search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி பெற்ற ஐ.ஓ.பி. அணிக்கு கோவை மாநகராட்சி தனிஅதிகாரி விஜயகார்த்திகேயன் பரிசு கோப்பை வழங்கியபோது எடுத்த படம்
    X
    வெற்றி பெற்ற ஐ.ஓ.பி. அணிக்கு கோவை மாநகராட்சி தனிஅதிகாரி விஜயகார்த்திகேயன் பரிசு கோப்பை வழங்கியபோது எடுத்த படம்

    அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஐ.ஓ.பி. அணி வெற்றி

    கோவையில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் ஐ.ஓ.பி. அணி வெற்றி பெற்றது. மகளிர் பிரிவில் தென் மத்திய ரெயில்வே அணி கோப்பையை வென்றது.
    கோவை :

    அகில இந்திய கூடைப்பந்து போட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 26-ந் தேதி முதல் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 7 அணிகளும் பங்கேற்றன. நேற்று மாலை இறுதி போட்டிகள் நடைபெற்றன. போட்டியை சக்தி குழுமங்களின் தலைவர் எம்.மாணிக்கம் தொடங்கி வைத்தார்.

    இறுதிப் போட்டியில் சென்னை ஐ.ஓ.பி. அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும் மோதின. இதில் ஐ.ஓ.பி. அணி 82 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய வருமான வரித்துறை அணி 72 புள்ளிகள் எடுத்தது.

    மகளிர் பிரிவில் சத்தீஷ்கர் மாநில அணியும், தென் மத்திய ரெயில்வே(செகந்திராபாத்) அணியும் மோதின. இதில் தென் மத்திய ரெயில்வே அணி 83 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய சத்தீஷ்கர் மாநில அணி 57 புள்ளிகள் எடுத்தது.



    போட்டியில் வெற்றி பெற்ற ஐ.ஓ.பி. அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழல்கோப்பை வழங்கப்பட்டது. 2-ம் இடம் பெற்ற வருமானவரித் துறை அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர் என்.மகாலிங்கம் கோப்பை வழங்கப்பட்டது. அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தோல்வியை தழுவிய இந்தியன் ரெயில்வே அணி, இந்திய விமானப்படை ஆகிய அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற தென் மத்திய ரெயில்வே அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற்கோப்பை, 2-ம் இடம் பெற்ற சத்தீஷ்கர் மாநில அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தோல்வியை தழுவிய கேரள மாநில மின்சார வாரியம், கிழக்கு ரெயில்வே அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவில் கோவை மாநகராட்சி தனி அதிகாரி கே.விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு கூடைப்பந்து கழக தலைவர் வி.வி.ஆர். ராஜ்சத்யன், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் ஜி.செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×