என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  ஒரு வழிப்போக்கனின் பார்வை- உங்களைக் கடனாளியாக்கும் கிரெடிட் கார்டு தேவைதானா?
  X

  ஒரு வழிப்போக்கனின் பார்வை- உங்களைக் கடனாளியாக்கும் கிரெடிட் கார்டு தேவைதானா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

   இன்றைய வாழ்க்கை இலகுவானதல்ல. அசுரத்தனமான கால மாற்றத்தின் அபாயகரமான சவால்கள் ஏராளம். ஒரு நிமிடம்கூட நின்று பேசுவதற்கு நேரம் இல்லாமல் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

   எங்கே ஓடுகிறார்கள்? எதற்காக? 'லபக்' 'லபக்' என்று அவசர அவசரமாக உணவை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு பறக்கிறார்களே. சாலைகளில் எப்போதும் வாகன நெருக்கடி. பேருந்துகளில் ரெயில்களில் மட்டுமல்ல, விமான நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழியத்தான் செய்கிறது.

   வேலை, வியாபாரம், தொழில் என நாள்முழுக்க வாழ்க்கை பரபரப்பாகவே இருக்கிறது. வாழ்வாதாரத்திற்கான ஓட்டம்தான். எனினும் நம்முடைய ஓட்டம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

   நவீன உலகம் பல விதங்களில் நம்மைத் தூண்டுகிறது. ஆசைகளைப் பெரிதாக்கி விடுகிறது. அத்தியா வசியத் தேவைகளுக்கான செலவினை மீறி, இன்று ஆடம்பர ஆசைகளுக்கான செலவுகள் அதிகமாகிவிட்டன.

   உழைப்பு முக்கியம். சம்பாத்தியம் முக்கியம். அதைவிடவும் செம்மையான வாழ்க்கை முறை மிக முக்கியம். அது இருந்தால்தான், சிக்கல்களுக்குள் சிக்கிக் கொள்ளாத வாழ்க்கை நமக்கு சாத்தியமாகும்.

   தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஒரு வரையறை கிடையாது. அவற்றிற்கு நாம்தான் ஒரு எல்லைக் கோட்டினைப் போட்டுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் கடிவாளம் இல்லாத காட்டுக் குதிரைபோல் மனம் திரியும்; கண்டதை எல்லாம் வாங்கச் சொல்லும். கஷ்டமும் நஷ்டமும்தான் வந்து சேரும்.

   வருமானம் வருகிறது. அதைக் கவனமாகக் கையாள்வதே புத்திசாலித்தனம். சிக்கனமாக வாழத் தெரிந்தவர்கள் சிறிய வருமானத்திலும் சேமிப்பைப் பெருக்குகிறார்கள். அவர்கள் சிக்கலில் சிக்கிக் கொள்வதே இல்லை. காரணம் என்ன? கட்டுப்பாடான வாழ்க்கை முறை.

   இன்று நம் ஆசையைத் தூண்டி நம்மைக் கடனாளியாக்குவதில் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு முனைந்து நிற்கின்றன. 'கிரெடிட் கார்டு' என்னும் பெயரில் கவர்ச்சிமிகு வஞ்சக வலைகள் நமக்குமுன் விரிக்கப்படுகின்றன. அந்த மாய வலையில் சிக்கிதான் பலர் கடன் என்கிற புதைகுழிக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.

   'கிரெடிட் கார்டு' முதலில் நம் கைகளில் புறாவைப்போல் வந்து, பின்னர் பூதமாகி நம்மை விழுங்கிவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு உபகாரம் செய்வதுபோன்ற பாவனையில், 'கிரெடிட் கார்டு'களை வங்கிகள் கூவிக் கூவி விற்கின்றனவே, ஏன்? வட்டி வியாபாரம். அதுவும் கடுமையான கொடுவட்டி.

   வங்கியில் பணத்தைச் செலுத்த ஒருநாள் தாமதமாகிவிட்டால் அநியாய அபராதம். அந்த அபராதத் தொகைக்கும் வட்டி. கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்த பணத்தை, பல மடங்குகளாய் திருப்பிச் செலுத்தும் அவலத்தை மறந்துவிடாதீர்கள்.

