search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பற்றற்ற நிலையே ஆனந்த வாழ்வு!
    X

    பற்றற்ற நிலையே ஆனந்த வாழ்வு!

    • எதிர்காலத்தை பற்றி நாம் திட்டமிடலாம், தவறு எதுவும் இல்லை. அதையே நினைத்து கொண்டும் ஏங்கிக்கொண்டும் இருக்க கூடாது.
    • துறவு என்றால் நாம் நினைப்பது எல்லாவற்றையும் விட்டு விட்டு அப்படியே காவி உடை உடுத்தி கொண்டு துறவு செல்வது அல்ல.

    அன்பார்ந்த வாசகர்களே, மனிதர்களாகிய நாம், வாழும் காலத்திலேயே தன்னை அறிதலுக்கு வழி வகுக்கும் ஒரு உள் நோக்கிய பயணம் ஆகும். இந்த பயணத்திற்கு முதற்படி, புற உலகத்தோடு இருக்கும் தொடர்பு ஆனது துண்டித்தல் அல்லது அந்த தொடர்பு ஆனது நம் மனதை ஒரு போதும் பாதிக்காமல் இருத்தல் அவசியம். இதற்கு அடிப்படையாக இருப்பது நமது உடல் நலம் ஆகும். அதற்கு உடலுக்கும் உயிருக்கும் ஒத்த உறவு வேண்டும். இந்த உறவு நம்முடைய இறுதி மூச்சு இருக்கும் வரை வேண்டும்.

    ஏனென்றால் நம்மோடு உறவாடி கொண்டு இருக்கின்ற பொருள்களும் உறவுகளும் ஒவ்வொறு நாள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு பிரியும். ஆனால் இறுதி மூச்சு வரை நம்மோடு வரக்கூடியது நம் உடல் மட்டுமே. எனவே நம்முடைய வாழும் காலத்திலே ஆனந்தம் அமைதி பெற ஒரே வழி தான் உள்ளது. உண்மையான இறை உணர்வு பெறாதவருக்கு, கட்டுப்பாடு உடைய மனமோ, நிலையான அறிவோ இருப்பது இல்லை. இவைகள் இல்லை என்றால் ஆனந்தம் கிடைக்காது. அந்த உன்னதமான உணர்வாக அறியப்படும் பொருள், உன்னை நீ ஆராய்ச்சி செய்தால் மட்டுமே முடியும்.

    குறிப்பாக இந்த அண்டத்திலே உள்ளது, பிண்டத்திலும் உள்ளது என்று சொல்லும் வேதாந்தம் மற்றும் சித்தாந்தம் ஆனது, அண்டத்திலும், பிண்டத்திலும் உள்ள மூல பொருள் ஒன்றே என்ற கோட்பாட்டை முன் வைக்கிறது. மகான்கள் இந்த கோட்பாட்டை ஏற்று கொண்டாலும், தங்கள் அறிவின் திறத்தால், சுய ஆராய்ச்சி மூலமாக தனது சிந்தனையை வேறு விதமாக செலுத்தி ஒரு பேருண்மையை கண்டறிந்தார்கள்.

    அந்த பேருண்மை, அண்டத்தில் உள்ள எந்த சக்தியாக இருந்தாலும், அவை அனைத்தும் ஏதோ ஒரு நிலையில் மனித உடலில் செயல்படுகிறது என்ற முதல் பேருண்மையை உணர்ந்தார்கள். ஒரு மனிதருடைய சக்தியின் அளவு மற்றும் செயல்திறன் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறதே ஒழிய, நம் உடலோடு தொடர்பு இல்லாத சக்திகள் என்பது நம்மிடம் இல்லை என்பதை மகான்கள் அடுத்த கட்டமாக உணர்ந்தார்கள். எனவே அறிபவருக்கு மூலமாக உள்ள இந்த உடலையும் அதன் இயக்கங்களையும் ஆராய்ந்து பார்த்த மகான்கள் அது 96 தத்துவங்களாக இயங்குவதை மூன்றாவதாக கண்டறிந்தார்கள். இந்த 96 தத்துவங்களை சீராக செயல்பட வைப்பது எவ்வாறு என்பது குறித்து, அறிபவர்.

    சுய ஆராய்ச்சி செய்து, அறியப்படுபவருடைய சக்தியை, கால நேரம் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாற்றி, நம் உடலில் செயல்பட செய்து, 96 தத்துவங்களை சீராக இயங்க செய்து, அறிபவருடைய தேகத்திலே எப்படி அழியா வண்ணம் நீண்ட ஆயுளாக மாற்றுவது என்பதை நான்காவதாக கண்டறிந்தார்கள்.

