search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்
    X
    டெல்லி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

    டெல்லி பயிற்சி மருத்துவர்கள் மீது போலீசார் தடியடி - இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு கண்டனம்

    போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மன்னிப்பு கேட்கா விட்டால் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் நிறுத்தப்படும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

     நீட்  முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி தலைநகர் புதுடெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் தெரிவித்தனர். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதை ஏற்க மறுத்ததுடன் ஊர்வலமாக செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் ஐ.டி.ஓ. பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 7 போலீசார் காயம் அடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    டெல்லி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

    இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது, பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொது சொத்துகளை சூறையாடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து புதுடெல்லியில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது.

    இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தியதற்கு அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு, டெல்லி எம்ய்ஸ் மருத்துவர்கள் சங்கம், குடியுரிமை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  கைது செய்யப்பட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அரசும், போலீசார் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

    24 மணி நேரத்தில் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கா விட்டால் அவசர சிகிச்சை தவிர பிற சிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அதேபோல் நாளை காலை 8 மணி முதல் அனைத்து மருத்துவ சேவைகளையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக , அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பயிற்சி மருத்துவர்கள் மீதான தாக்குதல், மருத்துவ சேவை வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று டெல்லி குடியுரிமை மருத்தவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×