search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் காஞ்சி வீரன்ஸ்
    X
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் காஞ்சி வீரன்ஸ்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது வெற்றியை பெறுமா?- காஞ்சி வீரன்சுடன் நாளை மோதல்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி காஞ்சி வீரன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    4-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதிபெறும்.

    நேற்றுடன் 16 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. காஞ்சி வீரன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தலா 6 புள்ளியுடன் முறையே 2-வது, 3-வது இடங்களில் உள்ளன. நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் தலா 4 புள்ளியுடனும், முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ், காரைக்குடி காளை தலா 2 புள்ளியுடனும் உள்ளன.

    திருச்சி வாரியர்ஸ் தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை. ஒவ்வொரு அணிக்கும் இன்னும் 3 ஆட் டங்கள் எஞ்சியுள்ளன.

    2017-ம் ஆண்டு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 வெற்றி, 1 தோல்வியுடன் இருக்கிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் திருச்சி வாரியர்சை 41 ரன் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் காரைக்குடி காளையை 54 ரன் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் கோவை கிங்சை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது ஆட்டத்தில் காஞ்சி வீரன்சை நாளை (வெள்ளிக்கிழமை) எதிர் கொள்கிறது. இரவு 7.15 மணிக்கு நத்தத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி காஞ்சி வீரன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங்கில் கோபிநாத் (178 ரன்), கங்கா ஸ்ரீதர் ராஜூ (111 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அலெக்ஸாண்டர் (8 விக்கெட்), பெரியசாமி (7 விக்கெட்), முருகன் அஸ்வின் (5 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஹரிஷ்குமார் ஆல்-ரவுண்டர் பணியில் முத்திரை பதித்து வருகிறார்.

    காஞ்சி வீரன்ஸ் அணியும் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் இருக்கிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் 8 விக்கெட்டில் தோற்றது. அதை தொடர்ந்து காரைக்குடி காளை (110 ரன்), மதுரை பாந்தர்ஸ் (7 விக்கெட்), டூட்டி பேட்ரியாட்ஸ் (58 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது.

    சேப்பாக் சூப்பர் கில்லீசை போலவே காஞ்சி வீரன்ஸ் அணியும் முதல் ஆட்டத்தில் மட்டும் தோற்று ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. இதனால் அதிரடியை நீட்டித்துக் கொள்ள இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    முன்னதாக நாளை மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றி யாருக்கு? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நத்தத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை - டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 1 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ளன. 2-வது வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும்.
    Next Story
    ×