search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஒரே தேசம்... ஒரே பார்முலா!
    X

    ஒரே தேசம்... ஒரே பார்முலா!

    • வாக்குப் பதிவுக்கு முன்பு நடந்த இரண்டு சம்பவங்கள் மேலும் பரபரப்பைக் கூட்டின.
    • இந்தியாவின் புராதன ஆலயங்கள் பலவற்றில் இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

    தமிழ்நாடு-பாண்டிச்சேரி உள்ளிட்ட 102 எம்.பி. தொகுதிகளின் வாக்குப் பதிவு நிறைவு! 2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்டம் இது!!

    நடப்பு தேர்தல் ஏ.ஐ. தேர்தல் என்று வர்ணிக்கப்படுகிறது. 2019-ல் சமூக ஊடக ஆதிக்கம் நிறைந்திருந்தது. இது செயற்கை நுண்ணறிவுக் காலம்.

    தென் சென்னை பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசை கூட ஏ.ஐ. தொழில் நுட்பப் பரப்புரை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    வாக்குப் பதிவுக்கு முன்பு நடந்த இரண்டு சம்பவங்கள் மேலும் பரபரப்பைக் கூட்டின.

    டெல்லி நார்த் பிளாக் இரண்டாவது மாடியில் 16.4.24 அன்று தீ விபத்து ஏற்பட்டது, அது குறித்த செய்திகளை என்.டி.டி.வி. பரபரப்பாக வெளியிட்டது.

    ஏனென்றால் மைய அரசின் மிக முக்கிய கேந்திரம் அது. அங்கு தான் உள்துறை இயங்கி வருகிறது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி எப்படி மர்ம விபத்து ஏற்பட்டது என்ற அய்யமும் கோப்புகளை எரிக்கிறார்கள் என்ற வதந்தியும் உருவாகியது.

    அடுத்தது சூரிய திலகம். பகவான் ஸ்ரீராமர் ரகு வம்சத்தைச் சேர்ந்தவர். சூரிய வழிபாடு அதன் பிரதான கோட்பாடு.

    முதல்கட்டத் தேர்தலுக்கு முன் 17.4.24 அன்று "ராம நவமி" வந்தது. வட இந்தியாவில் அது பிரபலப் பண்டிகை.

    அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் மூலவர் சிலை நெற்றியில் ராமநவமி அன்று 'சூரிய திலகம்' வைத்தால் இந்து ஓட்டு வங்கி கூர்மைப்படும் என்று வாக்கரசியல் கணக்கு பிறந்தது.

    இந்தியாவின் புராதன ஆலயங்கள் பலவற்றில் இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கலாம். அவை எல்லாமே பழங்கால கட்டிடக் கலைச் சிறப்புகள்.

    ஆனால் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்தபோது சூரிய திலகச் சிந்தனை எழவில்லை.


    எனவே அயோத்தி ராமர் கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவுடன் ஆலோசனை நடத்தி வானவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    ரூர்க்கி நகரில் ஐஐடி வான் இயற்பியல் சிறப்பு விஞ்ஞானிகள் ஆலோசனை செய்தனர். பெரிய லென்ஸ்கள், கண்ணாடிகள் மற்றும் குழாய்களை வைத்து சூரியக் கதிர்களைத் திருப்பினார்கள். சுமார் மூன்று நிமிடங்கள் அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் வைத்தனர். சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

    இந்த நிகழ்வு பற்றிய ஒளிபரப்பைப் பிரதமர் மோடி கையடக்கக் கணினியில் கண்டு தரிசித்தார். அதன் பின்னர் ஒரு எமோஷனல் டுவிட்டும் வெளியிட்டார்.

    சென்ற 2019 தேர்தல் இறுதிக் கட்ட வாக்குப் பதிவின்போது செயற்கையாக வடிவமைக்கப்பட்ட குகை ஒன்றில் மோடி தியானம் செய்தது நினைவுக்கு வருகிறதா?