    இயற்கை சக்திகளின் இயக்கம் மாறி கொண்டே இருக்கும். நம்மையும் அதற்கு தகுந்தாற் போல் மாற்றி கொண்டு, நாம் ஒவ்வொருவரும், இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழும்போது, உடலில் இயற்கையாக நடைபெற வேண்டிய செயல்கள், தங்கு தடையின்றி செயல்படுவதும், நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழவும் முடியும். மேலும் அந்த நிலையிலே அறியப்படும் பொருளை வாழும் காலத்திலேயே உணரலாம் என்பதை மகான்கள் கண்டறிந்தார்கள். அந்த நிலையிலேயே நாம் ஒவ்வொறு நிமிடமும், நம்மையும், நம்மை சுற்றி உள்ளவைகளையும், கவனித்து கொண்டே இருக்க பழகி கொள்ள வேண்டும். அப்படி பழகி கொள்ளும்போது ஒரு உண்மை வெளிப்படும்.

    அது என்னவென்றால், நான் இந்த உடல் அல்ல, மனமும் அல்ல, இந்த உலகை பார்வையிட வந்த ஒரு பார்வையாளர் மட்டுமே. அதாவது வெறும் சாட்சி மட்டுமே. எதுவும் செய்கிறவன் நான் அல்ல என்கின்ற நிலமை விளங்கும். இதில் இருந்து என்ன புரிகிறது? குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும்போது, பேருலகம் என்கின்ற சத்திரத்திற்கு வரும்போது, எவரும் எதுவும் கொண்டு வருவது இல்லை. அதே போல இதில் இருந்து புறப்பட்டு போகும்போது, எதுவும் நாம் கொண்டு போக போவதில்லை. இதில் உலகிலே மக்கள் பற்று, குடும்ப பற்று எங்கே? சொத்து பற்றோ, பொருள் பற்றோ எங்கு இருக்கிறது?

    இன்னும் கொஞ்சம் விரிந்து உணர்வோம். எவ்வளவோ பொருட்களை தனது என்று உரிமை பாராட்டுகிறோம். இருக்கட்டும்! நம் குடல் சீரணிக்கும் அளவுக்கு மேல் நம்மால் உண்ண முடியுமா? சுமக்கும் அளவுக்கு மேல் நம்மால் ஆடையை உடுத்த முடியுமா? உடல் பருமனுக்கு மேல் நாம் நிலத்தை அனுபவிக்க முடியுமா? இந்த உண்மைகளை அறிபவராகிய நாம், விளங்கி கொண்டு அடிக்கடி நினைத்து, அறிவில் அழுத்தமாக பதிவு செய்து கொண்டு, குடும்பத்திலே அவரவர் கடமைகளை ஆற்றினால், இது பற்று அற்ற வாழ்வாக மாறும். அப்போது அறிபவராகிய நாம் அறியப்படுபவராகிய இறைவனை உணர முடியும்.

    அந்த நிலையிலே, எந்த சிக்கலையும், எளிதில் தீர்க்கக்கூடிய கூர்மையும், அறிவுக்கு எப்போதும் இருக்கும். நிறைவும், அமைதியும் இந்த நிலையில் தான் அறிபவருக்கு கிடைக்கும். அதே மன அலை சுழல் வேகத்தில், தினமும் உடலுக்கு, மனதுக்கு, உயிருக்கு ஆன பயிற்சிகள் மற்றும் சுய ஆராய்ச்சி செய்தால், அறியப்படுபவரை அறியும் தகுதி நமக்கு கிடைக்கும். அந்த நிலையில், புலன்களை, புற உலகோடு தொடர்பு கொள்ளாமல், இருக்க பழகி கொள்ளும் பயிற்சி நமக்கு கிடைக்கும். அப்போது நம்மால் நினைத்த மாத்திரத்தில், எண்ணம் உதிக்கின்ற இடத்தில் நம்மால் நிற்க முடியும். அந்த நிலையிலே மனதின் எஜமானராகிய ஆத்மாவுடன் இணையும் தரிசனம் கிடைக்கும்.

    இந்த நிலையில், அறிபவராகிய நாம், அறியப்படும் இறைவனை உணரும்போது, அந்த நொடியிலேயே முக்தி கிடைக்கும். இந்த நிலையை உணர்வதற்கு குரு அருள் இல்லாமல் சாத்தியம் இல்லை, அந்த குருவின் பயிற்சிகள் மூலமாக, இந்த அறியப்படும் பிரம்ம வித்தையை பயிலும்போது தான் நாம் இல்லறத்தில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லாமல், இறை உணர்வு பெற்ற யோகியாக மாறுகிறோம்.


    மனவளக்கலை பேராசிரியர்கள் கி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன், போன்: 9444234348

    இந்த நிலையில் நாம் வாழும்போது நமது கர்மாவின் பதிவுகளை உணர்ந்து அதன்படி நமது வாழ்க்கையின் செயல்களை செய்வதால், அறிபவரும் அறியப்படுபவரும் ஒன்றே என்பது வாழும் காலத்திலேயே விளங்கும். வேதாந்த சித்தாந்த ஞானிகள், இதை மூன்று நிலைகளாக பிரிக்கிறார்கள். பொது நிலை, அமைப்பு நிலை, தத்துவ நிலை.

