search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    அரியானா ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான போராட்டத்தை திரும்ப பெற்ற விவசாயிகள்

    அதிகாரி ஆயுஷ் சின்கா மீதான புகார் மட்டுமின்றி கர்னால் மாவட்டத்தில் அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அரசு விசாரித்து ஆய்வு செய்யும் என்று உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியிருந்தார்.
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கர்னால் மாவட்டத்தில் கடந்த மாதம் 28ம் தேதி பாஜக தலைவர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்தனர். போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது ஒருபுறமிருக்க போராட்டம் நடத்தும் விவசாயிகளின் மண்டையை உடைக்கும்படி போலீசாரிடம் கர்னால் துணைக் கோட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்கா உத்தரவிட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் போலீசாரிடம் பேசுவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்த அதிகாரிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    அதிகாரி ஆயுஷ் சின்கா

    ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்கா மீது நடவடிக்கை எடுக்க  கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அரசுத் தரப்பில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சனைக்கு முடிவு ஏற்படவில்லை. அதிகாரி ஆயுஷ் சின்கா பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

    ஆயுஷ் சின்கா மீதான புகார் மட்டுமின்றி கர்னால் மாவட்டத்தில் அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அரசு விசாரித்து ஆய்வு செய்யும் என்று உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியிருந்தார். விசாரணை நடத்தாமல் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க முடியாது என்று கூறிய அவர், விவசாய சங்க தலைவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்கா மீதான புகார் குறித்து முன்னாள்  நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், விசாரணை முடியும் வரை ஆயுஷ் சின்கா விடுப்பில் அனுப்பப்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை திரும்ப பெற்றனர். ஆகஸ்ட் 28ல் நடந்த தடியடியில் இறந்த விவசாயி குடும்பத்தில் இரண்டு நபர்களுக்கு வேலை வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×