என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை ரக்‌ஷிதா ராம்ராஜ் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பாங்காக்:

    தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ், தாய்லாந்து வீராங்கனை தாமோவான் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய தாய்லாந்து வீராங்கனை 19-21, 21-14, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜ் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஜுன் 20-ந் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஜுன் 20-ந் தேதி தொடங்குகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்திலும், 2-வது டெஸ்ட் பர்மிங்காம் மைதானத்திலும், 3-வது டெஸ்ட் லாட்ஸ் மைதானத்திலும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • வைஷாலிக்கு நோடிர்பேக் கைகுலுக்க தவிர்த்தது கடும் சர்ச்சையாக மாறியது.

    விஜ்க் ஆன் ஜீ:

    நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரின் நான்காவது சுற்று போட்டியில் தமிழகத்தின் வைஷாலி, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பேக் யாகுபோவ் உடன் விளையாடினார்.

    இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் வைஷாலி, உஸ்பெகிஸ்தான் வீரருடன் கைகுலுக்க முயன்றார். ஆனால் அவர் கைகுலுக்க மறுத்து விளையாட ஆரம்பித்தார்.

    வழக்கத்தை மீறி வைஷாலிக்கு நோடிர்பேக் கைகுலுக்க தவிர்த்தது கடும் சர்ச்சையாக மாறியது. மதரீதியிலான காரணங்களுக்காக கை குலுக்கவில்லை என நோடிர்பேக் கூறினாலும், முந்தைய தொடர்களில் வீராங்கனைகளுக்கு கைகுலுக்கியதைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைஷாலிக்கு பூங்கொத்து மற்றும் சாக்லேட்களை வழங்கி உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பேக் யாகுபோவ் மன்னிப்பு கேட்டார்.

    • இந்திய அணிக்காக பல சாதனைகளை சச்சின் படைத்துள்ளார்.
    • ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாச முடியும் என்பதை உலகுக்கு முதன் முதலில் காட்டியவர் சச்சின் டெண்டுல்கர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாச முடியும் என்பதை உலகுக்கு முதன் முதலில் காட்டியவர் சச்சின் டெண்டுல்கர்.

    இந்திய அணிக்காக டெஸ்ட்டில் 200 போட்டிகளும் ஒருநாளில் 463 போட்டிகளிலும் ஒரு டி20 போட்டிகளிலும் விளையாடி அதிக டெஸ்ட் மற்றும் ஒருநாள் ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை சச்சின் படைத்துள்ளார். இதில் டெஸ்ட்டில் 51 சதங்களும் ஒருநாள் போட்டியில் 49 சதங்களும் விளாசியுள்ளார். 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஒரு முக்கிய உறுப்பினராகவும் இருந்தார், 

    இந்நிலையில் இந்திய அணிக்காக பல சாதனைகள் படைத்த ஜாம்பவான் சச்சினுக்கு 2024-ம் ஆண்டின் சிகேநாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை பிசிசிஐ வழங்கவுள்ளது. மும்பையில் நாளை நடைபெறும் பிசிசிஐ-ன் 'நமன்' விருதுகள் நிகழ்ச்சியில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட உள்ளது.
    • கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    சர்வதேச அரங்கில் கடந்த ஆண்டு சிறப்பான பவுலிங் மற்றும் பேட்டிங்கை வெளிப்படுத்தியதற்காக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட உள்ளது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    மகாராஷ்டிராவின் மும்பையில் நாளை நடைபெற உள்ள பிசிசிஐ விருதுகளில் பும்ராவுக்கு மதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருது வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான தொடர் மற்றும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் சிறப்பாக செயல்பட்டமைக்கும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இதேபோல், 2024-ன் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, பும்ராவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
    • அதிரடி ஆல்ரவுண்டர் விலகியது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    சிட்னி:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் முதுகு வலி காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவரது விலகல் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

    ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:-

    பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஸ்சேன், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா.

