search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வெப்பப் பக்கவாத அறிகுறிகள்
    X

    வெப்பப் பக்கவாத அறிகுறிகள்

    • புதினா, கொத்துமல்லியை அரைத்து நீரில் கரைத்துப் பருகலாம்.
    • கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நம் உடலை அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பது பற்றித் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்தான் கோடைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. நம் உடலில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

    நம்மைச் சுற்றியுள்ள வெப்பநிலை 40 செல்சியசை தாண்டும்போது, பல்வேறு துயர்களுக்கு நம் உடல் ஆளாக வேண்டியிருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளில் மிகவும் முதலானவை வெப்பப் பக்கவாதம் (Heat Stroke), தொற்று நோய்களின் அதிகரிப்பு, உணவு நஞ்சினால் ஏற்படும் வயிற்றுப் போக்கு ஆகியன.

    வெப்பப் பக்கவாதம் என்றால் என்ன?

    வெப்பப் பக்கவாதம் என்பது வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கடுமையான நோய்களில் இதுவும் ஒன்றாகும். நம் உடலின் வெப்பநிலை 104 பாரன்ஹீட்அல்லது 40 செல்சியசை தாண்டும் போது, உடலின் குளிரூட்டும் தன்மை செயலிழந்து போகிறது.

    இதனால் மூளை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, தன்நினைவை இழக்க நேரிடும். இதையே வெப்பப் பக்கவாதம் என்கிறோம். இதற்கும் ரத்தக் குழாய் அடைப்பால் வரும் பக்கவாதத்திற்கும், எந்தத் தொடர்பும் இல்லை. இவை இரண்டுமே பெரும்பாலும் வயதானவர்களையே தாக்கக்கூடியது.

    வெப்பப் பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது?

    *வெயில் காலங்களில் போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது.

    *மதுப்பழக்கம்.

    *இறுக்கமான உடை அணிவது.

    *வெயிலில் அதிகமாக வேலை செய்வது.

    *நன்கு காற்றோட்டம் இல்லாத அடைப்பட்ட இடத்தில் அதிக நேரம் இருப்பது.

    வெப்பப் பக்கவாதம் - அறிகுறிகள் என்ன?

    *உடலின் வெப்பநிலை அதிகமாதல்

    *மயக்கம்

    *மூச்சு விடுவதில் சிரமம்

    *தலைவலி

    *மனச்சோர்வு

    *மனக்குழப்பம்

    *தன்நினைவை இழத்தல்

    *வியர்வைச் சுரப்பிகள் தன் செயல்திறனை இழந்துவிடுவதால், உடலில் இருந்து வியர்வை வெளியேறாமை.

    பொதுவாக வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது வியர்வை சுரந்து உடலில் வெப்பநிலையைச் சீர் செய்திட முயற்சி செய்யும். ஆனால் இந்த வெப்பப் பக்கவாதத்தில் வியர்வை வரவே வராது.

    வெப்பப் பக்கவாதத்தைத் தடுக்க இதைச் செய்யுங்கள்:

    *அதிக வெயில் நேரங்களில், வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    *ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும் (இதய நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு மருத்துவரின் கருத்துரைகள் தேவை).

    *காலையில் எழுந்தவுடன் நீர் ஆகாரம் எடுத்துக் கொள்ளலாம், இதனோடு சிறிது வெங்காயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

    *புதினா, கொத்துமல்லியை அரைத்து நீரில் கரைத்துப் பருகலாம்.

    *மோர் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

    *குளிர்ச்சியைக் கொடுக்கும் இளநீர், நுங்கு ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

    *ஒரு நாளைக்கு 2-3 முறை குளிக்கலாம்

    *நிறையப் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம்.

    *வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளை அணியலாம்.

    இப்படிச் செய்வதால் வெப்பப் பக்கவாதத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.


