search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாஸ் புயல் மையம் கொண்டுள்ள பகுதி
    X
    யாஸ் புயல் மையம் கொண்டுள்ள பகுதி

    அதிதீவிர யாஸ் புயல் கரை கடக்க தொடங்கியது- ஒடிசா, மேற்கு வங்காளத்தில் சூறைக்காற்றுடன் கனமழை

    புயல் தாக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    கொல்கத்தா:

    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்தது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள யாஸ் புயல், கரை கடக்கும் நிகழ்வு இன்று காலை தொடங்கியது. ஒடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதியில் பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே தம்ரா துறைமுகத்தின் வடக்கு மற்றும் பாலசோரின் தெற்கு பகுதியருகே நண்பகல் கரை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    புயல் கரை கடக்கும்போது மணிக்கு 130 கி.மீ. முதல் 140 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

    புயல் தாக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் மழை

    புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் காற்றுடன் மழை பெய்கிறது. 


    புயல் நெருங்கி வருவதால் பாலசோர் மாவட்டத்தின் சந்திபூர், பாரதீப், தம்ரா ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. 
    Next Story
    ×