search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டுவிட்டர் படத்தின் ஒரு பகுதி
    X
    டுவிட்டர் படத்தின் ஒரு பகுதி

    உத்தர பிரதேச பா.ஜனதா டுவிட்டர் பக்கத்தில் இருந்து மோடி, நட்டா படங்கள் நீக்கப்பட்டதா?

    யோகி ஆத்தியநாத் தலைமையிலான உத்தர பிரதேச அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர பா.ஜனதா தேசிய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
    உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கொரோனா பெருந்தொற்றை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக கையாளவில்லை என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் பலமாக முன் வைக்கப்படுகிறது.

    கங்கை நதியில் நிறைய சடலங்கள் மிதந்தது, ஆதித்யநாத் அரசுக்கு தேசிய அளவில் நெருக்கடியை உண்டாக்கியது. சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதாவின் கோட்டை என கருதப்படும் இடங்களில் கூட பா.ஜனதா படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில் குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஏ.கே. சர்மாவை பா.ஜனதா தலைமை முன்னிலைப்படுத்துவதாக செய்திகள் வெளிவந்தன. ஏ.கே.சர்மா, மோடி முதல்வராக இருந்த காலம்தொட்டு அவருடன் பயணித்தவர். அவர் தற்போது பா.ஜனதாவில் இணைந்து எம்.எல்.சி.யாக உள்ளார். பிரதமரின் வாரணாசி தொகுதியில் தொற்றை கட்டுப்படுத்தும் மிக முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மோடியின் நம்பிக்கைக்குரியவரான அவர் விரைவில் உத்தர பிரதேச அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், யோகி ஆதித்யநாத் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் யோகி ஆதித்யநாத்தின் 49-வது பிறந்தநாளில் அம்மாநில அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆனால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் டுவிட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யநாத்திற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதன்மூலம் மேலிடத்திற்கும் யோகி ஆதித்யநாத்திற்கும் இடையே அதிருப்தி நிலவுவது கிட்டத்தட்ட உறுதியானது.

    மேலும், பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா, உ.பி. மாநில பா.ஜனதா தலைவர் ஆகியோர் கவர்னர் மற்றும் சபாநாயகரை சந்தித்தனர். அவர்கள் மந்திரி சபையை மாற்றியமைப்பது குறித்து பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில்தான் உத்தர பிரதேச மாநில பா.ஜனதா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தில் மோடி, நட்டா உடன் இருக்கும் படத்தை நீக்கி அவர்கள் இல்லாத புதிய படம் பதிவேற்றப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான செய்தி வெளியானது.

    டுவிட்டர் படத்தின் ஒரு பகுதி

    இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் பதிவிட்டிருந்த படமும் அதேபோன்று இருந்தது தெரியவந்தது. இதனால் மோடி படத்தை நீக்கியதாக கூறுவது தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் யோகி ஆதித்ய நாத்துக்கும், தலைமைக்கும் இடையில் மனக்கசப்பு இருந்து வருவது உண்மைதான் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    Next Story
    ×