என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
    • ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.

    இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி. சமீப காலங்களில் ஃபார்ம்-அவுட் ஆகி தவிக்கும் விராட் கோலி கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடர்களில் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவர் மட்டுமின்றி இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலரும் இதே சூழலில் சிக்கியுள்ளனர்.

    இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளை திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட வேண்டும் என்று அறிவித்தது. அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.

    அந்த வகையில், டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலி இன்று பேட்டிங் செய்ய களமிறங்கினார். விராட் கோலி விளையாடுவதை பார்க்கவே அந்த மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து, 15 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில், ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் போல்டு ஆனார்.

    உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 



    • இந்திய அணி ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
    • எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

    மொத்தம் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட உள்ளன. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்கும் முன்பு இதில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் கலந்து கொள்ளும் போட்டோஷூட் நடைமுறையை ஐ.சி.சி. ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக போட்டோஷூட்டில் பங்கேற்க இந்திய கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், போட்டோஷூட் நிகழ்ச்சியை ஐ.சி.சி. ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. போட்டோஷூட் ரத்து செய்யப்பட்ட நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க விழா இந்த தொடரின் முதல் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்பே நடைபெறும் என்று தெரிகிறது.

    • ரஞ்சி டிராபி தொடரின் இன்று தொடங்கிய ஒரு போட்டியில் டெல்லி-ரெயில்வே அணிகள் மோதுகின்றன.
    • டெல்லி அணிக்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறக்கியுள்ளார்.

    புதுடெல்லி:

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதன் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கின.

    இதில் ஒரு ஆட்டத்தில் டெல்லி-ரெயில்வே அணிகள் மோதுகின்றன. டெல்லி அணிக்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறக்கியுள்ளார்.

    அவர் ரஞ்சி தொடரில் ஆடுவதால் ரசிகர்கள் அமர்ந்து பார்க்க வசதியாக 3 கேலரிகள் திறந்து விடப்பட்டது. அத்துடன் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

    இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து டெல்லி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

    முன்னதாக இந்த ஆட்டத்தில் டெல்லி அணி பீல்டிங்கின்போது விராட் கோலி ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அத்துடன் அவர் விராட் கோலியை நோக்கி ஒடி அவரது காலில் விழுந்தார். உடனே அவரை விரட்டி சென்ற பாதுகாவலர்கள் தூக்கி நிறுத்தினர். விராட் கோலி, பாதுகாவலர்களிடம் அவரை ஒன்றும் செய்யாமல் பத்திரமாக அழைத்து செல்லுமாறு கூறினார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அலீசா ஹீலிக்கும், மிட்செல் ஸ்டார்க்கும் இது 287-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது.
    • மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் அவரது மனைவி அலீசா ஹீலி இருவரும் வித்தியாசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளனர்.

    ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்திய போது சர்வதேச கிரிக்கெட் 700-வது விக்கெட்டாக அமைந்தது.

    அதே வேளையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மெல்பர்னில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய நாட் ஷிவர் பிரண்ட் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்த நிலையில், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனான அலீசா ஹீலிக்கும், மிட்செல் ஸ்டார்க்கும் இது 287-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது. நட்சத்திர கிரிக்கெட் தம்பதிகள் இருவரும் ஒரே நாளில் 287-வது போட்டியில் விளையாடியதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அலீசா ஹீலி 10 டெஸ்ட், 115 ஒருநாள், 162 டி20 போட்டிகளிலும், மிட்செல் ஸ்டார்க் 95 டெஸ்ட், 127 ஒருநாள், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3 போட்டிகளிலும் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பந்துகளில் சாம்சன் தன்னுடைய விக்கெட்டுகளை இழந்தார்.
    • சூர்யகுமாரும் இத்தொடரில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியாவை 3-வது போட்டியில் இங்கிலாந்து தோற்கடித்தது.

    இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பந்துகளில் சாம்சன் தன்னுடைய விக்கெட்டுகளை இழந்தார். அதனால் ஒரு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் கேப்டன் சூர்யகுமாரும் இத்தொடரில் பெரிய ரன்கள் குவிக்காதது பின்னடைவை கொடுத்து வருகிறது.

