search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் சுமார் 55 சதவீதம் பேர் இரண்டு மாநிலங்களை சேர்ந்தவர்கள்

    இந்தியாவில் 99,976 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் கேரளாவில் மட்டும் 45,030 பேரும், மராட்டியத்தில் 10,882 பேரும் அடங்குவர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் கொரோனா 2-ம் அலை கட்டுக்குள் உள்ள போதிலும், இன்னும் முழுமையாக ஓயவில்லை. தற்போதும் நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பரவல் விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் இருப்பதாகவும், 18 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதம் வரை இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,216 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,700 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பால் கேரளாவில் 320 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 391 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,70,115 ஆக அதிகரித்துள்ளது. தொற்றின் பிடியில் இருந்து மேலும் 8,612 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 45 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது.

    தற்போது 99,976 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் கேரளாவில் மட்டும் 45,030 பேரும், மராட்டியத்தில் 10,882 பேரும் அடங்குவர். நாட்டில் சிகிச்சை பெற்று வரும் மொத்த நோயாளிகளில் இந்த இரு மாநிலங்களில் மட்டும் சுமார் 55 சதவீதம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் நேற்று 73,67,230 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.இதன்மூலம் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 125 கோடியே 75 லட்சத்தை கடந்துள்ளது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி, இதுவரை 64.46 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. இதில் நேற்று 11,57,156 மாதிரிகள் அடங்கும்.
    Next Story
    ×