search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய 4 இலக்க ரகசிய எண் அறிமுகம்

    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு கோ-வின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய 4 இலக்க ரகசிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

    புதுடெல்லி:

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர் ‘கோ-வின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதில் பதிவு செய்தவர்களுக்கு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த நாளில் சம்மந்தப்பட்டவர்கள் குறிப்பிட்ட மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    45 வயதை கடந்தோர் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்யாமல் நேரடியாக சென்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும். ஆனால் 18 முதல் 44 வயதுக்குட்பட்டோர் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்த சிலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்லாவிட்டாலும், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தவறான தகவல் வந்துவிடுகிறது.

    மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்துபவர், தடுப்பூசி செலுத்திக் கொண்டவரின் விவரத்திற்கு பதிலாக வேறு நபர்களின் விவரங்கள் உள்ளீடு செய்துவிடுவதால், இந்த தவறு நிகழ்வது கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு கோ-வின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய 4 இலக்க ரகசிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோப்புப்படம்

    தடுப்பூசிக்காக முன்பதிவு செய்து, தகவல் பெற்றும் வராதவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இது தகவல்கள் சேகரிப்பு முறையில் ஏற்பட்டுள்ள குறைதான்.

    இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தடுப்பூசிக்காக முன்பதிவு செய்பவர்களுக்கு 4 இலக்க பாதுகாப்பு ரகசிய எண் அறிமுகம் செய்யப்படுகிறது.

    கோ-வின் இணையதளத்தில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யும் போது 4 இலக்க ரகசிய எண் அனுப்பி வைக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான நாள், நேரம் போன்ற தகவல்களை பெற்றவர்கள் மையத்திற்கு செல்லும்போது அந்த 4 இலக்க எண்ணை தெரிவிக்க வேண்டும்.

    அப்படி தெரிவிப்பவர்களுக்கு தடுப்பூசி போட்டதற்காக வழங்கப்படும் மின்னனு சான்றிதழில் அந்த 4 இலக்க எண் இடம் பெறும்.

    மேலும் மையத்தில் தடுப்பூசி போடுபவர்களுக்கு இந்த 4 இலக்க ரகசிய எண் தெரியாது. மையத்துக்கு சென்றால் அங்கிருப்பவர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் பயனாளர்களிடம் 4 இலக்க எண்ணை கேட்பார்கள். அதை கூறிய பிறகு சரிபார்த்து தடுப்பூசி போடுவார்கள்.

    இந்த பாதுகாப்பு முறை மூலம் தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தவறான தகவல் வராது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×