search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருமண யோகம் தரும் விருவிடந்தை வராகர்
    X

    திருமண யோகம் தரும் விருவிடந்தை வராகர்

    • திருமணம் நடப்பதற்கும் இந்தக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? பெருமாளுக்கு இங்கே தினசரி கல்யாணம் நடப்பது ஏன்?
    • திருவிடந்தையில் மூலவர் தன் திருநாமத்திலேயே நித்ய கல்யாணப் பெயரைக் கொண்டுள்ளதால், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா? கிழக்கு கடற்கரை சாலைக்கு வெறும் ஜாலியாக மட்டும் செல்லாமல், திருவிடந்தை சென்று ஆறரை அடி உயரத்தில் பிரமாண்டமாக அருளாட்சி புரியும் நித்திய கல்யாணப் பெருமாளை தரிசனம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை ஒளி பொருந்தியதாக மாறும்.

    திருவிடந்தை கோவில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்திலும் அமைந்திருக்கிறது. பிராட்வேயில் இருந்து பிபி-19, தி.நகரிலிருந்து ஜி-19 பஸ்கள் செல்கின்றன.

    இந்த ஊரின் பெயர் நித்திய கல்யாணபுரி. கடவுளின் பெயர் நித்ய கல்யாணப் பெருமாள். கோவில் விமானமோ கல்யாண விமானம். திருக்குளத்தின் பெயர், கல்யாண தீர்த்தம்.

    ஆதிவராகப் பெருமாளும் அகிலவல்லி நாச்சியாரும் கோமளவல்லித் தாயாரும் தினசரி காட்சி தருவதும் கல்யாணக் கோலத்தில் தான். ஆலயத்தின் தலமரமோ, மணவிழாவிற்கு உகந்த புன்னை.

    பெருமாளுக்கு இங்கே தினந்தோறும் கல்யாணம் நடக்கிறது. 'கல்யாணம் ஆகாதவங்க ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இங்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தால் போதும், ஒரு மாதத்துலயே கல்யாணம் நிச்சயம் ஆயிடும். வரவங்க ரெண்டு மாலைகளை வாங்கிட்டு வரணும். அர்ச்சனை பண்ணி ஒரு மாலையைப் பெருமாளுக்குச் சாத்துவார்கள். இன்னொண்றை கழுத்துல போட்டுக்கிட்டு, சம்பந்தப்பட்டவங்க பிரகாரத்தைச் சுற்றிவரணும். அப்புறமா அந்த மாலையை வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போய், சாமி படத்துக்கிட்ட வச்சு வணங்கினாப் போதும். கல்யாணம் நிச்சயமாயிடும்.

    திருமணம் நடப்பதற்கும் இந்தக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? பெருமாளுக்கு இங்கே தினசரி கல்யாணம் நடப்பது ஏன்?


    அதற்கான புராண வரலாறு வருமாறு:-

    பண்டைய காலத்தில் திருவிடந்தைக்கு அக்காலத்தில் மேகநாதன் என்ற அசுரன் இருந்தான். அவனது மகன் பலிச்சக்கரவர்த்தி.

    இந்த பலிச்சக்கரவர்த்தி உலகினைத் தர்ம சாஸ்திரத்தின்படி, முறையாக ஆட்சிபுரிந்து வந்தான். இவனது நண்பர்களான மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூவரும் தேவர்களுக்கு எதிரான போரில் தோல்வியடைந்து பலிச்சக்கரவர்த்தியிடம் சென்று அடைக்கலம் புகுந்தனர். தனது நண்பர்களுக்காக பலிச்சக்கரவர்த்தி தேவர்களுக்கு எதிராக போரிட நேரிட்டது.

    இதனால் ஏற்பட்ட பாவத்தினைப் போக்க பலிச்சக்கரவர்த்தி திருவிடந்தையில் தவம் புரிந்தான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பலியின் முன்பு தோன்றி அவனுக்கு வேண்டிய வரம்களை அளித்தார். இவ்வூரின் அழகில் மயங்கிய இறைவன் திருவிடந்தையிலேயே தங்கிவிட்டார்.

    திருவிடந்தையில் மூலவர் தன் திருநாமத்திலேயே நித்ய கல்யாணப் பெயரைக் கொண்டுள்ளதால், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் முனிவர் ஒருவரும், அவரது பெண்ணும் சொர்க்கம் அடையத் தவம் இருந்தனர். இதில் முனிவரின் பெண் முதலில் சொர்க்கம் அடையத் தகுதி பெற்றார். அவர் திருமணமாகாத பெண் என்பதால் சொர்க்கம் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

    நாரதர் பூலோகத்தில் இருந்த முனி புங்கவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினார். காலவ ரிஷி என்ற முனிவர் அவளை மணந்து கொண்டார்.

    முனிவருக்கு ஒரே வருடத்தில் 360 பெண் குழந்தைகளைப் பெற்றுத் தந்துவிட்டு சொர்க்க லோகம் சென்றுவிட்டாள் அவரது மனைவி. அத்தனை பெண் குழந்தைகளை வைத்து, காப்பாற்றச் சிரமப்படும் முனிவர், இறுதியில் இந்த திருவடந்தைக்கு வந்தார்.

