search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூருவில் கொலை செய்யப்பட்ட அரசு பெண் அதிகாரியின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைப்பு
    X

    பெங்களூருவில் கொலை செய்யப்பட்ட அரசு பெண் அதிகாரியின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைப்பு

    • பிரதிமா வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே உள்ள துடுகி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரதிமா (37). இவர் பெங்களூருவில் உள்ள கனிம வளம் மற்றும் நில அறிவியல் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் மகனை பிரிந்து பிரதிமா மட்டும் பெங்களூரு தொட்டஹள்ளசந்திரா அருகே உள்ள குவெம்பு நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பிரதிமா அரசு காரில் தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் டிரைவர் காரை அலுவலகத்துக்கு எடுத்து சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் பிரதிமா வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதற்கிடையே பிரதிமாவின் அண்ணன் காண்டிராக்டர் பிரதிஷ் என்பவர் பிரதிமாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து 3 முறை அழைத்தும் பிரதிமா செல்போனை எடுக்காததால், அவரது அண்ணன் பிரதிஷ் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று தூங்கச் சென்றார்.

    பின்னர் மீண்டும் காலையில் எழுந்து தொடர்பு கொண்டார். அப்போதும் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரதிஷ் தனது தங்கையின் வீட்டிற்கே நேராக சென்றார்.

    அங்கு பிரதிமா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து சுப்ரமணியபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட பிரதிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கி உள்ளனர். கனிம வள அதிகாரி என்பதால் இவருக்கு பிடிக்காதவர்கள் யாராவது கூலிப்படை அனுப்பி கொலை செய்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு கொலை செய்யப்பட்ட பெண் அதிகாரி பிரதிமாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். பிரதிமாவை அழைத்து வந்து வீட்டில் விட்ட கார் டிரைவர் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார். எனவே அவரிடமும், அவருக்கு முன்பு டிரைவராக பணியாற்றியவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட பெண் அதிகாரியுடன் பணியாற்றி வரும் சில அதிகாரிகள் கூறும்போது, கொலை செய்யப்பட்ட பிரதிமா மிகவும் நேர்மையான அதிகாரி. துணிச்சலானவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில இடங்களில் சோதனைக்கு சென்றார். இந்த துறையில் அவருக்கு நல்ல பெயர் உள்ளது. எங்கிருந்து போன் வந்தாலும் உடனடியாக சென்று விசாரணை நடத்துவார் என்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பெண் அதிகாரி கொலை குறித்து முதல் மந்திரி சித்தராமையா கூறும்போது, இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார்.

    Next Story
    ×