search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரிகள் சந்திப்பு
    X
    இந்தியா பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரிகள் சந்திப்பு

    இந்தியாவுக்கு மேலும் ரபேல் போர் விமானங்களை வழங்க தயார் - பிரான்ஸ் உறுதி

    பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரியுடனான சந்திப்பு ஆக்கப் பூர்வமாக இருந்ததாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா விரும்பினால் கூடுதலாக ரபேல் போர் விமானங்களை வழங்க தயார் என்று பிரான்ஸ் நாடு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி வந்துள்ள பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி புளோரன்ஸ் பார்லி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். இரு நாட்டு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம்  உள்நாட்டு போர் தளவாட உற்பத்திக்கு இந்திய நிறுவனங்களுக்கு பிரான்ஸ் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குவது, இந்த சந்திப்பின் முக்கிய விவாதமாக இருந்தது. 

    பாகிஸ்தானில் இருந்து ஏவப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், இந்திய எல்லைப் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இரு தரப்பு பாதுகாப்புத்துறை மந்திரிகளும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

    பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரியுடனான சந்திப்பு ஆக்கப் பூர்வமாக இருந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா - பிரான்ஸ்  இடையே பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். 

    ரஃபேல் போர் விமானம்

    இந்தியாவிற்கு தேவைப்பட்டால் கூடுதல் ரபேல் போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி புளோரன்ஸ் பார்லி தெரிவித்தார். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்திய உற்பத்தியாளர்களை உலகளாவிய அளவில் விநியோக முறையுடன் ஒருங்கிணைக்க தமது நாடு உதவும் என்று அவர் தெரிவித்தார்.

    கடந்த 2016ம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி,  ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்தியாவிற்கு 36 ரபேல் போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் ஒப்புக் கொண்டது. இதுவரை 33 ரபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×