search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சபரிமலை கோவிலில் அரவணை டின்களை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரிய தேவசம்போர்டு
    X

    சபரிமலை கோவிலில் அரவணை டின்களை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரிய தேவசம்போர்டு

    • அதிகளவில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக கூறப்பட்ட 6.65 லட்சம் அரவணை டின்கள் தனியாக வைக்கப்பட்டன.
    • இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இதனால் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தேவசம் போர்டு தீவிரமாக செய்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த மகர விளக்கு பூஜை சீசனின்போது அரவணையில் அதிக அளவு பூச்சி மருந்து இருப்பதாக அரசு அறிக்கை வெளியிட்டதால், ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் அரவணை உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் அதிகளவில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக கூறப்பட்ட 6.65 லட்சம் அரவணை டின்கள் தனியாக வைக்கப்பட்டன.

    பின்பு உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட சோதனையில் ஏலக்காய் அடிப்படையிலான அரவணை சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அரவணை தயாரிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் பயன்படுத்தாவிடில் அது உண்ண முடியாததாக ஆகிவிடும். ஆகவே 6.65 லட்சம் டின்கள் அரவணையை பயன்படுத்த முடியாததாகியது. அவை அனைத்தும் அரவணை டின்கள் வைக்கப்படும் குடோனில் தனியாக வைக்கப்பட்டன.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. அதற்காக அரவணை பிரசாதம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. புதிய அரவணை டின்களை வைக்க வேண்டும் என்றால் ஏற்கனவே பயன்படுத்தாமல் உள்ள 6.65 லட்சம் அரவணை டின்களை அப்புறப்படுத்தியாக வேண்டும்.

    ஆகவே பயன்படுத்தப்படாமல் உள்ள 6.65 லட்சம் அரவணை டின்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு அனுமதி கோரியுள்ளது. விரைவில் அந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×