என் மலர்

  செய்திகள்

  வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையுடன் 12 அணிகளின் கேப்டன்கள்.
  X
  வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையுடன் 12 அணிகளின் கேப்டன்கள்.

  12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் இன்று தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-மும்பை அணிகள் மோதுகின்றன.
  ஐதராபாத்:

  கபடி வீரர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வரும் புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக அரங்கேறி வருகிறது. 7-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் ஐதராபாத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு தொடங்குகிறது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த வாரங்களில் மும்பை, பாட்னா, ஆமதாபாத், சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், பஞ்ச்குலா, நொய்டா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

  இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், முன்னாள் சாம்பியன்களான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், மும்பை மற்றும் தமிழ் தலைவாஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தா, பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தடவை போட்டி அட்டவணை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். எஞ்சிய 2 அணிகள் எது? என்பது வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று மூலம் முடிவு செய்யப்படும்.

  அக்டோபர் 14-ந் தேதி நடைபெறும் முதலாவது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடிக்கும் அணியும், 6-வது இடம் பெறும் அணியும் மோதும். அதேநாளில் நடைபெறும் 2-வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் 4-வது, 5-வது இடம் பிடிக்கும் அணிகள் சந்திக்கும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அக்டோபர் 16-ந் தேதி அரைஇறுதிப்போட்டியும், அக்டோபர் 19-ந் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டம், அரைஇறுதி ஆட்டம், இறுதிப்போட்டி ஆகியவை நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

  இந்த சீசனுக்காக ஒவ்வொரு அணிகளும் புதிய வீரர்களை வாங்கி இருக்கின்றன. கடந்த 2 சீசனிலும் சோபிக்காமல் ஏமாற்றம் அளித்த அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி நட்சத்திர ரைடர் ராகுல் சவுத்ரி, சபீர் பாபு ஆகியோரையும், தடுப்பு ஆட்டக்காரர்கள் மொகித் சில்லார், ரன்சிங் ஆகியோரையும் தன்வசப்படுத்தி இருக்கிறது. புதிய வீரர்கள் வருகையால் தமிழ் தலைவாஸ் அணி எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி சித்தார்த் தேசாயை ரூ.1.45 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அவர் தான் இந்த சீசனில் அதிக விலைக்கு போன வீரர் ஆவார். அவரின் வருகை தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வலுப்படுத்துமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

  ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-மும்பை அணிகள் மோதுகின்றன. இதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னையில் 11 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. சென்னை சுற்று போட்டிகள் ஆகஸ்டு 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறும். இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

  இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1.80 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.20 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.
  Next Story
  ×