search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    சொத்து விவரங்களை கொண்ட இ-அட்டை வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    நாட்டு மக்களுக்கு அவர்களது சொத்து விவரங்களை கொண்ட இ-அட்டைகள் வழங்குவதற்காக மத்திய அரசு ‘ஸ்வாமித்வா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
    சண்டிகார்:

    சொத்து விவரங்களை கொண்ட இ-சொத்து அட்டை வினியோகத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.

    நாட்டு மக்களுக்கு அவர்களது சொத்து விவரங்களை கொண்ட இ-அட்டைகள் வழங்குவதற்காக மத்திய அரசு ‘ஸ்வாமித்வா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி அரியானாவில் உள்ள 1,308 கிராம மக்களுக்கு வீடுகளுக்கான சொத்து அட்டைகளை வழங்கும் விழா, காணொலி காட்சி வழியாக நேற்று நடந்தது.

    இ-சொத்து அட்டை - பிரதமர் மோடி


    டெல்லியில் இருந்தவாறு இந்த திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு சொத்து விவரம் கொண்ட இ-அட்டைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் 7 மாநிலங்களில் உள்ள 5,002 பஞ்சாயத்துகளை சேர்ந்த 4.09 லட்சம் பேருக்கு இ-சொத்து அட்டை வழங்கப்பட்டது.

    விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, கொரோனாவை கையாள்வதில், குறிப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பஞ்சாயத்துகளின் பங்கை வெகுவாக பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் யாராவது முதலில் வெற்றி பெறப்போகிறார்கள் என்றால் அது இந்தியாவின் கிராமங்கள்தான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், நாட்டுக்கும், உலகத்துக்கும் வழிகாட்டுவார்கள்.

    இப்போது கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் கேடயமாக தடுப்பூசியை கொண்டுள்ளோம். கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் தடுப்பூசி போடுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த கடினமான கால கட்டத்தில் ஏழைமக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு மே, ஜூன் மாதங்களில் ரேஷன் மூலம் இலவச உணவு தானியம் வழங்க தீர்மானித்தது. ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தால், 80 கோடிப்பேர் பலன் அடைவார்கள்.

    ஒரு குடும்பம் கூட பட்டினி கிடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, நமக்கு உள்ளது.

    எல்லா கொள்கைகளிலும், முன் முயற்சிகளிலும் கிராமங்களை மத்திய அரசு கருத்தில் கொள்கிறது. நவீன இந்தியாவின் கிராமங்கள் திறமையானதாகவும், தன்னம்பிக்கை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சி.

    ஸ்வாமித்வா திட்டத்தின்கீழ் 4.09 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு இ-சொத்து அட்டை வழங்கப்படுகிறது.

    இதுவரை இல்லாத வகையில் பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு ரூ.2.25 லட்சம் கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. பஞ்சாயத்துகள் புதிய உரிமைகளை பெறுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×