search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவீன் குமார்
    X
    நவீன் குமார்

    புரோகபடி ‘லீக்’ போட்டி: 200 புள்ளிகளை தொட்ட டெல்லி வீரர் நவீன்

    புரோ கபடி லீக் போட்டியில் தபாங் டெல்லி அணி வீரர் நவீன் குமார் 200 ரைடு புள்ளிகளை பெற்று இந்த சீசனில் 3-வது வீரராக இடம் பிடித்துள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 10-வது கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அரியானா ஸ்டீலர்ஸ் 39-34 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தி 11-வது வெற்றியை பெற்றது. பாட்னா 11-வது தோல்வியை தழுவியது.

    டெல்லி - பெங்களூர் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த ஆட்டம் 39-39 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    இதன் மூலம் டெல்லி அணி 72 புள்ளியுடன் தொடர்ந்து முதல் இடத்திலும், பெங்களூர் அணி 53 புள்ளியுடன் தொடர்ந்து 5-வது இடத்திலும் உள்ளன.

    இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி வீரர் நவீன்குமார் சிறப்பாக செயல்பட்டார். அவர் 22 முயற்சியில் 14 ரைடு புள்ளிகளை எடுத்தார். இதன் மூலம் அவர் 200 ரைடு புள்ளிகளை தொட்டு முத்திரை பதித்தார்.

    17 ஆட்டத்தில் விளையாடி நவீன்குமார் 211 ரைடு புள்ளிகள் பெற்றுள்ளார். இந்த சீசனில் 200 ரைடு புள்ளிகளுக்கு மேல் எடுத்த 3-வது வீரர் நவீன் ஆவார். பவன்குமார் ஷெராவத், (பெங்களூர்) 232 புள்ளிகளும், பர்தீப் நர்வால் (பாட்னா) 222 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

    இந்த சீசனில் நவீன் ஒட்டு மொத்தமாக 213 புள்ளிகள் பெற்றுள்ளார். பவன்குமார் 245 புள்ளிகள் எடுத்துள்ளார்.

    பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் பவன்குமார் நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் திணறினார். இடை வேளைக்கு பிறகு அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 15 புள்ளிகள் எடுத்து தோல்வியை தவிர்க்க காரணமாக இருந்தார். பவன்குமார் ஒட்டு மொத்தமாக புரோ கபடி லீக்கில் 600 புள்ளிகளை பெற்று முத்திரை பதித்தார்.

    ஒட்டு மொத்தமாக புரோ கபடி லீக்கில் (7 சீசனையும் சேர்த்து) பர்தீப் நர்வால் 1089 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

    தமிழ்தலைவாஸ் அணியில் இந்த சீசனில் ஆடும் ராகுல் சவுத்ரி 996 புள்ளிகள் பெற்று அதற்கு அடுத்த நிலையில் இருக்கிறார்.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டனஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனே அணிகளும் மோதுகின்றன.
    Next Story
    ×