    கோவில் கட்டிடக்கலை மற்றும் நகரத் திட்டம் ஆகியவை முன்கூட்டியே பழங்காலத்தில் திட்டமிடப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் இயற்கையாக நடைபெறுமாறு வடிவமைத்தனர். எந்த லென்சும் தேவையில்லை. நிபுணர்களும் வரவேண்டியது கிடையாது.

    உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலான கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் வானவியல் கண்காணிப்பு மையமாகச் செயல்பட்டது, அங்கு உத்தராயணம் மற்றும் சங்கராந்தி நாட்களில் கோவிலின் மேற்கு நுழைவாயிலுடன் சூரிய உதயம் இணைகிறது.

    இப்படி சூரிய சந்திர உதயம் மற்றும் நகர்வுகளைப் பருவகாலமாக அவதானிக்கும் பார்வைக் கோடுகளை இந்தியாவின் பல்வேறு ஆலயங்களில் இன்னமும் தரிசிக்கலாம்.

    இந்தியாவிலேயே கதிரவன் ஒளி அபிஷேகத்திற்குப் புகழ் பெற்றது ஒரிசா கோனார்க் சூர்ய தேவன் ஆலயம். திருவனந்தபுரம் பத்மநாபர் ஆலயமும் இதற்கு பேமஸ்.

    தராசு ஷ்யாம்


    ஆனால் அனைத்துமே இயற்கை நிகழ்வுகள். இந்தியக் கட்டிடக் கலையின் தொன்மைகள்!

    அயோத்தி ராமர் கோவிலில் இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் 'சூர்ய திலகம்' விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. விஞ்ஞானிகளுக்கு நல்ல வேலை!

    சென்ற 2019 வாக்குப் பதிவில் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளியில் 196-வது எண் ஓட்டுச்சாவடியில் மாதிரி ஓட்டுகளை அழிக்க மறந்துவிட்டனர். ஆனால் வாக்குப்பதிவு தொடர்ந்தது.

    ஒரு மணி நேரத்தில் 63 ஓட்டுகள் பதிவாகியும் விட்டன. ஈ.வி.எம். திடீர் மக்கர். புது மெஷின் வர 2 மணி நேரம் லேட்!

    புதிய இயந்திரம் எடுத்துவந்தபின் மேற்படி 63 ஓட்டுகளைக் கணக்கிடுவதில் பிரச்சனை ஏற்பட்டது! ஏற்கனவே வாக்களித்த 63 பேரை மீண்டும் வரவழைத்து ஓட்டளிக்க வைப்பது என்ற ஐடியாவுக்கு ஏஜெண்டுகள் ஓகே!

    வீடுவீடாகப் போய் 49 பேரை மறு ஓட்டளிக்க வைத்தார்கள். ஆனாலும் கடைசி வரை 17 பேர் ஆப்சென்ட். ஓட்டுப்பதிவு முடியும் வரை அவர்கள் வரவேயில்லை. ஒரு தடவை கேஷ் வாங்கினால் ஒருமுறை தானே ஓட்டுப் போட முடியும்?

    மீதி ஓட்டுகளைக் கட்சிகளுக்குள் பிரித்து பொத்தான்களை அமுக்கிக் கொள்ளுமாறு அதிகாரிகள் முகவர்களிடம் சொல்லிப் பார்த்து இருக்கின்றனர். அதற்கு யாரும் சம்மதிக்கவில்லை.

    எனவே "டேலி" செய்வதற்காக 17 ஓட்டுகளை நோட்டாவுக்குப் பதிவு செய்து கணக்கை முடித்து விட்டனர். அதில் பிரச்சனையாகி மேட்டர் அம்பலப்பட்டது. 2024-ல் எத்தனை வடுகபட்டிகளோ?

