search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காசி விஸ்வநாதர் கோவில் நடைபாதையை பார்வையிடும் பிரதமர் மோடி
    X
    காசி விஸ்வநாதர் கோவில் நடைபாதையை பார்வையிடும் பிரதமர் மோடி

    சுயசார்பு இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி முன்வைத்த 3 தீர்மானங்கள்

    புதிய இந்தியா அதன் திறன் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
    வாரணாசி:

    பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கையாக காசி விஸ்வநாதர் கோவில் வளாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.  339 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தோர் மத்தியில் ஹர ஹர மகாதேவ் என்று கூறி தமது உரையை பிரதமர் தொடங்கினார். அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி

    அன்னிய படையெடுப்பாளர்கள் இந்த நகரத்தைத் தாக்கினர், அதை அழிக்க முயன்றனர். மொகலாய மன்னர் ஔரங்கசீப் நமது நாகரீகத்தை வாளால் மாற்ற முயன்றவர். நமது கலாச்சாரத்தை நசுக்க முயன்றவர். கொடுங்கோலர்கள் வாரணாசியை அழிக்க முயன்றனர், ஆனால் அதுவே அவர்களின் வீழ்ச்சியாக அமைந்தது. இந்த நாட்டின் மண் மற்ற உலக நாடுகளிலிருந்து வேறுபட்டது. புதிய இந்தியா அதன் கலாச்சாரத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறது மற்றும் அதன் திறன் மீது நம்பிக்கையும் கொண்டுள்ளது

    நான் உங்கள் முன்னால் முன்று தீர்மானங்களை முன் வைக்கிறேன். அது உங்களுக்கு மட்டுமல்ல, நமது நாட்டிற்கும் சேர்த்துத்தான். தூய்மை, புதியன உருவாக்குதல் மற்றும் கண்டறிதலுடன், தொடர் முயற்சியும் சேர்ந்தால் சுயசார்புள்ள இந்தியா உருவாகும். 

    காசி விஸ்வநாதர் கோவிலில் இந்த பெரிய வளாகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று காலத்தில் இந்த பணி நிற்காமல் நடைபெற்றுள்ளது.

    இவ்வாறு தமது பேச்சின்போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    பின்னர், காசி விஸ்வநாதர் கோவிலை கங்கை நதியுடன் இணைக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அவருடன் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் உடன் சென்றார். 


    கோவில் வளாக பணியில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் மீது மலர்களை தூவி பிரதமர் மரியாதை செய்தார். பின்னர் அவர்களுடன் மதிய உணவு அருந்தினார். அந்த தொழிலாளர்களுடன் இணைந்து பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்
    Next Story
    ×