என் மலர்
விளையாட்டு
- Dream 11 பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
- ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதிய ஆன்லைன் விளையாட்டுகள் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிதி சார்ந்த நிறுவனங் களான ஜெரோகா, ஏஞ்சல் ஒன், குரோவ், ஆட்டோ மொபைல், எப்.எம்.சி.ஜி. செக்டார், ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்ற நிறுவனங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஸ்பான்சருக்கான போட்டியில் உள்ளன.
- 24 வருடத்திற்குப் பிறகு ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.
- தென்ஆப்பிரிக்காவில் 8 இடங்களில் 44 போட்டிகளை நடத்த திட்டம்.
2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் என்றாலும் பெரும்பாலான போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவில்தான் நடைபெறும். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் மொத்த போட்டிகளில் 44 போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும். 8 இடங்களில் போட்டி நடத்தப்படும். 10 போட்டிகளில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடத்தப்படும் என உலகக்கோப்பை தொடருக்கான தங்களது திட்டங்களை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் விவரித்துள்ளது.
2003ம் ஆண்டு ஆப்பிரிக்கால் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதன்பின் 24 வருடங்கள் கழித்து தற்போது அங்கு நடைபெற இருக்கிறது.
- சுனில் கவாஸ்கர் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர்.
- அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
மும்பை:
வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த ஜாம்வான்களை கவுரவிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அது ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது. இதற்கு ஷரத்பவார் அருங்காட்சியகம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வான்கடே மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சரத்பவார் அருங்காட்சியகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இதன்
நுழைவாயிலில் இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கரின் ஆளுயர சிலையை சரத்பவார் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் 1971 முதல் 1987-ம் ஆண்டு வரை இந்தியா மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடியவர்.
10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர், அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.
ஏற்கனவே வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
- இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசு வீரர் விட் கோப்ரிவா உடன் மோதுகிறார். நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவுடன் மோதுகிறார்.
இதேபோல், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்காவின் டெய்லர் ப்ரிட்ஸ், டாம்மி பால், நார்வேவின் கேஸ்பர் ரூட், ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் உள்ளிட்டோரும் முதல் நாளில் களம் இறங்குகின்றனர்.
நான்கு முறை யுஎஸ் ஓபன் உள்பட மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செர்பியாவின் 38 வயதான ஜோகோவிச், முதல் சுற்றில் அமெரிக்காவின் லர்னர் டியெனை எதிர்கொள்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான பெலாரசின் அரினா சபலென்கா முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ரெபேக்கா மாஸரோவாவுடன் மோதவுள்ளார்.
இதேபோல், போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கோப், ஜெசிகா பெகுலா, மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, இங்கிலாந்தின் எம்மா ராடுகானு ஆகியோரும் முதல் நாளில் களம் காண்கின்றனர்.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் அர்ஜுன் பபுதா, இளவேனில் வாலறிவன் ஜோடி தங்கம் வென்றது.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா, இளவேனில் வாலறிவன் ஜோடி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
இந்த ஜோடி சீன ஜோடியை 17-11 என வென்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றியது.
ஏற்கனவே, தனிநபர் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரையிறுதி போட்டியில் அல்-இத்திஹாட் அணியை தோற்கடித்து அல் நசார் க்ளப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .
- அரையிறுதி போட்டியில் ரொனால்டோ ஜாவோ ஃபெலிக்ஸ்க்கு கொடுத்த Assist-ஆல் வெற்றி கிடைத்தது.
சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடரில் ரொனால்டோவின் அல் நசார் க்ளப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சவுதி சூப்பர் கப் இறுதிப் போட்டியில் அல் ஆலி சவுதி அணியிடம் அல் நசார் க்ளப் அணி மோதியது.
இறுதிப்போட்டி 2-2 என சமன் ஆனதால் நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில், 3-5 என்ற கோல் கணக்கில் அல் ஆலி சவுதி அணி வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் அல் ஆலி சவுதி அணியிடம் அல் நசார் க்ளப் அணி தோல்வி அடைந்ததால் ரொனால்டோ ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அல் நசார் க்ளப்-காக ரொனால்டோ Major கோப்பைகளை இதுவரை வென்றதில்லை என அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சூர்யவன்ஷி 7 போட்டிகளில் விளையாடி 252 ரன்கள் குவித்தார்.
- குஜராத் அணிக்கு எதிராக மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்து வரலாற்று சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி இருந்தார்.
நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலத்தின் போது மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
14 வயதான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என 252 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடும் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்து வரலாற்று சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி இருந்தார்.
இந்நிலையில் மிகத் திறமை வாய்ந்த இளம் வீரராக பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி தனது அடுத்த கட்ட கிரிக்கெட் கரியரை வெகு சிறப்பாக ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்? என்று குறித்த சில ஆலோசனைகளை இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வைபவ் சூர்யவன்ஷியிடம் பிரைன் லாராவை போன்ற பேட்டிங் டெக்னிக் இருப்பதால் அவரிடம் ஆலோசனைகளை பெற்று தன்னிடம் இருக்கும் சிறு சிறு குறைகளை நிவர்த்தி செய்தால் மிகப்பெரிய வீரராக மாறக்கூடிய வாய்ப்பு அவரிடம் உள்ளது. அவருடைய பேட் வேகம் என்பது மிகச் சிறப்பாக உள்ளது. பந்தை அவர் அடிக்கும் விதம் அற்புதமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் அவர் அதனை மெருகேற்ற வேண்டியது அவசியம்.
