search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திரைக் கடல் பயணம்- பழையனவற்றைக் காப்போம்!
    X

    திரைக் கடல் பயணம்- பழையனவற்றைக் காப்போம்!

    • பெரிய நிறுவனங்கள் தம் படங்களின் தலைப்படிகளை எண்ம வடிவிலாக்கி வைத்திருப்பார்கள்.
    • நமக்கும் முன்னே வாழ்ந்தவர்கள் இயல், இசை, நாடகம் என்று உணர்ச்சியோடு பங்களித்த ஈடுபாடுகள்.

    தமிழ்த் திரைப்படங்கள் இதுவரை எத்தனை வந்திருக்கும்? முறையான பட்டியல் உண்டா? 1931-ம் ஆண்டில் காளிதாஸ் என்ற திரைப்படம் வந்தது. இதனையே முதல் பேசும் படமாகக் கூறுவார்கள். அது முதல் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகின்ற படம்வரைக்கும் இதுவரை எத்தனை படங்கள் வெளியாகி இருக்கும்?

    எப்படிப் பார்த்தாலும் கடந்த தொண்ணூறு ஆண்டுகளில் ஏறத்தாழ ஏழாயிரம் தமிழ்ப்படங்கள் வெளியாகி இருக்கலாம். இது குத்து மதிப்பான கணக்குத்தான். அது ஆறாயிரமாக இருக்கலாம். எட்டாயிரமாகவும் இருக்கலாம். நாம் ஏழாயிரம் என்று எடுத்துக்கொண்டோம்.

    ஏழாயிரம் படங்களைத் தொகுத்து வகுத்து ஒரு கற்பனை செய்து பார்ப்போம். படத்திற்குப் பத்துக் கலைஞர்கள் என்று வைத்துக்கொண்டால்கூட இந்த ஏழாயிரம் படங்களில் எழுபதாயிரம் கலைஞர்கள் பங்கேற்றிருப்பார்கள். படத்திற்கு நூறு பேர் என்று கொண்டால் இந்த ஏழாயிரம் படங்களில் ஏழு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றியிருப்பார்கள். ஏறத்தாழ நான்காயிரம் இயக்குநர்கள் இப்படங்களில் பங்களித்திருப்பார்கள். அவ்வெண்ணிக்கையிலேயே ஒளிப்பதிவாளர்களும் இருக்கக்கூடும். படத்திற்கு முதலிட்ட முதலாளிகள் சில ஆயிரங்களில் இருக்கக்கூடும். ஆயிரத்தைத் தொடுமளவு எண்ணிக்கையிலான இசையமைப்பாளர்கள் இசைத்திருக்க வேண்டும். படத்தொகுப்பாளர்கள், கலை இயக்குநர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், நடனத்துறையினர், சண்டைக்காட்சியினர் என்று பார்த்தால் அவர்களும் பல பத்தாயிரங்களில் அடங்குவர். எப்படிப் பார்த்தாலும் இந்தத் தமிழ்த் திரைப்படத்துறை பத்து லட்சத்திற்கும் மிகுதியானவர்களால் ஆக்கப்பட்டதுதான்.

    தமிழ் மக்களாகிய நாம் திரைப்படங்களை விரும்பிப் பார்த்தவர்கள். பிற நாடுகளில் திரைப்படங்களை எப்படிப் பார்த்தார்களோ, நாமறியோம். நாம் திரைப்படங்களுக்காக உயிரைவிட்டோம். இதனை ஒரு பேச்சுக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே உயிரைவிட்டோம். 'இணைந்த கைகள்' என்ற திரைப்படம் வெளியானபோது நுழைவுச் சீட்டு பெறுவதற்காகக் கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர் உண்டு. இது கோவையில் நடந்தது. இன்றைக்கு இணையதளத்தில் நுழைவுச் சீட்டு பதிந்துகொள்கிறோம். அதனால் நெரிசல் குறைந்துவிட்டது.

    காண்பதற்குரிய திரைகள் தொலைகாட்சி, கைப்பேசி, கணினி எனப் பரவிவிட்டதற்காகத் திரைப்படத்திற்கு உரிய கவர்ச்சி சிறிதாவது குறைந்திருக்கிறதா? குறையவே இல்லை. அகவை மூத்தவர்கள் தம் திரைப்பட ஈடுபாடுகளைக் குறைத்துக்கொண்டிருப்பார்கள். வாழ்க்கை சார்ந்த நெருக்கடிகள் மிகுந்ததால் திரைப்படம் பார்த்தல் குறைந்திருக்குமே தவிர, அவர்களும் படம் பார்க்க விரும்புபவர்கள்தாம். எல்லாப் படங்களையும் பார்க்காவிட்டாலும் அவ்வப்போது பெருவெற்றி பெறுகின்ற படங்களைப் பார்த்துவிடுவார்கள்.