   பலர் தங்கள் மணி பர்சில் விசிட்டிங் கார்டுகளைப்போல் கிரெடிட் கார்டுகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதை மிகப் பெரிய கவுரவமாகவும் நினைக்கிறார்கள். ஆனால், அதன்முடிவு? தீர்க்க முடியாத கடன்பாரம், மன உளைச்சல், தூக்கமின்மை...ஒவ்வொரு நாளும் வேதனையின் விடியல்.

   கடன்சுமை உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடும். வட்டி கட்டி மாளாது. சாப்பிட மனம் வராது. வேலையில் கவனம் செலுத்த முடியாது. மன அழுத்தம் ஏற்படும். அதனால் உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகும்.

   இப்படி எத்தனை பேருடைய வாழ்க்கையை கிரெடிட் கார்டு விழுங்கிக் கொண்டிருக்கிறது. கடன் பிடியில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். எனவே, நமக்கு நம் வாழ்வின் மீதான பொறுப்புணர்வும், சரியான பாதையைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியம்.

   நமக்கு முந்தைய தலைமுறையினர், 'கிரெடிட் கார்டு' என்னும் கேடுகெட்ட 'கடன் கலாச்சார'த்தைக் கண்டதில்லை. அவர்கள் தங்கள் வருமானத்திற்கேற்ப திட்டமிட்டு வாழப் பழகி இருந்தார்கள். மாதாந்திர வரவு செலவுகளில் கவனமாகச் செயல்பட்டார்கள். அதனால்தான் அவர்களுடைய வாழ்க்கை தடுமாற்றமில்லாமல் இயங்கியது.

   உழைப்பை மதித்தார்கள். வியர்வையின் ஊதியத்தை மதித்தார்கள். எனவே, பணத்தை எண்ணி எண்ணிச் செலவிட்டார்கள்.

   காலையில் வீட்டில் காபி குடித்தால், மாலையில் வீடு திரும்பிய பின்தான் மீண்டும் ஒரு கப் காபி. வெளியே கடையில் வாங்கிக் குடிப்பதற்கு யோசிப்பார்கள். பண்டிகைக்குத் துணி எடுக்க ஜவுளிக் கடைக்குப் போனாலும், கையில் இருக்கும் பணத்திற்குள்தான் எடுத்து முடிப்பார்கள்.

   பீரோவில் துணிகளுக்கு நடுவிலும், கடுகு சீரக டப்பாக்களிலும் நம் தாய்மார்களின் சேமிப்பு இருக்கும். பெரும்பாலான வீடுகளில் மண்கலய உண்டியல் இருந்தது. சில்லறைரை நாணயங்களை அதில் சேமிப்பார்கள். அந்தப் பழக்கமே சேமிப்பின் சிறப்பை உணர்த்தியது.

   அவசரத்தேவைகளில் சின்னச் சின்ன சேமிப்புகள் அவர்களுக்குக் கைகொடுத்தன. பிள்ளைகளின் கல்வி, திருமணம், எதிர்பாராமல் ஏற்படக்கூடிய செலவுகள் ஆகியவற்றிற்கெல்லாம் அவர்கள் தங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொண்டார்கள்.

   கைமாற்றாக வாங்குவதையே தன்மானப் பிரச்சினையாகக் கருதியதால்தான், சிக்கனத்தைப் கடைபிடித்தார்கள்; சிறப்பாக வாழ்ந்தார்கள்.

   இப்போது வருமானம் பெருகிவிட்டது. இன்றைய இளைஞர்கள் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். வேலையைத் தேர்ந்தெடுப்பதிலும் சம்பாதிப்பதிலும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அது மகிழ்ச்சியான விஷயம்.

   ஆனால், சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்றால், இல்லை. காரணம், கைவசம் கிரெடிட் கார்டுகள் இருப்பதால் கண்டபடி செலவு செய்கிறார்கள்.

   உடனே பணம் செலுத்தத் தேவை இல்லை. கார்டை 'ஸ்வைப்' பண்ணினால் போதும் என்ற எண்ணம்தான், தேவையற்ற பொருட்களையும் தேடித் தேடி வாங்கச் சொல்கிறது.

   சிலர் அடிக்கடி புதுப்புது செல்போன்களை வாங்குகிறார்கள். புது மாடல்கள் மீது அவர்களுக்கு அப்படியொரு மோகம்.

   டி.வி. நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கும். கடை வீதிக்குப் போகிற போக்கில் ஒரு புது டிவியை வாங்குவார்கள். அதில் பல சிறப்பம்சங்கள் இருப்பதாகக் காரணம் சொல்வார்கள்.

