search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மோசடி
    X
    மோசடி

    சோப்பு வாங்கியவர்களுக்கு குலுக்கலில் பரிசு விழுந்ததாக நூதன மோசடி

    சோப்பு வாங்கியவர்களுக்கு குலுக்கலில் பரிசு விழுந்ததாக நூதன மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் பழைய பிரசாந்த் நகரை சேர்ந்தவர் நவீனா (வயது31). கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் நகருக்கு வீடு வீடாக வந்த 2 வாலிபர்கள் 100 ரூபாய்க்கு தரமான 5 சோப்புகளை வழங்குவதாக கூறினர். நவீனா 100 ரூபாய் கொடுத்து 5 சோப்புகளை வாங்கினார். சோப்பு வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு விழுந்தால் இலவசமாக வழங்குவதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து வாலிபர்கள் 2 பேரும் ஒரு டப்பாவில் சீட்டுகளை போட்டு நவீனாவை எடுக்க கூறினர். நவீனா எடுத்த சீட்டில் பைக், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், தோசை தவா உள்ளிட்ட 5 பொருட்கள் பரிசு விழுந்ததாக அந்த சீட்டில் இருந்தது.

    பின்னர் அந்த வாலிபர்கள் நவீனாவின் செல்போன் மற்றும் முகவரியை வாங்கி கொண்டு சென்றனர். 2 நாட்கள் கழித்து உங்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பரிசு விழுந்ததாகவும், குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு ரூ.25 ஆயிரம் செலுத்தினால் உங்கள் வீடு தேடி பரிசு பொருட்கள் வரும் என கூறினர்.

    இதனை உண்மை என நம்பிய நவீனா அவர்கள் கொடுத்த வங்கி எண்ணிற்கு ரூ.25 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் வங்கியில் பணம் செலுத்தி பல நாட்கள் ஆகியும் பரிசுப் பொருட்கள் வீடு தேடி வரவில்லை. வாலிபர்கள் பேசிய செல்போன் எண்ணிற்கு நவீனா தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து நவீனா சித்தூர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் சித்தூர் லெனின் நகர் காலனியை சேர்ந்த தீபக் என்பவரும் ரூ.18 ஆயிரம் ஏமாந்ததாகக் கூறி சித்தூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பண மோசடி செய்த சோப்பு வியாபாரிகளின் செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×