    இங்கே அருள்பாலிக்கும் வராக மூர்த்தியை வணங்கினார். தேவர்களுடன் போரிட்டதால் சாபம் பெற்ற பலி மன்னனுக்கும் காட்சி தந்து ரட்சித்த வராகர், இவர் தான் என்பதால், தன் மகள்களுக்கும் இவரே நல்வாழ்க்கையை அமைத்துத் தருவார் என்று நம்பினார் காலவ மகரிஷி.

    முனிவரின் கவலையைத் தீர்க்க, வராகப் பெருமாள், பிரம்மசாரி உருவெடுத்து பெண் கேட்டு வந்தார். தினம் ஒரு கன்னிகை வீதம் 360 நாட்களுக்கு ஒவ்வொருவராகத் திருமணம் செய்து கொண்டார். பெருமாள். கடைசி தினத்தில் 360 மனைவிகளையும் ஒன்றாகச் சேர்த்து அனைத்து ஒரே பெண்ணாக ஆக்கி தன் இடத்து பக்கத் திருத் தொடையில் வைத்துக் கொண்டு வராகப் பெருமாளாக அனைவருக்கும் காட்சியளித்தார். (இப் போதும் அதே காட்சியை நாம் தரிசிக்கலாம்).

    360 கன்னிகள் சேர்ந்து ஒருங்கே உருவானதால், வராகரின் இடபாகத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லித் தாயார் என்றும் வருடம் பூராவும் திருமணம் செய்து கொண்டதால், வராகருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. 360 பெண்களில் மூத்தவளின் பெயர் கோமளவள்ளி என்பதால், இங்கே தனிக் கோவிலில் காட்சி தரும் தாயாருக்கும் கோமளவள்ளிஎன்றே பெயர். 'திரு' (லட்சுமியை) தனது இடது பக்கத்தில் பெருமாள் வைத்துக் கொண்டதால் இந்த ஊருக்கு 'திருஇடவெந்தை' என்ற பெயர் ஏற்பட்டது.

    தினந்தோறும் திருமணம் செய்து கொண்ட பெருமாளை தரிசனம் செய்வதால், இங்கே வரும் பக்தர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெற்று விடுகிறது.

    திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் தங்களது பெற்றோர் அல்லது உறவினர்களுடன் இந்த ஆலயத்திற்கு வரவேண்டும்.


    இரண்டு மாலைகள் வாங்க வேண்டும். ரோஜா மாலையாக இருந்தால் நல்லது. அர்ச்சகர் அந்த மாலைகளை தாயாருக்கு அணிவித்து பரிகாரம் செய்யப்பட வேண்டியவரின் பெயரில் அர்ச்சனை செய்வார். பிறகு இரண்டு மாலைகளில் ஒரு மாலையை மட்டும் எடுத்து வந்து தருவார்.

    அதை திருமணத்துக்கு உரியவர் தானே தனது கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு ஆலயத்தை 9 முறை சுற்றி வரவேண்டும். பிரகாரத்தை வலம் வரும்போது விரைவில் தனக்கு நல்ல இடத்தில் திருமணம் கைக்கூட வேண்டும் நித்திய கல்யாணப்பெருமாளிடம் மனமுருக வேண்டிகொள்ள வேண்டும்.

    9 தடவை பிரகாரத்தை சுற்றி முடித்ததும், கொடிமரம் அருகில் வந்து சாஷ்டாங்மாக விழுந்து வழிபட வேண்டும். பிறகு அந்த மாலையை தானே கழற்றி எடுக்கவேண்டும். அதை ஒரு பைக்குள் பத்திரமாக வைத்து வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டும். வீட்டில் அந்த மாலையை பூஜை அறை விசாலமாக இருந்தால் அங்கே வைத்துவிடலாம். அல்லது சுற்றில் அணியில் அடித்து அதில் தொங்கவிட்டுவிடலாம்.

    தினமும் பூஜை அறையில் விளக்கேற்றி சாமிக்கும்பிடும் போது குலதெய்வத்தை வணங்கிவிட்டு நித்தியகல்யாணப்பெருமாளையும் மனத்திற்குள் நினைத்து வழிபட வேண்டும். அந்த பெருமாளின் அருளால் நிச்சயம் விரைவில் திருமணம் கைக்கூடிவிடும். குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக திருமணம் நடைபெறும். பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் இது நடந்து உள்ளது.

    திருவிடந்தை பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்கு சமம் என்று கூறலாம். 108 திருப்பதிகளில் பெருமாள் வராகமூர்த்தியாக தரிசனம் தரும் திருப்பதியும் இது மட்டும்தான். தம்பதி சமதேராக ஆதிசேஷன், பெருமாள் திருவடியைத் தாங்கி சேவை சாதிப்பதால், இங்கே வந்து நித்ய கல்யாணப் பெருமாளை வணங்கினால் உங்கள் ராகு, கேது தோஷங்களும் நீங்கிவிடும். உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டிப்பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளதால் அவர்களை வணங்கினால் இதுநாள் வரை உங்களுக்கு ஏற்பட்ட திருஷ்டிகளும் பறந்துவிடும்.

    Next Story
    ×