search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நீட் தேர்வு முறைகேடு- உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
    X

    நீட் தேர்வு முறைகேடு- உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

    • நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கடினமாக படிக்கிறார்கள்.
    • நீட் தேர்வில் பொதுமக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும்.

    புதுடெல்லி:

    மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. இதில் நாடு முழுவதும் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சமீபத்தில் நீட் தேர்வுக்கான முடிவு வெளியானது.

    இதற்கிடையே நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாகவும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் மையத்தில் இருந்து அதிகம் பேர் முதலிடம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் 1563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

    அதில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால அமர்வு, தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டது. இதில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று கொண்டது.

    மேலும் நீட் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைத்து ஜூலை 8-ந்தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடு தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால அமர்வு முன்பு நடந்தது.

    அப்போது நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, "நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் யாராவது சுணக்கமாகவோ அல்லது அலட்சியமாகவே இருந்தால் கூட முழுமையாக ஆராய வேண்டும். இவ்விகாரத்தை கண்டிப்பான முறையில் அணுக வேண்டும்.

    ஒருவர் மோசடி செய்து மருத்துவராக ஆவதை யோசித்து பாருங்கள். அது போன்ற நபர் சமுதாயத்திற்கும், அந்த அமைப்புக்கும் எவ்வளவு மோசமான விளைவுகளை கொடுப்பார் என்பதை யோசித்து பார்க்க வேண்டியுள்ளது.

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கடினமாக படிக்கிறார்கள். ஆனால் ஒரு சில குறுக்கு வழிகள் மூலம் சிலர் வெற்றி பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு தவறு நடந்திருந்தால் அதை நாம் ஒப்பு கொண்டுதான் ஆக வேண்டும்.

    தேர்வை நடத்தும் ஏஜென்சியாக நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தவறு நடந்திருந்தால் அதை ஒப்புக் கொண்டு, நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து கூறுங்கள். இதனால் குறைந்தபட்சம் உங்கள் செயல் திறனில் நம்பிக்கை ஏற்படும். இதன் மூலம் நீட் தேர்வில் பொதுமக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும்.

    அதே வேளையில் நாட்டின் கடினமான நுழைவுத் தேர்வு ஒன்றுக்கு மாணவர்கள் தயாராவதற்கு தேசிய தேர்வு முகமை மேற்கொண்ட முயற்சிகளை மறந்து விடக்கூடாது என்றனர்.

    மேலும் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூலை 8-ந்தே திக்கு தள்ளி வைத்தனர்.

    கோடை விடுமுறை முடிந்து சுப்ரீம் கோர்ட்டு வருகிற ஜூலை 8-ந்தேதி திறக்கப்படுகிறது. முதல் நாளிலேயே நீட் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

    Next Story
    ×