    ஈரோடு காங்கேயம் அருகே 2019 தேர்தலில் இன்னொரு கூத்து! வெள்ளகோவிலில் திருமங்கலம் சாவடி எண் 248. மாதிரி ஓட்டை அழிக்காமல் தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

    ஆகையால் மாதிரி ஓட்டு 50 சேர்த்து ஈ.வி.எம்.மில் கணக்கு வந்தது. ஆனால் மொத்தம் பதிவானது 736 மட்டுமே! மாதிரி வாக்கு 50 சேர்த்தால் 786 வர வேண்டும். ஆனால் ஒன்பது குறைவாக 777 மட்டுமே காட்டியது ஈவிஎம். விவரங்களைச் சரிபார்க்கும் போது தான் பிரச்சனை தெரியவந்தது. எப்படி இந்தத் தவறு வந்தது என்று யாருக்கும் புரியவில்லை. எனவே மறு ஓட்டுப்பதிவு நடந்தது.

    தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல்!!. கள்ள ஓட்டுப் பிரச்சனை! ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சென்ற 2019 தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை நிறுத்தி வைத்துக் ஜனாதிபதி ஆணையிட்டார்.

    ஆனால் அதற்கு உட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. அப்பகுதி வாக்காளர்களுக்கு "டபுள் தமாக்கா!" மற்றவர்கள் அக்னி மூச்சு விட்டனர்.

    இந்த முறை இது வரை எந்தத் தொகுதியிலும் தேர்தல் ரத்து ஆகவில்லை. ஆனால் வாக்குப்பதிவிற்குப் பின் கள்ள ஓட்டு மற்றும் பணப் பட்டுவாடா புகார்கள் கிளம்பும் வேகத்தைப் பார்த்தால் இன்னமும் அதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது டபுள் தமாக்கா வைபவததுக்கு இப்போதும் சான்ஸ் உள்ளது.

    சென்ற தேர்தலின் போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையோடு அறிவிக்கப்பட்டது.

    அப்போது ஈ.பி.எஸ். ஆட்சி. அதன் பெரும்பான்மை குறித்த அய்யம் பொதுவெளியில் இருந்தது.

    எனவே எம்.பி. தொகுதிகளில் செலுத்தப்பட்ட கவனிப்பை விட அதிகம் எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களுக்குத் தரப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு முடிந்தது. அதன் பின் எடுக்கப்பட்ட பிரைவேட் சர்வே அபாயச் சங்கு ஊதியது.

    எனவே நிலுவையில் இருந்த மேலும் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களை இறுதிக் கட்ட வாக்குப் பதிவின்போது அறிவித்தது தேர்தல் ஆணையம். கடைசி வரை தமிழகத் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

    நடப்பு 2024 தேர்தலில் அட்டவணையோடு விளவங்கோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. வாக்குப்பதிவும் ஓவர். ஆனால் அதன் பின் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார். அவரது விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    நடப்புத் தேர்தல் அட்டவணையோடு அதை நடத்துவதாக ஆணையம் முடிவெடுக்கலாம்! இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிற ஜூன் முதல் தேதி வரை அதற்கு வாய்ப்பு உள்ளது.

    அப்படியானால் அதுவரை இங்கு தேர்தல் பரபரப்பு இருக்கும். செய்திகளுக்குப் பஞ்சம் இருக்காது.

    வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் எந்தக் கட்சியும் சளைக்கவில்லை. கரண்ட் கட் செய்து கொடுக்கும் பேச்சு கூட இல்லை. எல்லாமே வெரி ஓப்பன்.

    தமிழ்நாட்டில் கட்டிடப் பணிகள் உள்ளிட்ட எல்லா வேலைகளுக்கும் 2-3 நாள் லீவ். வீட்டில் இல்லாமல் போனால் கொடுக்காமல் போய் விடுவார்களோ? இந்த அச்சத்தில் ஏராளமான "பணிப் புறக்கணிப்புகள்!" ஒரே தேசம்..ஒரே பார்முலா!

    செலவுக்குக் கொடுக்கப்பட்ட பணம் முறையாக சென்றடைந்ததா என்று எல்லாக் கட்சிகளும் ரகசிய விசாரணை நடத்துகின்றன. இனி உரிய கணக்கு வழக்குகளைக் கேட்டு முடிவுகளுக்குப் பின் தண்டனை வழங்கும் படலம் துவங்கும்.

    சரித்திரம் திரும்புவது வாக்கரசியல் வாடிக்கை தானே!

    Next Story
    ×