search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனித நீராடும் பக்தர்கள்
    X
    புனித நீராடும் பக்தர்கள்

    ஹரித்வாரில் 30 சாதுக்களுக்கு கொரோனா- நோய் பரப்பும் மையமாக மாறிய கும்ப மேளா

    எந்தவித விழிப்புணர்வோ, தொற்று குறித்த அச்சமோ இன்றி புனித நீராடுவதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    ஹரித்வார்:

    உத்தரகாண்டின் ஹரித்வாரில் நடைபெற்றுவரும் கும்ப மேளா திருவிழா, கொரோனா பரப்பும் மையமாக மாறி வருகிறது. 670 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் கும்ப மேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களால் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. 

    புனித நீராடலுக்கு உகந்த முக்கிய நாட்களான சோமவதி அமாவாசை (ஏப்ரல் 12-ந்தேதி), மேஷ் சங்கராந்தி (நேற்று முன்தினம்) ஆகிய 2 நாட்களில் மட்டும் சாமியார்கள், சாதுக்கள், பக்தர்கள் என 48 லட்சத்துக்கு அதிகமானோர் புனித நீராடியுள்ளனர். எந்தவித விழிப்புணர்வோ, தொற்று குறித்த அச்சமோ இன்றி புனித நீராடுவதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    புனித நீராடும் பக்தர்கள்

    இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய பாதுகாப்பு படையினராலும் முடியவில்லை. அத்துடன் பெரும்பாலான சாமியார்கள் மற்றும் சாதுக்கள், கொரோனா பரிசோதனைக்கும் மறுப்பு தெரிவித்தனர்.

    இதன் விளைவாக அங்கு கொரோனா தொற்று அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு கடந்த 10 முதல் 14-ந்தேதி வரை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,701 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கானோரின் முடிவுகள் வர வேண்டியிருக்கின்றன. இதனால் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

    இதற்கிடைய கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 
    சாதுக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் விரைந்துள்ளனர். நாளை முதல் இப்பணி மேலும் விரைவுபடுத்தப்படும் என தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். இந்த பரிசோதனையின் முடிவில் மேலும் பல சாதுக்களுக்கு தொற்று உறுதி செய்யப்படலாம் என தெரிகிறது.
    Next Story
    ×