    மக்கள் வாழ்க்கையில் இவ்வளவு இன்றியமையாமையாக விளங்கிய, விளங்குகின்ற திரைப்படங்கள் எவ்வாறு காப்பாற்றப்படுகின்றன ? முன்னாடி ஏழாயிரம் படங்கள் என்று பார்த்தோமே, அவை அனைத்தும் முழுமையாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா ?

    ஏ.வி.எம். போன்ற நிறுவனத்தினர் அத்தொழிலைத் தலைமுறை தலைமுறையாகச் செய்தவர்கள். தங்கள் படங்கள் ஒவ்வொன்றையும் தனியே காப்புச் செய்து வைத்திருப்பார்கள். இன்றைக்கும் அவர்களுடைய வளாகத்திற்குள் காவற்கிடங்கு இருக்கக்கூடும். சிறிய முதலாளி என்ன செய்திருப்பார்? என்றோ எப்போதோ கலையார்வம் முற்றி, ஊரிலிருந்த காடு தோட்டங்களை விற்றுப் படமெடுக்க வந்தவர் சில படங்களை எடுத்தார் எனக்கொள்வோம். ஒரு கட்டத்தில் இழப்புற்று அனைத்தையும் இழந்த நிலையில் தாமெடுத்த சிலபல படங்களை என்ன செய்திருப்பார் ? அவரே கடன்மிக்குற்று வெளித்தெரியாது ஒதுங்கி வாழும் நிலையில் அவரால் எப்படிப் படச்சுருள்களைப் பாதுகாக்க முடியும் ? காலக்கறையான் பட்டு அழிய வேண்டியதுதான்.


    ஒரு படத்தின் தலைப்படி (நெகட்டிவ்) எனப்படுகின்ற படச்சுருளைப் பாதுகாத்து வைத்தால்தான் அதிலிருந்து புதிய படிகளை எடுக்க முடியும். அந்தப் புதிய படிகள்தாம் படமோட்டப் பயன்படும். அந்தப் படச்சுருளை முறையான நிழலில், முறையான வெப்பநிலையில், முறையான காற்று ஈரப்பதக் காவலில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அதில் பதிவாகியிருந்த படப்பதிவு மங்கத் தொடங்கிவிடும். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்படச்சுருள்களை வேதிவினைக்குட்படுத்தியும் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். தலைப்படியிலிருந்து பதிவு எடுக்கப்பட்ட படச்சுருள்களைக்கூட சில ஆண்டுகள் வரைக்கும்தான் பயன்படுத்த முடியுமாம். அந்தச் சுருளும் அத்தகைய பாதுகாப்பு வரம்புக்கு உட்பட்டதுதான். இன்றைக்குப் படச்சுருளைத் திரையில் ஓட்டும் ஒளிபெருக்கிகள் (புரொஜக்டர்) அருகிவிட்டன. எந்தத் திரையரங்கிலும் படச்சுருளை ஓட்டும் அக்கருவி இன்று இருக்க வாய்ப்பில்லை. அரும்பொருள் ஆகிவிட்டது. அதனை ஒரு நினைவுப்பொருள்போல் கருதி வைத்திருப்பார்கள்.

    படச்சுருள்களில் உள்ள படங்களை எண்மப் பதிவுகளாக (டிஜிட்டல்) மாற்றி வைக்க வேண்டும். அதற்குரிய அறிவியல் தொழில்நுட்ப முறைகளைத் தேர்ந்து ஒவ்வொருவரும் செய்து வைத்தால் அவற்றைப் பாதுகாக்கலாம். தொலைக்காட்சி பரவலானதும் ஒவ்வொரு திரைப்படமும் காணொளிப் பேழையாக (வீடியோ கேசட்) வெளியானது. அந்தப் பதிவு ஓரளவுதான் தெளிவாக இருக்கும். வெள்ளித்திரையில் படச்சுருளைக்கொண்டு ஒளிபாய்ச்சிக் காட்டுகின்ற திரைப்படத்தின் தெளிவிற்கு முன்னர் எதுவுமே நிற்க முடியாது.

    இன்றைக்கு வருகின்ற நான்காயிரம், எட்டாயிரம் அளவிலான நுண்ணிலைப் படங்கள்தாம் படச்சுருள் திரையீட்டுப் படத்திற்கு அருகில் வருகின்றன. பெரிய நிறுவனங்கள் தம் படங்களின் தலைப்படிகளை எண்ம வடிவிலாக்கி வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் படச்சுருள்களையும் இயன்ற காலம்வரை பாதுகாத்து வைக்க வேண்டும்தான்.