    இந்நிலையில் அவர்களுடைய தடுமாற்றத்திற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    சஞ்சு சாம்சன் அவ்வாறு அவுட்டாக தேவையில்லை. அதை சரி செய்ய ஒரு ஸ்பெல்லில் நீங்கள் விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டு மற்ற பவுலர்களை அடியுங்கள். கடந்தப் போட்டியின் பிட்ச்சில் வேகம், பவுன்ஸ் ஆகியவையும் பெரிதாக இல்லை. சூர்யகுமாருக்கு எந்த வேகப்பந்து வீச்சாளரும் வேகமாக பந்து வீசவில்லை. அவருக்கு வேகத்தை கொடுக்கக் கூடாது என்ற திட்டத்துடன் அனைத்து பவுலர்களும் வருகிறார்கள்.

    ஏனெனில் வேகத்துக்கு எதிராக சூர்யா அதிரடியாக விளையாடுகிறார். எனவே சூர்யா கொஞ்சம் நேரம் எடுத்து விளையாட வேண்டும். சூர்யகுமார் ஆக்ரோஷமான ஷாட்களுக்கு முயல்வதற்கு முன் கிரீஸில் அதிக நேரம் செலவிட வேண்டும்

    சாம்சன் மனநிலையில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. டெக்னிக்கல் அளவில் சிறிய தடுமாற்றம் இருக்கிறது. ஏனெனில் அவர் இழுத்து அடிக்க முயற்சிக்கிறார். நீங்கள் அடிக்க முயற்சி செய்யும் போது உங்களுடைய பின்னங்கால் லெக் ஸ்டம்ப் நோக்கி செல்லும்.

    அப்போது பந்தை ஃபுல் அடிக்க முயற்சிக்கும் போது உங்கள் கைகள் நன்றாக திறக்காது. எனவே அந்த மூவ்மெண்ட்டை விட்டு பந்து கொஞ்சம் தாமதமாக வரும் போது நீங்கள் அடிக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் கோட்டுக்குள் வந்து வேகத்தை பயன்படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

    மற்ற படி சஞ்சு ஷார்ட் பந்துகளை பொதுவாகவே நன்றாக அடிக்கக்கூடியவர். அவரை கோணம் மட்டுமே தடுமாற வைக்கிறது. ஷார்ட் பந்துகள் அல்ல.

    என ராயுடு கூறினார்.

    • ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் மாதம் 21-ம் தேதி தொடங்க இருக்கிறது.
    • தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடராக இந்த சீசன் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறது. ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் மாதம் 21-ம் தேதி தொடங்க இருக்கிறது.

    இந்த ஐபிஎல் தொடரில் பல அணிகள் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அதில் முதனைமையானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவே இருக்கும். ஏனென்றால் தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடராக இந்த சீசன் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் அணிகள் புதிய ஜெர்சியுடன் களமிறங்கும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    கடந்த சீசனில் சென்னை அணியின் ஸ்பான்சாராக யூரோகிரிப் டயர்ஸ் நிறுவனமும் எதியாட் ஏர்வேஸ் நிறுவனமும் இருந்தது. ஆனால், இந்த முறை முழு நேர ஸ்பான்சராக எதியாட் ஏர்வேஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளது.

    கடந்த வருடம் ஜெர்சியின் பின்பக்கத்தில் இருந்த எதியாட் ஏர்வேஸ் என்று பொறிக்கப்பட்டிருந்த வார்த்தை இந்த முறை முன்பக்கத்தில் உள்ளது. மேலும் முன்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த யூரோகிரிப் டயர்ஸ் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

    கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணிக்காக தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடராக இந்த சீசன் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். வெற்றியுடன் விடைபெறும் என்று தோனி விரும்பும் சூழலில், இந்த சீசனில் தோனியைப் பார்க்க ரசிகர்கள் படையெடுப்பார்கள் என்று கருதப்படுகிறது.

    • இலங்கைக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே ஜோஷ் இங்கிலிஸ் சதம் அடித்து ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட்டில் அதிவேக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் உள்ளார்.

    காலே:

    இலங்கை- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி கவாஜா 232, ஸ்மித் 141, ஜோஷ் இங்கிலிஸ் 102 ஆகியோர் உதவியுடன் 654 குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, வேண்டர்சே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்த போட்டியில் அறிமுகமான ஜோஷ் இங்கிலிஸ், அதிரடியாக விளையாடி 102 (94) சதம் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட்டில் அதிரடி சதம் விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்திய வீரர் ஷிகர் தவான் உள்ளார்.

    2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 85 பந்துகளில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார். 3-வது 4-வது இடங்கள் முறையே ஸ்மித் (வெஸ்ட் இண்டீஸ்) 93 பந்துகளிலும் ப்ரித்வி ஷா (இந்தியா) 99 பந்துகளிலும் சதம் விளாசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீப்தியின் சாதனைகளைப் பாராட்டி, உத்தரப் பிரதேச அரசு 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கியது.
    • துணை எஸ்பி பதவிக்கான நியமனக் கடிதமும் வழங்கி கவுரவித்தது.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை தீப்தி சர்மா. இவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். மேலும் இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2023 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வெல்ல தீப்தி முக்கியப் பங்காற்றினார்.

