search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விழாவில் கட்சியினர் சரத்பவாருக்கு நினைவு பரிசு வழங்கிய காட்சி.
    X
    விழாவில் கட்சியினர் சரத்பவாருக்கு நினைவு பரிசு வழங்கிய காட்சி.

    மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப தொண்டர்கள் மாற வேண்டும்: சரத்பவார் அறிவுரை

    தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிற கட்சியினர் மாறி வரும் சமூக, அரசியல் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்று சரத்பவார் கூறியுள்ளார்.
    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று 81-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் சரத்பவாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சரத்பவாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவரது சில்வர் ஒக் வீட்டுக்கு பூங்கொத்தை அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே மும்பையில் கட்சியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிறந்தநாள் விழாவில் சரத்பவார் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    பிறந்தநாள் ஒரு தனிநபரின் வாழ்க்கையில் முக்கிய மைல் கல்லாகும். எனது 50, 60, 75-வது பிறந்தநாள் பொதுவில் கொண்டாடப்பட்டது. எனது 81-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை விரும்பாத போதும், கட்சியினருக்காக இந்த விழாவுக்கு வந்தேன். டிசம்பர் 12-ந் தேதி எனக்கு முக்கிய நாளாகும். எனது பிறந்தநாள் என்பதற்காக அல்ல, எனது தாயின் பிறந்தநாள்.

    மேலும் டிசம்பர் 12-ந் தேதி தான் எனது அண்ணன் மகன், சகோதரி மகளுக்கும் பிறந்தநாள். எனது மனைவி பிரதிபாவுக்கு டிசம்பர் 13-ந் தேதி பிறந்த நாள்.

    எனது பிறந்த நாளுக்கு வந்த வாழ்த்து மழை என்னை மேலும் கடினமாக உழைக்க உத்வேகப்படுத்தி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி குறைந்த தொண்டர்கள் மட்டுமே உள்ள சிறிய கட்சியாக இருக்கலாம். ஆனால் அதன் தொண்டர்கள் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரையும் தங்களுடன் சேர்த்து பயணிக்க உறுதி கொண்டு இருப்பது கட்சியின் தனித்தன்மை ஆகும். சமூகத்தில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் தங்களால் கண்ணியமான வாழ்க்கையை நடத்த முடியாது என நினைத்தால், அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிற கட்சியினர் மாறி வரும் சமூக, அரசியல் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்ள வேண்டும். சத்ரபதி சமூக சீர்திருத்தவாதிகள் சாகு மகாராஜ், ஜோதிராவ் புலே, அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகள், சித்தாத்தங்கள் கட்சியின் முதுகெலும்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×