   கார், பைக், நகை வாங்குதல்... எல்லாமே இப்போது சுலபமாகிவிட்டன. எல்லாமே 'கிரெடிட் கார்டு' நடத்துகின்ற மாயஜாலம்தான்.

   ஓட்டல், சினிமா, ஆடைகள் வாங்குவது... எல்லாவற்றிற்கும் கிரெடிட் கார்டுதான். இன்டர்நேஷனல் கிரெடிட் கார்டு வசதிகளும் இருக்கின்றன. ஆக, எங்கு சென்றாலும் கடனாளியாகப்போவது நீங்கள்தான்.

   மாதாந்திர தவணைத் தொகையும், அதைச் செலுத்த வேண்டிய தேதியும் பற்றிய தகவல் வங்கியிடமிருந்து வரும்போதுதான் மனம் பதறும். மாதத் தவணைத் தொகையின் உயரம் வருமானத்தை விஞ்சி நிற்கும். அப்படியெனில், மாதச்செலவுக்கு என்ன செய்வது? பணத்திற்கு எங்கு போவது?

   மீண்டும் கடன். அடுத்தடுத்து கடன். வட்டிமேல் வட்டி. பின்னர் வட்டியைச் செலுத்துவதற்குக்கூட பணம் இல்லாத பரிதாப நிலை.

   தொழிலில் சிலருக்குத் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுவிடும். சறுக்கிக்கொண்டே போவார்கள்.

   நிம்மதியான வாழ்வில் எதிர்பாராத விதமாகச் சிலருக்குப் பொருளாதார நெருக்கடி வந்துவிடும். கட்டத் தொடங்கிய வீடு பாதியில் நிற்கும். கார் பறி போகும்.

   காரணம் இதுதான். தகுதிக்கு மீறிய ஆசை. சக்திக்கு மீறிய கடன்சுமை. இறுதியில், அச்சு முறிந்த வண்டிபோல் வாழ்க்கை விழுந்து விடுகிறது.

   எனவே, வரவு செலவுகளைப் பற்றிய தெளிவு அவசியம்.

   தவிர்க்க முடியாத திடீர்த்தேவைக்கோ, முக்கியமான காரணங்களுக்காகவோ கடன்பெற வேண்டிய நியாயமான சூழ்நிலை ஏற்படலாம். அப்போது கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால் அந்தக் கடன்தொகை உங்கள் சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். திருப்பிச் செலுத்துவதில் எந்தச் சிரமமும் இருக்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரமாகக் கொடுத்து முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக கடனை அடைத்துவிட வேண்டும். ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடனை வாங்காதீர்கள். அது பெரும்பாரமாகிவிடும்.

   முக்கியமாக, கிரெடிட் கார்டு பயன்பாட்டை அறவே தவிர்த்திடுங்கள். ஏற்கனவே அதில் அதிகளவு கடன்பட்டிருந்தால், உடனடியாக அதைக் கொடுத்து முடித்துவிட வழிபாருங்கள். அதன் பிடியில் இருந்து விடுபடத் தீர்மானியுங்கள். இல்லை என்றால், உங்கள் வருமானம் முழுவதையும் அது அட்டைபோல் உறிஞ்சிக்கொண்டே இருக்கும். அதனால்தான் அதற்கு 'கடன் அட்டை' என்று பெயர்.

   *மாத வருமானத்தை மனதில் கொண்டு செலவுகளைத் திட்டமிடுங்கள்.

   *ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிப்புக் கணக்கில் வையுங்கள்.

   *புதிதாக ஒரு பொருளை வாங்க நினைக்கும்போது, அது உடனடித் தேவையா என்பதை நன்கு சிந்தியுங்கள்.

   *குடும்பத்தின் மாதாந்திரச் செலவுகளுக்குக் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

   *கடன் வாங்குபவனை நண்பர்கள் மதிக்க மாட்டார்கள்; உறவினர்கள் உதறித் தள்ளுவார்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்துங்கள்.

   *கடன்படாத வாழ்க்கை கோடிபெறும்; கடனில்லாத வாழ்வே மரியாதைக்குரிய வாழ்வு என்பதை உறுதியாக நம்புங்கள்.

   அப்புறம் பாருங்கள். உங்கள் வாழ்க்கை சிறக்கும். நிம்மதியும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்வில் செழிக்கும்.

   (மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்)

   தொடர்புக்கு :9940056332

   Next Story
   ×