search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஞானவாபி வழக்கில் இன்று தீர்ப்பு- வாரணாசியில் 144 தடை உத்தரவு
    X

    ஞானவாபி வழக்கில் இன்று தீர்ப்பு- வாரணாசியில் 144 தடை உத்தரவு

    • மசூதி வளாக சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்கும்படி வழக்கு
    • ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து என்பதால் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என வாதம்

    வாரணாசி:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றததில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதி வளாகத்தில் 3 நாட்கள் வீடியோ ஆய்வு பணிகளை நடத்தியது. அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது.

    வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்தன. மஸ்ஜித் கமிட்டி தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து. எனவே, இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை. மசூதி தொடர்பான விவகாரத்தை வக்பு வாரியம் மட்டுமே விசாரிக்க உரிமை உண்டு,' என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது,' என்றார்.

    காசி விஸ்வநாதர் கோவிலில் பாதுகாப்பு

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், தீர்ப்பை செப்டம்பர் 12ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். அதன்படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படஉள்ளது. தீர்ப்பையொட்டி வாரணாசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெருக்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    Next Story
    ×