search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தண்டவாளத்தில் தென்னை மரத்தை போட்டு சென்னை ரெயிலை கவிழ்க்க சதி- 2 வாலிபர்கள் கைது

    தண்டவாளத்தில் தென்னை மரத்தை போட்டு சென்னை ரெயிலை கவிழ்க்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் வர்க்கலா அடுத்துள்ளது எடவயல். இங்கு இரட்டை ரெயில் தண்டவாளம் செல்கிறது. நேற்று சென்னையில் இருந்து குருவாயூருக்கு நாகர்கோவில் வழியாக செல்லும் ரெயில் புறப்பட்டது.

    இரவு 11.30 மணியளவில் எடவயல் அருகே ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் ராட்சத தென்னை மரத்தை 2 ஆக அறுத்து போடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த ரெயில் டிரைவர் அதிர்ச்சியடைந்து ரெயிலை நிறுத்த முயன்றார்.

    ஆனால் ரெயில் சென்ற வேகத்தில் ஒரு தென்னை மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் ரெயிலின் முன்பக்க கம்பியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துசெல்லப்பட்டது. மற்றொரு மரம் தண்டவாளத்தில் இருந்து நகர்ந்து வெளியே விழுந்தது.

    இதனையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதை அறிந்து பயணிகள் அச்சம் அடைந்தனர். இது குறித்து ரெயில் டிரைவர் கொல்லம் ரெயில்வே போலீஸ் அதிகாரி ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

    போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். அப்போது ரெயிலின் கடைசி பெட்டி அருகே 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனையடுத்து எர்ணாகுளம் டி.எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    வாலிபர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சாஜி (வயது 27) மற்றும் பிஜூ (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. விசாரணையில் தண்டவாளத்தில் தென்னை மரத்தை வெட்டி சாய்த்து போட்டதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து வாலிபர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ரெயிலை கவிழ்க்க சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ரெயிலை எதற்காக கவிழ்க்க முயன்றனர் என்பது குறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனையடுத்து சென்னை ரெயில் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனையடுத்து இந்த வழித்தடத்தில் சென்ற அனைத்து ரெயில்களும் தாமதமாக சென்றன.

    Next Story
    ×