search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய புதிய இணையதளம் - ஜூன் 7-ந்தேதி செயல்பாட்டுக்கு வருகிறது

    புதிய இணையதளத்துக்கு மாறும் பணிகளுக்காக தற்போது உள்ள இணையதளம் ஜூன் 1-ந்தேதி முதல் 6-ந்தேதிவரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம், ஜூன் 7-ந்தேதி செயல்பாட்டுக்கு வருகிறது.

    மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.

    வருமான வரி செலுத்துபவர்கள், தங்களது தனிநபர் வருமான வரி கணக்கையும், வணிகம் தொடர்பான வருமான வரி கணக்கையும் இதில் தாக்கல் செய்து வருகிறார்கள்.

    மேலும், வருமான வரித்துறையிடம் சந்தேகம் எழுப்புவதற்கும், ரீபண்ட் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பவும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல், வருமான வரித்துறையினரும் வரி செலுத்துவோரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், நோட்டீஸ் அனுப்பவும், மேல்முறையீடு, அபராதம், மதிப்பீடு போன்றவற்றில் இறுதி உத்தரவு பிறப்பிக்கவும் இந்த இணையதளத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில், இதற்கு பதிலாக www.incometaxgov.in என்ற புதிய இணையதளத்தை வருமான வரித்துறை தொடங்குகிறது. ஜூன் 7-ந்தேதி இது பயன்பாட்டுக்கு வருகிறது. இது, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    புதிய இணையதளத்துக்கு மாறும் பணிகளுக்காக தற்போது உள்ள இணையதளம் ஜூன் 1-ந்தேதி முதல் 6-ந்தேதிவரை மூடப்படும். அந்த நாட்களில் அந்த இணையதளத்தை வரி செலுத்துபவர்களோ, வரித்துறை ஊழியர்களோ பயன்படுத்த முடியாது.

    புதிய இணையதளத்துக்கு பழகிக்கொள்ள வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் அளிக்கும்வகையில், அதிகாரிகள் தங்களது விசாரணை உள்ளிட்ட பணிகளை ஜூன் 10-ந்தேதியில் இருந்து தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×