search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற பாரதிய ஜனதா புதிய வியூகம்- பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை
    X

    மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற பாரதிய ஜனதா புதிய வியூகம்- பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை

    • வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • 2019-ம் ஆண்டில் கட்சி இழந்த 144 இடங்களை அடையாளம் கண்டு அங்கு கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல்களிலும் வெற்றி பெறுவது குறித்தும் வியூகங்களையும் ஆலோசித்து வருகிறது.

    தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் , இந்த மாநிலங்களில் கட்சி ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அமைக்குமாறு பொறுப்பாளர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா பொதுச் செயலாளர் (அமைப்பு) சந்தோஷ் மற்றும் சமீபத்தில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் முதல்-மந்திரிகள் விஜய் ரூபானி, பிப்லப் குமார் தேவ், பொதுச் செயலாளர் அருண் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களில் பாரதிய ஜனதாவை வலுப்படுத்துவது பற்றியும், 2024-ம் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும்.

    நமது சித்தாந்தத்தின் முலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்றார். தொடர்ந்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி அவர் பேசினார்.அப்போது பூத் கமிட்டி வியூகங்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்களை உள்ளடக்கிய பூத் மேலாண்மை குறித்தும் அவர் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    2019-ம் ஆண்டில் கட்சி இழந்த 144 இடங்களை அடையாளம் கண்டு அங்கு கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கான மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் கட்சியை பலப்படுத்த முடியும் என மாநில பொறுப்பாளர்களிடம் ஜே.பி.நட்டா வலியுறுத்தினார்.

    பாரதிய ஜனதா கட்சி தனது எஸ்.சி. மோர்ஜா மூலம் நாடு முழுவதும் 'பஸ்தி சம்பிரக் அபியான்' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன்மூலம் பட்டியலினத்தவர்கள் அதிகம் உள்ள 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அங்கு கட்சியை பலப் படுத்துவது சம்பந்தமாகவும் இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×