    • உள்ளூர் போட்டியில் விளையாடும் விராட் கோலியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் டெல்லி மைதானத்தில் அலைமோதியது.
    • விராட் கோலியை போல்ட் செய்த ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை கொண்டாடினார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட வேண்டும் என்று அறிவித்தது. அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.

    இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடினார். இன்று பேட்டிங் செய்ய களமிறங்கிய விராட் கோலியை பார்க்க அந்த மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து, 15 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில், ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் போல்டு ஆனார்.

    உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இந்நிலையில் இந்திய அணியின் ரன் மிஷினாக விளங்கிய விராட் கோலியை போல்ட் செய்த ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை கொண்டாடினார். இதனால் விராட் கோலியை போல்ட் செய்த வீரர் யார் என்பது குறித்து விவரங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் அவரிடம் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    • இறுதிப்போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் பிப்ரவரி 2-ந் தேதி மோதுகிறது.

    கோலாலம்பூர்:

    2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. சூப்பர்6 சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா (குரூப் 1), தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 8.00 மணிக்கு தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    2-வது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. அடுத்து வந்த வீராங்கனைகள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

    இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டேவினா பெர்ரின் 45 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் பருனிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி பொறுப்புடன் ஆடினர். தொடங்க வீராங்கனை ஜி கமலினி- கோங்கடி த்ரிஷா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய த்ரிஷா 29 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமலினி அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இந்திய அணி 15 ஓவரில் 1 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 117 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

    இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி நடக்கிறது.

    • தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பாங்காக்:

    தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன வீரர் வாங் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சீன வீரர் 21-17, 21-16 என்ற செட் கணக்கில் கிடாம்பியை வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • துபாயில் உள்ள மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
    • அவர் ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் இந்தியாவுக்கு முக்கிய பங்காற்றுவார்.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணியின் ஆட்டங்கள் துபாயில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இருக்கிறார். அவர் இந்திய அணியின் ஒரு முக்கிய வீரராக இருப்பார். இந்திய அணி, துபாயில் உள்ள மைதானங்களில் மட்டும்தான் விளையாட இருக்கிறது. அந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே இதில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். அவர் ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் இந்தியாவுக்கு முக்கிய பங்காற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீப காலமாக காயத்தால் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வந்த குல்தீப் யாதவ், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 232 ரன்கள் ஸ்கோர் செய்தார்.
    • நீண்ட காலத்துக்கு பிறகு தனது சாதனையை ஆஸ்திரேலியா முறியடித்துள்ளது.

    இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இலங்கையின் கலெவில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 29-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 654 ரன்களை குவித்தது.

    இது ஆசிய மண்ணில் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 232 ரன்கள் ஸ்கோர் செய்தார். இந்த போட்டியில் இலங்கை 42 ஓவரில் 136 ரன்கள் ஸ்கோர் செய்துள்ளது.



    இதற்கு முன்னர் பாகிஸ்தானை எதிர்த்து 1980 ஆம் ஆண்டு பசிலாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா எடுத்த 617 ரன்களே உச்சபட்சமாக இருந்த நிலையில் நீண்ட காலத்துக்கு பிறகு தனது சாதனையை ஆஸ்திரேலியா முறியடித்துள்ளது. 

    • இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
    • கேப்டன்கள் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வர்.

    9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் எட்டு அணிகள் விளையாடுகின்றன. எட்டு அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டி நடைபெற மூன்று நாட்களுக்கு முன்பு நடத்தப்படும் போட்டோஷூட் இந்த முறை ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த போட்டோஷூட்டில் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளின் கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வர்.

    2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதை அடுத்து, இந்த போட்டோஷூட்டில் கலந்து கொள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா அந்நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்லவில்லை என்று தகவல்கள் வெளியாகின.

    அதன்படி இந்திய கேப்டன் செல்லாத நிலையில், இந்த முறை போட்டோஷூட் வழக்கத்தையே ரத்து செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் துவக்க விழாவையும் ஐ.சி.சி. ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×