search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீராங்கனை பி.வி.சிந்து
    X
    இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - முதல் சுற்றில் சிந்து, பிரனாய் வெற்றி

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    டோக்கியோ:

    ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள சக நாட்டவரான பிரனாய்யை சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். ஆனால் சரிவில் இருந்து மீண்ட பிரனாய் அடுத்த 2 செட்களையும் தனதாக்கி அசத்தினார். 59 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பிரனாய் 13-21, 21-11, 22-20 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்துடன் 6-வது முறையாக மோதிய பிரனாய் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 2-வது சுற்று ஆட்டத்தில் பிரனாய், டென்மார்க் வீரர் ராஸ்முஸ் ஜெம்கேவை எதிர்கொள்கிறார். இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரீகாந்த் கடந்த வாரம் நடந்த இந்தோனேஷியா ஓபன் போட்டியில் 2-வது சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரனாய்


    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சமீர் வர்மா 17-21, 12-21 என்ற நேர்செட்டில் 9-ம் நிலை வீரரான டென்மார்க்கின் அன்டோன்சென்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 46 நிமிடம் நடைபெற்றது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-9, 21-17 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் யூவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 37 நிமிடமே தேவைப்பட்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் சிந்து, ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை சந்திக்கிறார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 21-17 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ்-கிறிஸ் லான்கிரிட்ஜ் இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடியும் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு நடையை கட்டியது.
    Next Story
    ×