search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேச சட்டசபை
    X
    உத்தரபிரதேச சட்டசபை

    உத்தரபிரதேசத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

    எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நிற்பது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன.
    நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு தற்போது பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.

    இந்த ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுமார் 5 மாதங்களுக்கு முன்பே அவர்கள் தேர்தல் ஆயத்த பணிகளை தொடங்கி விட்டார்கள்.

    உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல், பிரசார யுக்திகளை எப்படி மேற்கொள்வது என்பதை ஏற்கனவே முடிவு எடுத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    உத்தரபிரதேசத்தை பொருத்தவரையில் சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் செல்வாக்கு பெற்றவையாக உள்ளன. இரு கட்சிகளும் ஏற்கனவே பலமுறை ஆட்சியில் அமர்ந்துள்ளன.

    அந்த கட்சிகளும் தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கி விட்டன. இந்த கட்சிகளின் தலைவரான அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் பம்பரமாக சுற்றி வந்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாற்று கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    சமாஜ்வாடி கட்சியை பொருத்தவரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாதவர்கள், முஸ்லிம்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. மேலும் பல பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் ஆதரவாக உள்ளன.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு தாழ்த்தப்பட்ட மக்களும், முஸ்லிம்களில் ஒரு பிரிவினரும் ஆதரவாக உள்ளனர். கடந்த காலத்தில் பிராமணர்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் பின்னர் அவர்கள் பா.ஜ.க. பக்கம் சேர்ந்து விட்டனர். தற்போது பா.ஜனதா மீது பிராமணர்கள் அதிருப்தியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை இழுக்க கட்சி தலைவர் மாயாவதி முயற்சித்து வருகிறார்.

    பா.ஜனதாவுக்கு பிராமணர்கள், தாகூர் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டவர்களில் சில பிரிவினர், உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரவாக உள்ளனர்.

    இந்த 3 கட்சிகளுக்கும் இடையேதான் பிரதான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்ததாக காங்கிரஸ் கட்சியும் களத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் உத்தரபிரதேச மாநிலம் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. பின்னர் முலாயம்சிங் யாதவ் காலத்தில் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரசால் அங்கு ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

    கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்து வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் கூட 7 இடங்களில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது. பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி மட்டும்தான் கிடைத்தது.

    மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் 6.7 சதவீத வாக்குகள் மட்டுமே காங்கிரசுக்கு கிடைத்தன. பாராளுமன்ற தேர்தலில் 6.36 சதவீத ஓட்டுகள் கிடைத்தது.

    இப்போது பழைய செல்வாக்கை மீண்டும் பெறும் முயற்சியில் பல்வேறு அதிரடி பணிகளை காங்கிரஸ் செய்து வருகிறது. ஆனாலும் இன்னும் கூட கட்சி பலவீனமாகவே இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

    தற்போதைய நிலையில் பா.ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக போட்டியிட இருக்கின்றன. பெரிய கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை. எனவே அங்கு 4 முனை போட்டி ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று கூறப்படுகிறது.

    சமாஜ்வாடி கட்சி முஸ்லிம்களிடம் செல்வாக்கு உள்ள ஒவைசியின் மஜ்லீஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. மேலும் 7 சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    காங்கிரசும் இதே போல சிறு கட்சிகளுடனும், சில அமைப்புகளுடனும் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது.

    எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நிற்பது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன.

    சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து விட்டால் அது பா.ஜனதாவுக்கு பெரும் சிக்கலாக அமைந்து விடும். இந்த இரு கட்சிகளும் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடந்த 4 எம்.பி. இடைத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. யோகி ஆதித்யநாத்தின் கோராப்பூர் எம்.பி. தொகுதியை கூட இந்த கூட்டணி கைப்பற்றியது.

    ஆனால் இரு கட்சி தலைவர்களுக்குள் நடக்கும் மோதல் காரணமாக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

    காங்கிரசை இந்த இரு கட்சிகளுமே தீண்டதகாத கட்சி போல பார்க்கின்றன. எனவே காங்கிரசே விரும்பினாலும் அந்த கட்சிகள் சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை.

    4 முனை போட்டி உருவாகுவது உறுதி என்பது வெட்டவெளிச்சமாக தெரிவதால் 4 கட்சிகளுமே பிரசாரத்தை முடுக்கி விட்டு இருக்கின்றன.

    இதில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்பது போக போகத்தான் தெரியும். இடைப்பட்ட காலத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது மாநிலத்தில் அதிருப்தி நிலவியது.

    கொரோனா பிரச்சனையை சரியாக கையாளாதது, விவசாயிகள் பிரச்சனை போன்றவற்றால் செல்வாக்கு சரிந்தது. ஆனாலும் கட்சி மேலிட தலைவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பா.ஜனதாவின் செல்வாக்கை மீண்டும் உயர்த்தி இருக்கிறார்கள்.

    உத்தரபிரதேசத்தில் சுதந்திரம் அடைந்த 1950-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் இருந்து 1967 வரை காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. 1967-ல் சரண்சிங் தொடங்கிய கிராந்திதளம் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

    ஆனால் 1970-ல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் 1977-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தது. 1979-ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 1½ ஆண்டுகள் மட்டுமே இந்த கட்சி தாக்கு பிடித்தது.

    1980-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் 1989 வரை இருந்தது. 1989-ல் ஜனதா தளம் ஆட்சியை கைப்பற்றி முலாயம்சிங் யாதவ் முதல்-மந்திரி ஆனார். 1991-ல் முதல் முதலாக பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. 1993-ல் முலாயம்சிங் யாதவ் சமாஜ்வாடி என்ற புதிய கட்சியை தொடங்கி ஆட்சியை கைப்பற்றினார். அவருக்கு பிறகு மாயாவதி ஆட்சிக்கு வந்தார்.

    1997-ல் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. 2002 வரை அந்த கட்சி ஆட்சியில் இருந்தது. 2012-ல் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தது. அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரி ஆனார்.

    2017-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. யோகி ஆதித்யநாத்துக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.
    Next Story
    ×