எனவே அவரைப் போன்று பேட்டிங் செய்யும் லாராவிடமிருந்து பேட்டிங் செய்யும் நுட்பத்தை அவர் கற்றுக் கொண்டால் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுக்க அனைத்து தகுதிகளும் வைபவ் சூர்யவன்ஷியிடம் உள்ளது.
என்று அம்பதி ராயுடு கூறினார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா 198, 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
- பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா 163, 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 - 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் கடைசியாக பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகளுக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடர்களிலும் ஆஸ்திரேலியா தோற்றுள்ளது. குறிப்பாக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 2 தொடர்களிலும் ஆஸ்திரேலியா தோற்றுள்ளது.
அதிலும் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா முறையே 163, 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா முறையே 198, 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
அந்த வகையில் தங்களுடைய சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா முறையே 163, 140, 198, 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 4 தொடர்ச்சியான போட்டிகளில் 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியுள்ளது.
இதற்கு முன் தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஒருமுறை கூட தொடர்ச்சியாக 3 முறைக்கு மேலே 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டானத்தில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 200 ரன்களை கூட தாண்டாத ஆஸ்திரேலியா வரலாறு காணாத மோசமான சாதனை படைத்துள்ளது.
- வங்கதேச மகளிர் அணி 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அணியுடன் முத்தரப்பு தொடரில் விளையாடின.
- வங்கதேச மகளிர் அணி சிவப்பு மற்றும் பச்சை அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடினர்.
2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்குத் தயாராகும் விதமாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் சேலஞ்ச் கோப்பை என்ற தொடரை நடத்தி வருகிறது. இதில் வங்கதேச மகளிர் அணி சிவப்பு மற்றும் பச்சை அணிகளாக பிரிக்கப்பட்டு, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அணியுடன் முத்தரப்பு தொடரில் விளையாடின.
இந்த தொடரின் ஒரு போட்டியில், வங்கதேச 15 வயதுக்குட்பட்ட சிறுவர் அணி, மகளிர் சிவப்பு அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சிறுவர்கள் அணி 50 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மகளிர் அணி வெறும் 94 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் சிறுவர் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், மகளிர் பச்சை அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறுவர் அணி மீண்டும் அதிர்ச்சி அளித்தது.
யாருமே எதிர்பாராத விதமாக, மகளிர் அணிகள் இரண்டுமே 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அணியிடம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன. இது வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக வங்கதேச மகளிர் அணி எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட்டிங் செய்த கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது.
- இதனையடுத்து களமிறங்கிய பார்புடா பால்கன்ஸ் 15.2 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆன்டிகுவா:
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற (இந்திய நேரப்படி) 9-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்சை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்களும், ஹெட்மேயர் 65 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆன்டிகுவா அணி இம்ரான் தாஹிரின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
இதனால் 15.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் 128 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கயானா தரப்பில் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய கேப்டன் என்ற உலக சாதனையை இம்ரான் தாஹிர் (46 வயது 148 நாட்கள்) படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் மலாவி கேப்டன் மொவாசம் அலி பெய்க் தனது 39 வயதில் கேமரூனுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
- வடக்கு மண்டல அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக அங்கித் குமாரும் நியமிக்கப்பட்டனர்.
- துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி தொடங்குகிறது.
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான வடக்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த தொடரில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கித் குமார் தலைமையில் வடக்கு மண்டல அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், வரவிருக்கும் ஆசியக் கோப்பைக்கு அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து எந்தக் கவலையும் இல்லை.
- ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோகித்தை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- கோலி, ரோகித்துக்கு சிறப்பான பேர்வெல் கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி விடை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் 2027-ம் ஆண்டு 38, 40 வயதில் அவர்களால் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மில் அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும்.
இதனால் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோகித்தை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபுறம் அதுவே அவர்களுடைய கடைசித் தொடராக இருக்கும் பட்சத்தில், தங்களுடைய நாட்டில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு சிறப்பான பேர்வெல் கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருடன் விராட் ரோகித்தை கழற்றி விடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுற்றுலா கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
அவர்கள் எப்போது ஓய்வு பெற்றார்கள். விராட், ரோகித் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள். எனவே விளையாடிக் கொண்டிருக்கும் அவர்களுடைய பேர்வெல் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஆம் அவர்கள் மற்ற 2 பார்மெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள்.
பிசிசிஐயில் எங்களுடைய கொள்கை தெளிவாக இருக்கிறது. நாங்கள் எந்த வீரரையும் ஓய்வு பெறுமாறு சொல்ல மாட்டோம். வீரர்கள் தங்களது சொந்த முடிவை எடுக்கிறார்கள். அவர்கள் முடிவெடுத்தால் அதை நாங்கள் மதிக்கிறோம். விராட் மிகவும் பிட்டாக இருக்கிறார். ரோகித் சர்மா நன்றாக விளையாடுகிறார். எனவே அவர்களுடைய பேர்வெல் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்.
என்று சுக்லா கூறினார்.