    இந்நிலையில் தீப்தி சர்மாவுக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு சிறப்பு கவுரவம் செய்துள்ளது. தீப்தியின் சாதனைகளைப் பாராட்டி, உத்தரப் பிரதேச அரசு, 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், துணை எஸ்பி பதவிக்கான நியமனக் கடிதமும் வழங்கி கவுரவித்தது.

    இதன்மூலம் தீப்தி சர்மாவின் சிறுவயது கனவு நனவாகியது. உத்தரபிரதேசத்தில் அவருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) சீருடை வழங்கப்பட்டது. இந்த பதவிக்காக உத்தரபிரதேச அரசுக்கு தீப்தி நன்றி கூறினார். மேலும் இதற்காக நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் எனவும் அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலியா தரப்பில் கவாஜா 232 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, வேண்டர்சே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    காலே:

    இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கவாஜா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினர். அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசென் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து வந்த ஸ்மித், கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து விளையாடிய இருவரும் சதமடித்தனர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது . கவாஜா 147 ரன்களுடன், ஸ்மித் 104 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கவாஜா, ஸ்மித் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஸ்மித் 141 ரன்களில் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து விளையாடிய கவாஜா இரட்டை சதமடித்து அசத்தினார். இது அவரது முதல் இரட்டை சதம் ஆகும். அவர் 232 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர் 94 பந்தில் 102 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனையடுத்து வந்த வெப்ஸ்டர் 23 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஆஸ்திரேலியா 654 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அலெக்ஸ் கேரி 46 ரன்களுடனும் மிட்செல் ஸ்டார்க் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, வேண்டர்சே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • ஜூனியர் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
    • முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கைப்பற்றியது.

    19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஜூனியர் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜூனியர் தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 299 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 319 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 336 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    இந்நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.

    முன்னதாக இந்த போட்டியில் துரதிஷ்டவசமாக இங்கிலாந்து வீரர் ரன் அவுட் ஆகியுள்ளார். ஜேசன் ரோல்ஸ் பந்து வீச்சில் ஸ்விப் ஆட முயன்ற போது சில்லி பாய்ண்ட்டில் நின்ற பீல்டரின் ஹெல்மெட்டில் பந்து வேகமாகபட்டு திரும்பி ஸ்டெம்பில் வந்து பட்டது. அந்த நேரத்தில் பேட்டர் ஆர்யன் சாவந்த் கிரிசுக்கு வெளியே இருந்தார். இதனால் அவர் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

    இது புதுவிதமான ரன் அவுட் ஆக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை ரக்‌ஷிதா ராம்ராஜ் காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாங்காக்:

    தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ், தைவான் வீராங்கனையான டங் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரக்ஷிதா 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் பேட்டிங் செய்த மேகாலயா அணி 86 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ரஞ்சி டிராபி தொடரில் இன்று தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை- மேகாலயா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய மேகாலயா அணிக்கு தொடக்கம் முதலே திணறியது. அந்த அணி 2 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து பிரிங்சாங் சங்மா- ஆகாஷ் சவுத்ரி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    பிரிங்சாங் 19 ரன்னிலும் ஆகாஷ் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அனிஷ் சரக் 17, ஹிமான் புக்கான் 28 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் மேகாலயா அணி 86 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்த போட்டியில் ஷர்துல் தாகூர், ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த 5-வது மும்பை வீரராக ஷர்துல் சாதனை படைத்துள்ளார்.

    மும்பைக்காக ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த வீரர்கள்:-

    ஜஹாங்கீர் கோட் (மும்பை) vs பரோடா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1943-44)

    உமேஷ் குல்கர்னி (மும்பை) vs குஜராத் - ஆனந்தில் சாஸ்திரி மைதானம் (1963-64)

    ஏ.எம். இஸ்மாயில் (மும்பை) vs சவுராஷ்டிரா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1973-74)

    ராய்ஸ்டன் டயஸ் (மும்பை) vs பீகார் - பாட்னாவில் மொயின்-உல்-ஹக் ஸ்டேடியம் (2023-24)

    ஷர்துல் தாக்கூர் (மும்பை) vs மேகாலயா - மும்பையில் பி.கே.சி மைதானம் (2024-25)

    ×