search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை- பிரதமர் மோடிக்கு நன்றி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை- பிரதமர் மோடிக்கு நன்றி

    • நாங்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்.
    • இந்திய அரசின் தொடர் முயற்சியால் தான் நாங்கள் விடுதலை ஆகி இருக்கிறோம்.

    கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்களான கேப்டன்கள் நவ் தேஜ் சிங் பால், சவுரப் வலிந்த், கமாண்டர்கள் பூர்ணேந்து திவாரி, பிரேந்திர குமார் வர்மா, சுகுணகர் பகவுலா,சஞ்சீவ் குப்தா, அமித்நாக் பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேர் பணியாற்றி வந்தனர்.

    இவர்கள் 8 பேர் மீதும் கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் கத்தார் கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. பின்னர் இந்தியா சார்பில் சட்ட பூர்வமாக எடுத்த நடவடிக்கையினால் இந்த மரண தண்டனை குறைக்கப்பட்டது.


    ஆனாலும் தொடர்ந்து அவர்களை விடுவிப்பதற்காக இந்திய வெளியுறவு துறை சார்பில் கத்தார் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இதன் பலனாக கைது செய்யப்பட்ட 8 பேரையும் 18 மாதங்களுக்கு பிறகு கத்தார் அரசு விடுதலை செய்தது. இதையடுத்து இவர்களில் 7 பேர் விமானம் மூலம் இன்று அதிகாலை டெல்லி வந்து சேர்ந்தனர். விமான நிலையத்தில் அவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரவேற்றனர். விமானத்தை விட்டு இறங்கும் போது அவர்கள் பாரத் மாதாகி ஜே என்று முழக்கமிட்டனர்.

    நாங்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். நிச்சயமாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

    ஏனென்றால் அவரது தனிப்பட்ட தலையீட்டால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. அவர் தலையீடு இல்லாமல் நாங்கள் இங்கு நின்றிருக்க முடியாது. இந்திய அரசின் தொடர் முயற்சியால் தான் நாங்கள் விடுதலை ஆகி இருக்கிறோம். அதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பிரதமருக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


    Next Story
    ×