search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக முக்தர் அப்பாஸ் நக்விக்கு வாய்ப்பு
    X

    பா.ஜனதா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக முக்தர் அப்பாஸ் நக்விக்கு வாய்ப்பு

    • பா.ஜ.க. கூட்டணியின் சுரேஷ் பிரபு, ஹர்தீப் பூரி, எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
    • காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 22 சதவீத வாக்குகளே உள்ளன.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்டு 10-ந் தேதி முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய கடந்த 5-ந் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அன்றைய தினமே மனு தாக்கலும் தொடங்கியது.

    துணை ஜனாதிபதி பதவிக்கு மனு தாக்கல் செய்ய வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும். 20-ந் தேதி மனுக்கள் பரிசீலனையும், 22-ந் தேதி மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். போட்டி இருந்தால் ஆகஸ்டு 6-ந் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு அன்றே முடிவும் அறிவிக்கப்படும்.

    மனு தாக்கலுக்கு இன்னும் 6 நாட்களே அவகாசம் உள்ள நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணி சார்பில் கேரள கவர்னர் ஆரீப்கான், முன்னாள் கவர்னர் நஜீம்கமார்துல்லா, பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங், உத்தரபிரதேச கவர்னர் அனந்தி பென் படேல் ஆகியோரது பெயர் அடிபட்டது.

    என்றாலும், முன்னாள் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பெயர் பா.ஜ.க. தலைவர்களிடையே தீவிர பரிசீலனையில் உள்ளது. அவரது பெயரை விரைவில் பா.ஜ.க. மேலிடம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பா.ஜ.க. கூட்டணியின் சுரேஷ் பிரபு, ஹர்தீப் பூரி, எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. என்றாலும் முக்தர் அப்பாஸ் நக்விக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாராளுமன்றத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு 58 சதவீத எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. எனவே எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்து தேர்வு செய்ய உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளர் மிக மிக எளிதில் வெற்றிபெறுவார்.

    காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 22 சதவீத வாக்குகளே உள்ளன. மற்ற கட்சிகளுக்கு 21 சதவீத வாக்குகள் இருக்கின்றன. என்றாலும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சேர்ந்தாலும் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற இயலாது.

    இதனால் எதிர்க்கட்சிகள் துணை ஜனாதிபதி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது புரியாமல் தவித்து கொண்டிருக்கின்றன. முக்தர் அப்பாஸ் நக்வியை பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தினால் அவரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×