search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் பக்தர்களின் காணிக்கை பணம் பராமரிப்பு இல்லாததால் சேதமானதாக புகார்
    X

    சபரிமலையில் பக்தர்களின் காணிக்கை பணம் பராமரிப்பு இல்லாததால் சேதமானதாக புகார்

    • சபரிமலையில் முன்பு காணிக்கை பணம் இருமுடி கெட்டில் சிறிய அளவில் வைக்கப்பட்டு உரிய முறையில் பராமரிப்பது வழக்கம்.
    • தற்போது காணிக்கையாக பெறப்பட்ட பணம் மற்றும் நாணயங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது. 41 நாட்கள் நடந்த மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பிறகு மகர விளக்கு பூஜை தொடங்கியது. இதற்காக கோவில் நடை 30-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் தமிழகம் மற்றும் கேரளத்தில் இருந்து மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து ஐயப்பனை தரிசித்து சென்றனர்.

    அவர்கள் கோவிலில் காணிக்கையாக ஐயப்பனுக்கு பணம் மற்றும் தானியங்கள் என ஏராளமாக செலுத்தி சென்றனர். கொரோனா விதிகள் தளர்வுக்கு பிறகு இந்த ஆண்டு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் காணிக்கையும் கோவிலில் குவிந்தது.

    சபரிமலையில் முன்பு காணிக்கை பணம் இருமுடி கெட்டில் சிறிய அளவில் வைக்கப்பட்டு உரிய முறையில் பராமரிப்பது வழக்கம். ஆனால் தற்போது காணிக்கையாக பெறப்பட்ட பணம் மற்றும் நாணயங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    காணிக்கை பணம் மற்றும் நாணயங்களை, பிரசாதம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் துணியில் கட்டி வைத்துள்ளனர். இந்த பண மூட்டைகள் சன்னிதானத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்டகங்களில் வைக்கப்பட்டன.

    ஆனால் இதனை உரிய நேரத்தில் எடுத்து கணக்கிடாததால், ரூபாய் நோட்டுகளில் வெற்றிலை மற்றும் பாக்கு கொட்டைகளின் கறைகள் படிந்து சேதமடைந்துள்ளது. காணிக்கை பணத்தை சேகரிக்க ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தேவசம்போர்டும், விஜிலன்சு நிர்வாகமும் சரியான முறையில் கையாளவில்லை என பலரும் வேதனை தெரிவித்து உள்ளனர். ஆனால் இது குறித்து தேவசம்போர்டு நிர்வாகம் எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது.

    சபரிமலையில் மகர விளக்கு பூஜை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று படி பூஜை நடைபெற்றது. நாளை (18-ந்தேதி) சபரிமலையில் சிறப்பு களபாபிஷேகம் நடக்கிறது. மறுநாள் (19-ந்தேதி) மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருதி பூஜை நடக்கிறது.

    அன்றைய தினம் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள். 20-ந் தேதி பூஜை நிறைவடைந்ததும் சபரிமலை நடை அடைக்கப்படுகிறது.

    Next Story
    ×