search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் தடுப்பூசியின் பக்க விளைவால் முதல் மரணம் - அரசு குழு பதிவு செய்தது

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயதான முதியவர் ஒருவர் ‘அனாபிலாக்சிஸ்’ என்று சொல்லப்படக்கூடிய கடுமையான ஒவ்வாமை எதிர்வினையால் இறந்து இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் பக்க விளவாக ஒருவர் மரணம் அடைந்திருப்பது முதன் முதலாக அரசு குழுவால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தில் பொதுமக்களுக்கு கோவோக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

    கொரோனா வைரஸ் தோன்றிய ஒரே ஆண்டில் உருவாக்கி போடப்படுகிற இந்த தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் குறித்து ஆராய்வதற்காக தேசிய அளவில் மோசமான பாதகமான நிகழ்வுகளின் காரண மதிப்பீட்டு குழு (என்.ஏ.இ.எப்.ஐ.) அமைக்கப்பட்டது.

    இந்த குழு 31 மோசமான பாதகமான நிகழ்வுகளின் காரணத்தை மதிப்பீடு செய்து வந்தது. அதன் அடிப்படையில் ஒரு அறிக்கை அளித்துள்ளது.

    கோப்புப்படம்


    அந்த அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயதான முதியவர் ஒருவர் ‘அனாபிலாக்சிஸ்’ என்று சொல்லப்படக்கூடிய கடுமையான ஒவ்வாமை எதிர்வினையால் இறந்து இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

    இதுபற்றி இந்த குழுவின் தலைவரான டாக்டர் என்.கே.அரோரா கூறுகையில், “கடுமையான ஒவ்வாமை எதிர்வினை (பக்க விளைவு) தொடர்புடைய முதல் மரணம் இதுவாகும். இது தடுப்பூசி செலுத்திய பின்னர் 30 நிமிடங்கள் அந்த மையத்தில் காத்திருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. பெரும்பாலான ஒவ்வாமை எதிர்வினைகள் இந்த நேரத்தில்தான் நிகழ்கின்றன. உடனடி சிகிச்சை, மரணத்தை தடுக்கிறது” என தெரிவித்தார்.

    அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * பிப்ரவரி 5-ல் தடுப்பூசி போட்ட பின்னர் மரணம் அடைந்த 5 பேர், மார்ச் 9-ல் மரணம் அடைந்த 8 பேர், மார்ச் 31-ந் தேதி மரணம் அடைந்த 18 பேர் ஆகியோரது பிரச்சினைகள் ஆராயப்பட்டன.

    * ஏப்ரல் முதல் வாரத்தில் 10 லட்சம் டோஸ் தடுப்பூசிக்கு 2.7 இறப்புகளும்,. 4.8 சதவீத ஆஸ்பத்திரி சேர்க்கைகளும் நடந்ததாக தரவுகள் கூறுகின்றன.

    * மரணங்களையும், ஆஸ்பத்திரிகளில் சேர்த்தலையும் கடுமையான பாதகமான நிகழ்வுகள் என வெறுமனே புகார் அளிப்பது, தடுப்பூசியினாலேயே அது நிகழ்ந்தது என தானாக குறிப்பிட்டு விட முடியாது. ஒழுங்காக நடத்தப்பட்ட விசாரணைகள், காரண மதிப்பீடுகள் மட்டுமே நடந்த நிகழ்வுக்கும், தடுப்பூசிக்கும் இடையில் ஏதேனும் காரணமான உறவு இருக்கிறதா என்பதை புரிந்துகொள்வதற்கு உதவும்.

    * 31 மோசமான பாதகமான நிகழ்வுகள் ஆராயப்பட்டன. அவற்றில் 18 பேர் மரணத்துக்கு தடுப்பூசிதான் காரணம் என கூற முடியாது. (தற்செயலாக நிகழ்ந்துள்ளது, தடுப்பூசிக்கும் இதற்கும் தொடர்பில்லை). 3 பேருக்கு ஏற்பட்ட பாதிப்பு அவர்கள் தடுப்பூசி தொடர்பானவை என வகைப்படுத்தப்பட்டது. ஒன்று மட்டும் கவலை தொடர்பான எதிர்வினை என்றும், எஞ்சிய 2 பாதகமான விளைவுகள் வகைப்படுத்த முடியாதவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.
    Next Story
    ×