என் மலர்

  இந்தியா

  அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மூட்டைகள்
  X
  அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மூட்டைகள்

  ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்- 10 நாட்களுக்கு மேல் நடுக்கடலில் காத்திருந்து மடக்கிய அதிகாரிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் பிடிபட்ட ஹெராயின் போதை பொருள் அங்கிருந்து சாலை மார்க்கமாக தமிழகத்திற்கும் கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது.
  திருவனந்தபுரம்:

  இந்தியாவிற்குள் கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன்படி, கேரள கடல் பகுதியில் நேற்று வருவாய் புலனாய்வு பிரிவினரும், கடலோர பாதுகாப்பு படையினரும் நடத்திய வேட்டையில் ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

  இதனை கடத்தி வந்ததாக 2 படகுகளும், அதில் இருந்த 20 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 16 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குளச்சல் மற்றும் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள்.

  கேரளாவில் மிகப்பெரிய அளவில் போதை பொருள் சிக்கியிருப்பது இது 4-வது முறையாகும். இதற்கு முன்பும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தாலும் இப்போது பெரிய அளவில் போதை பொருள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  தற்போது இந்த ஆபரேசன் எப்படி நடந்தது, அதிகாரிகள் போதை பொருள் கடத்தல் கும்பலை எப்படி? கைது செய்தனர் என்பது பற்றிய பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  இந்தியாவிற்குள் போதை பொருள் கடத்தலில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த கும்பல் ஈடுபடுவதை மத்திய உளவுத்துறை முதலில் கண்டுபிடித்தது. இதனை அவர்கள் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கும், கடலோர பாதுகாப்பு படையினருக்கும் தெரிவித்தனர்.

  இதையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் இணைந்து ஆபரேசன் கோஜ்பீன் என்ற திட்டத்தை உருவாக்கினர். இந்த திட்டத்தை நிறைவேற்ற திறமையான அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

  அதிகாரிகள் குழு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய கடல் எல்லைக்குள் வரும் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்திய பெருங்கடல், வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.

  சந்தேகப்படும் மீன்பிடி படகுகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். சுமார் 10 நாட்களுக்கு மேலாக அவர்கள் நடுக்கடலில் கொக்குபோல காத்திருந்தனர்.

  இந்த நேரத்தில் தான் கடலில் சூறாவளியும், கொந்தளிப்பும் ஏற்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் இரவு பகலாக காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு நேற்று பலன் கிடைத்தது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வந்த கப்பலில் இருந்து சில மூட்டைகள் 2 மீன்பிடி படகுகளில் ஏற்றப்படுவதை கண்டனர். அந்த படகுகள் மூட்டைகளை ஏற்றியதும், அரபிக்கடல் பகுதிக்குள் புகுந்து கேரளா நோக்கி விரைந்தது.

  அந்த படகுகளை விரட்டிச்சென்ற கடலோர பாதுகாப்பு படையினர் படகுகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். படகுக்குள் மீன்கள் எதுவும் இல்லை. மாறாக அங்கு மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 220 கிலோ ஹெராயின் இருந்தது.

  இந்த தகவல் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆபரேசன் சக்சஸ் ஆனதை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட போதை பொருள் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

  கொச்சியில் வைத்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கைதான 20 பேரில் 16 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பறிமுதல் செய்யப்பட்ட 2 படகுகளும் குளச்சல் மற்றும் தூத்தூர் பகுதியைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது.

  இதையடுத்து படகின் உரிமையாளர்களை பிடித்து விசாரிக்க வருவாய் புலனாய்வு அதிகாரிகள் குழுவினர் நேற்றிரவே குமரி மாவட்டம் வந்தனர். தூத்தூர் மற்றும் குளச்சல் பகுதிகளில் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

  இதற்கிடையே நடுக்கடலில் கைது செய்யப்பட்ட குமரி மீனவர்கள் உள்பட 20 பேரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இன்று கொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

  பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது போதை பொருளை கேரளாவில் யார் யாருக்கு வழங்க இருந்தனர் என்பதை விசாரித்து அவர்களையும் கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

  கேரளாவில் பிடிபட்ட ஹெராயின் போதை பொருள் அங்கிருந்து சாலை மார்க்கமாக தமிழகத்திற்கும் கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது.

  இதுபற்றியும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  Next Story
  ×