search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.என்.எல்.
    X
    பி.எஸ்.என்.எல்.

    நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க பி.எஸ்.என்.எல். சொத்துக்கள் விற்பனை- ஏல அறிவிப்பு

    பொதுத்துறை நிறுவனங்களில் நஷ்டத்தில் இயங்கும் துறைகளை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் சில பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்தும், குத்தகைக்கு விட்டும் பணமாக்குதல் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரூ. 70 ஆயிரம் கோடி மறுமலர்ச்சி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

    இந்த திட்டத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மறுமலர்ச்சி திட்டத்தின் ஒருபகுதியாக பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

    இரு நிறுவனங்களின் சொத்து விபரங்களை டி.ஐ.பி.ஏ.எம். இணைய தளத்தில் மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. அதில் ஐதராபாத், சண்டிகர், பாவ் நகர், கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான மனை மற்றும் குடியிருப்புகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.

    இவற்றுக்கான அடிப்படை விலை ரூ. 660 கோடி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மும்பையில் வசாரி ஹில் மற்றும் கோரேக்கான் பகுதிகளில் உள்ள எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்கள் பட்டியலிடப்பட்டு அடிப்படையாக ரூ. 310 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    விற்பனை பட்டியலில் உள்ள மும்பை, ஓஷிவாரா பகுதியில் எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த அடுக்கு மாடி குடியிருப்பின் விலை ரூ. 52.26 லட்சம் முதல் ரூ. 1.59 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எம்.டி.என்.எல். நிறுவனத்தின் சொத்துக்களுக்கான இணையவழி ஏலம் வருகிற டிசம்பர் 14-ந் தேதி நடக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த இரண்டு நிறுவனங்களின் ரூ. 37 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொதுத்துறை நிறுவனங்களில் நஷ்டத்தில் இயங்கும் துறைகளை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் சில பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்தும், குத்தகைக்கு விட்டும் பணமாக்குதல் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரூ. 6 லட்சம்கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    இதையும் படியுங்கள்... திருடர்களால் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் நல்லடக்கம்

    Next Story
    ×