    மரு.அ.வேணி

    உணவு நஞ்சாதல் (Food Poisoning):

    வெப்பக் காலங்களில் உணவு, பால், பழங்கள் ஆகிய அனைத்துமே விரைவாகக் கெட்டுவிடும் தன்மையுடையன. ஆகவே சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளை உண்பதற்கு முன்பு வீணாகிவிட்டதா? என்பதைப் பரிசோதித்து, பின் எடுத்துக்கொள்வது நல்லது. சால்மோனெல்லா, கேம்பைலோபாக்டர் போன்ற பாக்டீரியாக்கள் வெயில் காலங்களில் அதிகமாகப் பரவும் தன்மையுடையவை. சில பாக்டீரியாக்கள் பால், பால் சார்ந்த பொருட்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றில் அதிகமாகப் பல்கிப் பெருகக்கூடியன.

    இதுமட்டுமல்லாமல் மேலும் சில பாக்டீரியாக்கள் சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளைக் கெட்டுவிடச் செய்கிறது.

    தொடக்க நிலையில் சிலருக்கு உணவின் சுவை மாறியுள்ளதைக் கண்டறிய முடிவதில்லை. இப்படிக் கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவதால் ஏற்படுவதுதான் உணவு நஞ்சாதல் என்கிறோம்.

    சமைத்த உணவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவதும் உணவு நஞ்சாவதற்கு மற்றுமொரு காரணம் ஆகும்.

    உணவை ஆக்கும் ஒருவரின் கைகள் தூய்மை கெட்டு இருந்தாலும், அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும், அவருக்குள்ள நோயும் உணவின் மூலம் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.

    உணவு நஞ்சாதலின் அறிகுறிகள்:

    கெட்டுப்போன உணவை எடுத்துக் கொண்ட சில மணிநேரங்களிளேயே இதன் அறிகுறிகள் தொடங்கிவிடும். அவையாவன,

    *உடல் சோர்வு, *வயிற்று வலி, *வாந்தி, *வயிற்றுப்போக்கு, *மயக்கம், *வயிற்றுப் பிடிப்பு, *பசியின்மை

    உணவு நஞ்சாவதைத் தடுக்க...

    *சமைத்த 4 மணி நேரத்திற்குள் உணவை உண்டுவிடுவது நல்லது.

    *வெளியிடங்களில் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    *குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    *உணவு ஆக்குவதற்கு மற்றும் உண்பதற்கு முன்பு கைகளை நன்றாகத் தூய்மை செய்ய வேண்டும்.

    *காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நன்கு தண்ணீரில் சுத்தப்படுத்திய பின்பு பயன்படுத்த வேண்டும்.

    *மலம் கழித்த பின்பு கைகளை நன்கு தூய்மை செய்ய வேண்டும்.

    வெயில் காலங்களில் பரவும் தொற்று நோய்கள்:

    அம்மை நோய், தட்டம்மை, சின்னம்மை, விளையாட்டம்மை, காய்ச்சல் (Flu), இருமல், சளிபோன்ற தொற்று நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றவற்களுக்குப் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

    நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்,

    *அதிகம் வெயிலில் செல்வதைத் தவிர்த்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    *கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    *பெரும்பாலான தொற்றுகள் காற்றின் மூலம் பரவுவதால் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது.

    *எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    *வெயில் நேரங்களில் அதிகம் கிடைக்கும் தர்பூசணி, வெள்ளரி மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

    *அடிக்கடி சூடுபடுத்திய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

    ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும், நலமாக வாழவும், வெப்பப் பக்கவாதம், உணவு நஞ்சாதல் மற்றும் தொற்று நோய்கள் இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், மேற்கூறிய தற்காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள்.

    அதிகப்படியாக வியர்ப்பதால், நம் உடலில் உள்ள நீர் மற்றும் உப்புகள் வெளியேறி விடுகின்றன. எனவே வயதானவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்கள் வெப்பச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். எனவே இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

    போன்: 75980-01010, 80564-01010.

    Next Story
    ×