search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    கேரளாவில் கால் பதிக்க முயற்சி- புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

    கேரள மக்களிடம் வரவேற்பு பெற்று வரும் டுவென்டி, டுவென்டி கட்சியுடன் புதிய கூட்டணி அமைக்க அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    டெல்லியில் 2வது முறையாக ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி, சமீபத்தில் நடந்த பஞ்சாப் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    2 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக கோவா மற்றும் கேரளா மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

    கோவா மாநிலத்தில் இதற்கான பணிகளை தொடங்கி விட்ட கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்து கேரளா மாநிலத்திலும் கால் பதிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சியினரே வலுவாக உள்ளனர். இவர்களுக்கு போட்டியாக எர்ணாகுளம் மாவட்டத்தை மையமாக கொண்டு டுவென்டி டுவென்டி என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.

    இக்கட்சியினர் கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர். இதில் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் கூடுதல் வெற்றியை பெற்றனர். மேலும் இங்கு நடந்த சட்டசபை தேர்தலிலும் கணிசமான வாக்குகளை பெற்றனர்.

    கேரள மக்களிடம் வரவேற்பு பெற்று வரும் டுவென்டி, டுவென்டி கட்சியுடன் புதிய கூட்டணி அமைக்க அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

    இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டுவென்டி, டுவென்டி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். கட்சியின் நிர்வாகிகளிடம் நடந்த ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

    எர்ணாகுளத்தில் வருகிற 15ந் தேதி டுவென்டி, டுவென்டி கட்சியின் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார்.

    அப்போது இரு கட்சிகளும் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது பற்றியும், வருகிற தேர்தல்களில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.

    இதன் முன்னோட்டமாக கேரளாவின் திருக்காக்கிரா தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இந்த கூட்டணி முதல் முறையாக களம் இறங்க உள்ளது. திருக்காக்கிரா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த பி.டி.தாமஸ் திடீரென இறந்ததால் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

    வருகிற 31ந் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது. ஜூன் 3ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய அரசியல் கூட்டணி களம் இறங்குகிறது. இதில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த கட்ட வியூகங்களை வகுக்க கட்சியின் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×