரச்சின் ரவீந்திரா என்று நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை. மேலும் அந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடுவதால் இங்குள்ள சூழல் அவர்களுக்கு பரீட்சயமானதே. அதனால் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பின்னங்கால் காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர் பிரேஸ்வெல் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

    இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும், 10-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.

    நாக்பூர் மைதானத்தில் இந்திய அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் 2016-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 79 ரன்னில் சுருண்டு தோற்றதும் அடங்கும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா அல்லது ஷிவம் துபே, அர்ஷ்தீப்சிங் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    நியூசிலாந்து: டிம் ராபின்சன், டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×