    நொடித்துப் போன முதலாளிகளிடமும் வட்டிக்குக் கடன் தந்தவர்களிடமும் இந்தப் படச்சுருள்கள் படாத பாடு பட்டிருக்கின்றன. மிகவும் நெருக்கடி ஏற்பட்டால் "இந்தா இந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு போ" என்று படச்சுருள் பெட்டியைப் பிணையாகக் கொடுத்திருக்கிறார்கள். வாங்கிச் சென்ற வட்டிக்கடைக்காரருக்கு அதன் அருமை பெருமை தெரியுமா? கொண்டுபோய் அப்படியே வைத்திருப்பார். அங்கே தூசு படும். ஒளி படும். வெப்பம் படும். என்றாவது ஒருநாள் அதனை மீட்டு எடுத்துக்கொண்டு வரும்போது துருவேறி நகர மறுக்கும் மிதிவண்டிபோல் பயன்பாடற்றுப் போகும். திரைத்தொழில் மீது அன்புற்றுச் செய்யும் முதலாளிதான் இத்தகைய மீட்பு நடவடிக்கையில் இறங்குவார். அவர் படமெடுத்து நொடித்துப்போய் காடுகரைகளை விற்று இழந்த பின்னர் மிச்சமானது இந்தப் படச்சுருள் பெட்டிதான் என்றால் என்னாகும்? நாங்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் காரணம் இதுதானே என்று அவருடைய பிள்ளைகளே படச்சுருளைத் தீயிட்டு மாய்ப்பார்கள்.

    இதற்கு அரசு ஏதும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே நகரில் நிறுவப்பட்டுள்ளது. இங்கே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் காக்கப்படுகின்றன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படக் கையெழுத்துப் படிகள், ஐம்பதாயிரம் புகைப்படங்கள் உள்ளனவாம். ஆனால், இங்கும் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டன. ஒரு தீ விபத்தில் அறுநூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் சாம்பலாகின. அவற்றில் தாதா சாகேப் பால்கே எடுத்த படங்கள் முதற்கொண்டு அடக்கம். பிற்பாடு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கான படச்சுருள்கள் அழிந்து போயுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் எண்மப்படுத்திக் காக்க முயல்வதுதான் உடனடித் தீர்வு.

    மற்றவர்களை விடுங்கள், நாம் திரைப்படப் பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். நம்மிடம் ஒலிப்பேழைகள் எனப்படுகின்ற ஆடியோ கேசட்டுகள் இருக்கலாம். ஒலிப்பேழைகள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. அவற்றைக் காவல் செய்து வைத்திருக்கிறோமா ? என்னிடம் நூற்றுக்கணக்கான ஒலிப்பேழைகள் உள்ளன. காசு பணம் வீட்டுப் பத்திரம் வைத்துள்ள நிலைப்பேழையில்தான் அவற்றையும் வைத்திருக்கிறேன். அதன் மதிப்பு எனக்கு அவ்வளவு பெறுமதியுடையதாகத்தான் தெரிகிறது. அதனை ஓடவிட்டு எண்மப் பதிவுகள் ஆக்கிக்கொள்ளும் கைப்பேசிச் செயலிகள் பல உள்ளன. உங்களிடம் இருப்பினும் காப்புச் செய்து வாருங்கள். நம்மால் செய்ய முடிந்தது இவ்வளவே.

    ஒரு படம் என்கின்ற அளவிலேயே இவ்வளவு விளைபொருள்கள் இறைந்து கிடக்கின்றன. என்ன செய்வது, எப்படிக் காப்பது என்று தெரியவில்லை. இவற்றைப் பல்லாயிரம் மக்கள் சேர்ந்து உருவாக்கினர். அழிந்தால் அழியட்டுமே என்று விட்டுவிட முடியாது. ஏனென்றால் அவை காலப் பதிவுகள். கலைச்செயல்கள். நமக்கும் முன்னே வாழ்ந்தவர்கள் இயல், இசை, நாடகம் என்று உணர்ச்சியோடு பங்களித்த ஈடுபாடுகள். முன்னே சொன்னபடி எழுபதாயிரம் கலைஞர்களில் நூறு கலைஞர்களை நாம் அறிந்திருப்போமா, மற்றவர்கள் அவற்றைத் தோற்றுவிக்க - நம்மை மகிழ்விக்க - தம்மை இருளுக்கு ஒப்புக்கொடுத்து ஒதுங்கிக்கொண்டவர்கள். அவர்களுக்கு நம்மால் இயன்ற கைமாறு இதுதான்.

    தொடர்புக்கு:-

    kavimagudeswaran@gmail.com

    செல்: 8608127679

    Next Story
    ×