    பொது நிலை: என்பது நமது அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மூலம் இறைவனை உணர்வது ஆகும்.

    அமைப்பு நிலை: என்பது, ஆலய வழிபாடு மற்றும் தர்மம், கர்மம், மோட்சம், முக்தி ஆகிய நிலைகளில் இறைவனை உணர்வது ஆகும்.

    தத்துவ நிலை: என்பது தன்னிடம் உள்ள அறிவின் மூலமாக மற்றவர்கள் கூறுகின்ற அனுபவத்தையும் வைத்து, அறுதி உண்மையை அறிவது அல்லது ஆராய்வது தான் உயர்ந்த பிரணவ நிலை. இந்த நிலையை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தவம், தற்சோதனை மற்றும் மௌனம் மூலம் பயிற்சிகளாக கொடுத்து இருக்கிறார்கள். வேதங்களும் இதை தான் நான்கு நிலைகளில் உபதேசமாக சொல்லி இருக்கிறது.

    ரிக் வேதத்தில், மந்திரத்தின் மூலமாக இறைவனையே தியானிப்பது ஒரு நிலை.

    யஜீர் வேதத்திலே, யாகத்தின் மூலமாக இறைவனையே தியானிப்பது ஒரு நிலை.

    சாம வேதத்திலே, இசையின் மூலமாக, சத்சங்கத்தின் மூலமாக தியானிப்பது ஒரு நிலை.

    அதர்வன வேதத்திலே, மாந்திரிகம் மற்றும் ஹடயோகம் மூலமாக தியானிப்பது ஒரு நிலை.

    இப்படி வேதத்திலே அறியப்படுபவரை அறிய, உணர உபதேசங்கள் கொடுத்தார்கள்.

    ஏனென்றால் நாம் காணுகின்ற இந்த உலகம் என்பது உண்மையில் போலியானது. அதாவது நாம் காணுகின்ற அனைத்துமே நம் கண்களால் பார்க்கும்போது அவை உண்மை என்று தோன்றினாலும், அவை அனைத்தும், இறையின் பிம்பங்களே. இந்த உணர்வு எப்போது நமக்கு வருகிறதோ அது தான் ஞானம்.

    ஆனால் நாம் அனைவரும் நம் கடந்த காலத்தில் நடந்ததையே நினைத்துக்கொண்டு இருக்கிறோம், அல்லது எதிர்காலத்தை நினைத்து கற்பனை கனவுகளை வளர்ந்து கொள்கிறோம். உண்மையில் சொல்ல வேண்டுமானால், கடந்து போன காலத்தை பற்றி நினைப்பவர்கள், மரித்தவர்கள் ஆகிறார்கள். எதிர்காலத்தை பற்றி நினைத்து கொண்டு இருப்பவர்கள், இன்னும் பிறக்கவில்லை என்று சித்தர்கள் சொல்கிறார்கள். ஏனென்றால் நேற்றைய பொழுது என்பது இல்லாதது. நம் கையை மீறி சென்றுவிட்டது.

    எதிர்காலத்தை பற்றி நாம் திட்டமிடலாம், தவறு எதுவும் இல்லை. அதையே நினைத்து கொண்டும் ஏங்கிக்கொண்டும் இருக்க கூடாது.

    இப்போது நம் கையில் இருப்பது இன்று என்கின்ற நிகழ்காலம் மட்டுமே நிஜம். எனவே எவர் ஒருவர், தன் ஐந்து புலன்கள் (தோல், நாக்கு, மூக்கு, கண், காது) உணர்வுகளோடு வாழ்க்கையை எதிர்கொண்டு பற்று அற்ற நிலையில் தனது ஆன்மானவ உணர முற்படுகிறாரோ, கூடவே புத்தியையும் இணைத்து எவர் ஒருவர் அந்த நிலைக்கு செல்கிறாரோ அவராலே ஞானத்தை அடைய முடியும்.

    இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், நாம் இல்லற வாழ்வில் இருந்து கொண்டே, ஒரு சந்நியாசியாக இருக்கும் மனம் எப்போது நமக்கு வருகிறதோ அதுவே ஞானம், அவரே ஞானி ஆவார். ஞானத்தின் சொரூபம் சந்நியாசம், நம் ஆத்மா தான் சந்நியாசி. சந்நியாசி ஆகாமல் ஞானம் வராது. நாம் ஆத்மாவாக இருந்து பழக வேண்டும். ஞானம் என்பது சந்நியாச லச்சணம் என்கிறது.

    சந்நியாசம் என்றால் பொதுவாக துறவிகள் என்போம். துறவு என்றால் நாம் நினைப்பது எல்லாவற்றையும் விட்டு விட்டு அப்படியே காவி உடை உடுத்தி கொண்டு துறவு செல்வது அல்ல. உண்மையான துறவு என்பது எதையும் விட்டுவடுவது இல்லை இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வது தான் உண்மையான துறவு ஆகும். உண்மையான துறவின் ஆராய்ச்சி தொடரும்.

    Next Story
    ×