search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் எல்லோருக்கும் எளிதானதே!
    X

    வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் எல்லோருக்கும் எளிதானதே!

    • மாணவர்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.
    • மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் வெளிநாட்டில் மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்தல் அவசியம்.

    மருத்துவக்கல்வி மற்றும் மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழும் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முதல் உயர்கல்வி விருப்பம், கனவு, ஆசை அனைத்துமே எம்.பி.பி.எஸ். ஆக மட்டுமே நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத்திலேயே கடவுளுக்கு அடுத்த நிலையில் எல்லோரும் உயர்வாக மதிப்பது மருத்துவர்களைத்தான். சமீபகால கொரோனா பேரிடர் சமயத்தில் உலக மக்களுக்கு மருத்துவ சமுதாயம் ஆற்றிய சேவை அளப்பரியது. அவ்வாறான விலைமதிப்பற்ற இந்த மருத்துவக் கல்வி ஏராளமான மாணவர்களுக்கு கிடைக்கும் நோக்கத்தில் நமது அரசாங்கங்கள் எடுத்த சீரிய முயற்சியால் இன்று தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    தற்போதைய தேசிய மருத்துவ ஆணையத்தின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 74 மருத்துவக் கல்லூரிகளில் (அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உட்பட) 11,000க்கும் அதிகமான மருத்துவக்கல்வி இடங்கள் உள்ளன.


    வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி

    தேசிய மருத்துவச் செலவுக்கான தேர்வு வாரியத்தின் 2020-ம் ஆண்டு புள்ளி விவரப்படி சுமார் 45 வெளிநாடுகளுக்கு மாணவர்கள் மருத்துவக்கல்வி (எம்.பி.பி.எஸ்.) கற்கச் சென்று வருகின்றனர்.

    இதில் அதிக அளவில் இந்தியாவின் நீண்ட நாளைய நட்பு நாடான ரஷ்யா மற்றும் அதனிடமிருந்து பின்னாளில் பிரிந்த அர்மீனியா, கிர்கிஸ் குடியரசு, ஜார்ஜியா, கஜகிஸ்தான், உக்ரைன் மற்றும் இந்தியாவிற்கு மிக அருகிலுள்ள பங்களாதேஷ், நேபாளம், கிழக்கு ஆசிய நாடான சைனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

    இதில் ரஷ்யா மற்றும் அதனுடன் முன்பு இணைந்திருந்த நாடுகளான அர்மீனியா, கிர்கிஸ் குடியரசு, ஜார்ஜியா, கஜகிஸ்தான், உக்ரைன் மற்றும் பெரும்பாலான நாடுகளில் மருத்துவக் கல்வியானது 6 வருட படிப்பாகவும் எம்.டி. (Medical Doctor) எனும் பட்டமாகவும் வழங்கப்படுகிறது.

    மற்றும் பங்களாதேஷ், நேபாளம் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்தியாவை போன்று 5 மற்றும் 5½ வருட படிப்பாகவும் எம்.பி.பி.எஸ் எனும் பட்டமாகவும் வழங்கப்படுகிறது.

    ஏன் வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர்?

    அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்ப தேர்வாக இருப்பது எம்.பி.பி.எஸ். மட்டுமாக இருப்பதால் மாணவர்களின் மதிப்பெண், பொருளாதாரம், மருத்துவக்கல்லூரி இடங்கள் என பல்வேறு காரணிகளால் மருத்துவச் செலவுக்கான எம்.பி.பி.எஸ். ஆசை இருந்தும் பெரும்பாலானாவர்களுக்கு அது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.


    அவ்வாறான மாணவர்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியானது மாணவர்களின் மதிப்பெண்களை தாண்டி அவர்களின் உயர்கல்வி விருப்பத்தை முதன்மையாகக் கொண்டுள்ளது. இதனால் மேல்நிலைக் கல்வியில் 50 சதவீத மதிப்பெண்களுடன் மருத்துவம் பயில உண்மையான விருப்பமுள்ள மாணவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழகங்கள் சிறந்த தேர்வாக உள்ளன. இந்தியாவில் மருத்துவக்கல்வியை ஒழுங்கு படுத்தும் நோக்கில் 1933-இல் துவங்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளைப் பின்பற்றி 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் பல்வேறு வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி பயிலச் சென்று வந்தனர். தற்போது கடந்த சில ஆண்டுகளாக மாற்றிய மைக்கப்பட்ட புதிய இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் 18-11-2021 விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயிலச் செல்கின்றனர்.

    இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிகள்

    வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்வியின் தரம் மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம் ஆகியன இந்திய மருத்துவக் கல்வியின் தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கடந்த 18-11-2021-ல் இந்திய தேசிய மருத்துவ ஆணையம் சில விதிமுறைகளை வகுத்து வெளியிட்டது. அதன் விவரம் பின்வருமாறு:

    4(a)(i)வெளிநாட்டில் இந்திய மாணவர்கள் பயிலும் மருத்துவக் கல்வியானது குறைந்தது 54 மாதங்கள் இருக்க வேண்டும். (அதாவது இந்திய மருத்துவக் கல்வியைப் போன்றே 4½ வருடங்கள் மருத்துவக் கல்வி)

    (ii)மருத்துவக் கல்வி பயிலும் அதே கல்லூரியில் குறைந்தது 12 மாதங்கள் உள்ளுறை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    (இதுவும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் உள்ளுறை பயிற்சியை போன்றதே)

    (iii)மருத்துவக் கல்வியானது ஆங்கில வழி கல்வியாக இருக்க வேண்டும்.

    (iv)தேசிய மருத்துவ ஆணையத்தின் அட்டவணை I-ல் குறிப்பிடப்பட்டுள்ள கண்டிப்பான பாடங்கள் அனைத்தும் பயிற்றுவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.



    4(b)அந்த நாட்டிலுள்ள சம்பந்தப்பட்ட உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் அல்லது மருத்துவ பட்டம் வழங்கிய நாட்டின் நீதிமன்ற எல்லைக்குட்பட்டு மருத்துவராகப் பணிபுரிய உரிமம் வழங்கப்பட வேண்டும். அதோடு அந்த நாட்டு மக்களுக்கு மருத்துவம் பார்க்க உரிமம் வழங்கப்பட வேண்டும்.

    (c)தேசிய மருத்துவ ஆணையத்தில் விண்ணப்பித்து குறைந்தது இந்தியாவில் 12 மாதங்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    (d)தேசிய மருத்துவ ஆணையத்தில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    அட்டவணை-1

    வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் நிரந்தர பதிவு பெறுவதற்கான அளவுகோல்கள்:

    2(i)வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்களின் பாடத்திட்டம், செய்முறை, மருத்துவப் பயிற்சி என அனைத்தும் இந்தியாவின்க்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையாக இருத்தல் வேண்டும்.

    (b)12 மாதங்கள் உள்ளுறை பயிற்சியை அதே மருத்துவக் கல்லூரியில் நிறைவு செய்திட வேண்டும். அதனுடன் கீழ்க்கண்ட மருத்துவப் பாடங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பாட விவரம் பின்வருமாறு:

    Community Medicine, General Medicine, Psychiatry, Paediatrics, General Surgery, Anesthesia, Obstetrics and Gynaecology, Orthopaedics, Otorhi nolaryngology, Ophthalmology, Dermatology, Emergency or Casualty Services, Lab Services and their sub-specialities.

    (ii)கல்வி பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தேவைப்பட்டால் பார்வையிடப்படும்.

    (iii)முழு கல்வி காலம், பயிற்சி, உள்ளுறை பயிற்சி என அனைத்தும் வெளிநாட்டில் ஒரே மருத்துவக் கல்லூரியில் நிறைவு செய்திடல் வேண்டும்.

    (iv)மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் வெளிநாட்டில் மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்தல் அவசியம்.

    நீட் தேர்வும் வெளிநாடு மருத்துவக் கல்வியும்

    கடந்த 2017-ம் ஆண்டில் இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வானது கட்டாயமாக்கப்பட்ட சூழலில் 2018-ம் ஆண்டு முதல் வெளிநாடு சென்று மருத்துவக்கல்வி படிப்பதற்கும் நீட் அவசியம் என தேசிய மருத்துவ ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்குகள் மற்றும் கொரோனா பேரிடர் போன்ற காரணங்களால் அடுத்த சில வருடங்களில் வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு நீட் விலக்கு தரப்பட்டது. மேலும் 05-04-2019 தேதியிட்ட அறிக்கையில் "ஒரு மாணவன் நீட் தேர்வில் தகுதி பெற்ற மதிப்பெண்ணானது அடுத்து 3 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிக்க செல்லுபடியாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தகுதி மதிப்பெண்

    மருத்துவக் கல்விக்கு நீட் கட்டாய மாக்கப்பட்டது முதலே நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்ணானது, 720க்கு நடத்தப்படும் நீட் தேர்வில் 90 முதல் 150 வரை மட்டுமே இருந்துள்ளது.

    வருடம்

    பொது

    ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி

    2018

    119

    96

    2019

    134

    107

    2020

    147

    113

    2021

    138

    108

    2022

    117

    93

    2023

    137

    107




    அதாவது பொது பிரிவினருக்கு மொத்தம் 720க்கு 117 முதல் 147 வரை மட்டுமே தகுதி மதிப்பெண்ணாக உள்ளது. மேலும் ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 93 முதல் 113 வரை மட்டுமே இதுவரை தகுதி மதிப்பெண்ணாக உள்ளது.

    மேலும் வெளிநாடு செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், நாடுகள், கல்லூரிகள் பற்றிய விவரங்கள், வங்கிக்கடன் பற்றிய விவரங்கள், மாணவர்களை அனுப்பும் நிறுவனத்தை தேர்வு செய்வது உட்பட விரிவான விவரங்களை வரும் வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.

    Next Story
    ×